பணி ஓய்வு பெறுகிறார் இன்று
என் பக்கத்து
அலுவலகத்தில் ஒருவர்!
"பம்பரமாய்ச் சுழன்றுழைத்த
நம்பிக்கைக்குரிய உழைப்பாளி"
போன்ற சம்பிரதாய வார்த்தைகளால்
வந்திருந்தவர்கள் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்
அந்த அம்பத்தியெட்டு வயது மனிதரை!
"இவர் கால்வைத்த பின்புதான்
வேர்விட்டு வளர்ந்தது
இந்த அலுவலகம்" என்று
சால்வையணிவித்துக்கொண்டே
சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்
சஃபாரி அணிந்திருந்த அந்த
உயரதிகாரி!
சிறு சிறு தவறுகளுக்காக
சிடு சிடுவென எரிந்துவிழுந்த
அதே மேலதிகாரிதான்
சிரித்தபடி அவரைச்
சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்!
இன்னும் சில நிமிடங்களில்
இனிதே நிறைவுற்றுவிடும் விழா!
கழுத்தில் அணிந்த மாலையின் பாரம்
அதைக் கழற்றியவுடன்
காணாமல் போய்விடும்!
ஆனால் மனதில் தொற்றிக்கொண்ட
ஒரு பாரம் இனி
மெளனமாகத் தொடரும்!
அனுதினம் அவரைச்
சுமந்த நாற்காலி
இனி அடுத்து ஒருவரைச்
சுமக்க ஆயத்தமாகியிருக்கும்!
அவர் தலைக்குமேல் சுழன்ற மின்விசிறி
இனி வேறொருவரின்
வியர்வை உலர்த்த
தயாராகியிருக்கும்!
கோப்புகளே கதி என்றிருந்தவரை
மூப்பு வந்து
முழுதாய் விடுவித்திருக்கிறது!
நேற்றுவரை பேனா பிடித்த கரத்தில்
இன்று வெறுமை புகுந்து
விரல் பிடித்திருக்கிறது!
வாசலில் அமர்ந்திருக்கும்
அந்தக் காவலாளியிடம்
"நாளை பார்க்கலாம்"
என்று நாள்தோறும்
சொல்லிச் செல்லும் வழக்கம்
இனி வாய்க்கப்போவதில்லை அவருக்கு!
மாலை நேரத்தில்
தேநீர் கொண்டுவரும் பையனிடம்
ஆறிப்போன தேநீருக்காக
அலுத்துக்கொள்ளவேண்டிய அவசியமும்
இனி இருக்கப்போவதில்லை அவருக்கு!
அலறும் அலாரச்சத்தம் ஏதுமின்றி
இனி அமைதியாகவே விடியப்போகின்றன
அவரது அதிகாலைகள்!
இதுநாள்வரை இயந்திரகதியில்
புரட்டப்பட்ட செய்தித்தாள்களில்
இனி இரங்கல் செய்திகள்கூட
இருமுறை வாசிக்கப்படும்!
"அப்பா... ஆபீஸ் போற வழியில
என்ன பஸ் ஸ்டாப்புல
இறக்கி விட்றுங்க"
"ஏங்க டிபன் பாக்சுல
தயிர் சாதம் வச்சிருக்கேன்,
மதியம் திறக்கும்போது
பாத்து திறங்க"
"வேலை முடிய லேட் ஆச்சுன்னா
கால் பண்ணுங்க"
இப்படியான உரையாடல்கள்
இனி ஒருபோதும்
அவர் செவிகளைச்
சென்றுசேரப் போவதில்லை!
நதியென ஓடிக்கொண்டிருந்த
அவரது பகல்பொழுதுகள்
நத்தையென நகர்வதாக
நித்தம் இனி அவர் உணரக்கூடும்!
இவ்வாறாக நான்
எண்ணிக் கொண்டிருக்கையில்
இறங்கி நடந்து வருகிறார்
எனை நோக்கி அவர்!
இப்போது கைகுலுக்கி முடித்து
கடைசியாக நான் அவருக்கு
சொல்ல வேண்டியது
பாராட்டுகளா? அல்லது ஆறுதலா?
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome