உறக்கம் கலைந்த
நள்ளிரவு நேரத்தில்
உணர்வு பொங்க
எழுதப்பட்டவையாக இருக்கலாம்!
முகச்சவர நுரைகள்
முழுவதுமாக மழிக்கப்படுமுன்
சவரக்கத்தியை வீசிவிட்டு
அவசர அவசரமாக
எழுதப்பட்டவையாக இருக்கலாம்!
"சாப்பிடும்போது அப்படியென்ன சிந்தனை?"
என்ற மனைவியின்
சிடுசிடுப்பிற்கு நடுவே
பாதியில் கைகழுவி எழுதிய
ஏதோவொரு கவிதையாக இருக்கலாம்!
அவ்வப்போது கிடைக்கும்
அலுவல் இடைவெளிகளில்
ஆர்வம் பொங்க எழுதப்பட்ட சில
அலங்கார வார்த்தைகளாக இருக்கலாம்!
இப்படியாக
பொழுதுகளைப் பொருட்படுத்தாது
எழுதுகிறேன் என்ற பெயரில்
உடலியக்க சுழற்சியினை
உடைத்து நொறுக்கியதன் பயனாய்..
கண்ணெரிச்சல் ஒருபுறம்!
காதடைக்கும் இருபுறம்!
வலி சுமக்கும் வலக்கரம்!
தலைக்குள் ஏதோ வலம்வரும்!
நிற்கவும் இயலா நிலைவரும்!
என
இயல்பை மீறிய
இத்தனை வலிகளும்
விரல்கள் சிந்திய
வியர்வைத் துளிகளும்
இருந்த இடம் தெரியாமல்
இறந்து போகின்றன..
இலக்கிய விரும்பிகள் சிலரின்
இரட்டை இலக்க
விருப்பக் குறியீடுகளாலும்!
வெள்ளையுள்ளங்கள் சிலவற்றின்
வெளிப்படையான பாராட்டுகளாலும்!
- நிலவை பாா்த்திபன்

நல்ல கவிதை.
ReplyDeleteஎனது வலிகளையும் பெறுகின்ற பாராட்டுகளையும் நினைவூட்டி உற்சாகம் தருகிறது உங்கள் கவிதை. நன்றி.