Monday, November 03, 2025

அழுக்கொன்றும் பெரிதில்லை


 

மண்ணில் தவறவிட்ட
ரொட்டியொன்றை
மடியில் துடைத்து
உண்ணத் தொடங்கும்
அந்தச் சிறுமியை
முகம் சுளித்தபடி
கடந்து செல்கிறார்கள்
முன்னும் பின்னுமாய் சிலர்!
எப்படித் தெரியும் அவர்களுக்கு
அது அவளின்
எத்தனை நாள் சேமிப்பென்று?
தன் பாதிப் பயணத்தில்
காய்ந்துபோன
கண்ணீர்த்துளியொன்றின் உப்புக்கறையை
அவளது கன்னக் கதுப்பில் கண்டிருந்தால்
ஒருவேளை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்
அவளது வற்றிய வயிற்றைப்
பற்றியிழுக்கும்
பசி நெருப்பின் தீவிரத்தை!
சோர்வு சுமந்த
அவள் விழிகளின் அயர்வை
சற்றேனும் உற்றுநோக்கியிருந்தால்
அவர்கள் அறிய நேர்ந்திருக்கும்
அவளது அப்போதைய
அவசரத் தேவையை!
ஏது அவர்களுக்கு நேரம்
அவளது ஏழ்மையின் ஆழத்தை
எட்டிப் பார்ப்பதற்கெல்லாம்?
அவர்களது அருவருப்புகளை
அலட்சியம் செய்யும் சூத்திரத்தை
வறுமை அவளுக்கு
வகுப்பெடுத்திருக்கிறது!
எனவே
எதற்காகவும் இடைநிற்கப்போவதில்லை
அவள் பசியாறும் அந்த வேகம்!
ஒருவேளை
இரக்கம் கொண்ட யாரேனும்
அவளுக்கு இன்னொரு ரொட்டியை கையளித்தாலும்
தூசுபட்ட அந்த ரொட்டியை
தூக்கியெறியப்போவதில்லை அவள்!
ஏனெனில்
அவளைப் பொறுத்தவரை
அழுக்கொன்றும் பெரிதில்லை
அடுத்த வேளை பசியைவிட!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome