இருட்டிற்குப் பயந்து
இரவெல்லாம் அழுது தீர்க்கிறது
மெழுகுவர்த்தி!
தழும்பத் தழும்ப நெய்யூற்றியும்
தணியவில்லை தாகம்!
இருளள்ளிக் குடிக்கிறது
இரவெல்லாம் அந்த தீபம்!
விட்டு விலகிச்சென்ற
வெளிச்சத்தின் இடங்களை
இட்டு நிரப்புகிறது இருட்டு!
அது தொட்டுத் தழுவிச் செல்லும்
எட்டு திசைகளிலும்
பற்றிப் படர்கிறது கருப்பு!
இருளின் பார்வையில்
பயங்கரமானது இந்தப் பகல்!
இருளென்பது வேறல்ல
இரவு ரோஜாவின் இதழ்!
இரக்கமற்ற விளக்குகளால்
இறந்து போகிறது இருள்!
விரும்பி அது வேண்டுவதெல்லாம்
விளக்கணைக்கும் ஒரு விரல்!
இருளூற்றி நிரப்பிய
இரவுக் கோப்பை
காலியாகிவிடுகிறது காலையில்!
நிலையற்ற சிலர் வாழ்வில் இருளது
நிரந்தரமாய் ஒரு மூலையில்!
இருளிருக்கும் தைரியத்தில்தான்
இரவைத் தேர்ந்தெடுத்து அழுகின்றன
சில விழிகள்!
இறுதிவரை கவனிக்கப்படுவதில்லை
இரவில் சிந்தப்படும் சில
கண்ணீர்த் துளிகள்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome