"நல்லாத்தானே இருந்தாரு
தீடிர்னு எப்படி?"
"நேத்து கூட பேசினேனே
என்ன ஆச்சு திடீர்னு?
"அவரோட சிரிச்ச முகம்தான்
நினைவுக்கு வருது!"
"தங்கமான மனுசன்!"
இப்படி புகழுரை சுமந்த
பல புலம்பல்கள்!
"ஆத்மா சாந்தியடையட்டும்"
"ஆழ்ந்த அனுதாபங்கள்"
இப்படி இயந்திரத் தனமான பல
இரங்கல் செய்திகள்!
என.. சம்பவிக்கும்
அனேக மரணங்களைச் சுற்றியும்
சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளப்படும்
இவ்வார்த்தைகள் போலவே
இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வில்
இடைநுழைந்து,
தன் இருப்பை
இயல்பு மாறாமல் பதிவுசெய்துவிட்டு
சலனமின்றிக் கடந்து செல்கிறது மரணம்!
நம்முடனேயே பயணிக்கும் போதிலும்
நம்ப இயலாதவைகளாகவே
நம்பப்படுகின்றுன
நம்மால் சில மரணங்கள்!
தனக்கான தருணம் வரும்வரை
தலைமறைவாக இருந்தாலும்
நம் தலைக்குள் எங்கோதான்
தங்கியிருக்கக்கூடும் இந்த மரணம்!
எதிர்பாரா மரணம் என்று
எதுவுமில்லை இங்கு!
எதிர்காலப் பிணங்களுக்கு
எதற்கு பயம் இன்று?
பிணக்கோலத்தில் தனை
நினைத்துப் பார்க்காத ஒருவன்
பிறக்கவில்லை இன்னும் இப்பிரபஞ்சத்தில்!
பிணைக்காலத்து
கைதியின் நிலைதான்
அனைவருக்குமே இவ்வுலகத்தில்!
மூச்சடங்கிய பின்பான
மோட்சம் பற்றிய கவலை இங்கு பலர்க்கு!
வாழும் வாழ்க்கையே நரகமானதால்
மூச்சடங்குதலே மோட்சம் சிலர்க்கு!
கேள்விக் குறிகளும் ஆச்சரியக் குறிகளும்
நிறைந்த இவ்வாழ்வில்
முற்றுப் புள்ளிகளின்
முக்கியத்துவம் உணர்தலே
முற்போக்கின் முதல் படி!
ஆச்சரியக் குறிகளோ கேள்விக்குறிகளோ
அவற்றிற்கான அங்கீகாரம்கூட
அடியில் வைக்கப்படும்
ஒரு புள்ளியில்தானே அடங்கியிருக்கிறது?
ஆகவே...
நாம் இயங்கியடங்கும் இறுதிப்புள்ளியை
இயற்கையின் முத்தக் குறியீடென
ஒத்துக்கொள்வோம்!
அதுவரை கல்லறைப் பயணம் பற்றி
கவலைப்பட ஒன்றுமில்லையெனக் கற்றுக்கொள்வோம்!
- நிலவை பாா்த்திபன்

நல்ல அறிவுரை.
ReplyDeleteதெளிந்த இலகு நடை.
வாழ்க உங்கள் எழுத்தும் நீங்களும்.