சாத்தியே கிடக்கின்றன
என் சாளரக் கதவுகள்!
கடைசியாக நான் கதவு திறந்த நாள்
நிச்சயமாக என் நினைவில் இல்லை!
வெறுப்பவன் நானல்ல!
காலை வெயிலையோ
கார்காலக் குளிரையோ
இரசிக்காத ஆளல்ல!
தூசு கொசுக்கள்,
தூரல் பட்டுத் தெறிக்கும் துளிகள்
என எதையும் பொருட்படுத்தாது
எப்போதும் திறந்திருந்த
கதவுகள்தான் அவை!
மழைமேகம் எழுதும்
மரபுக் கவிதைகளை
மண் மனத்தோடு என்
மனம் பருகிய நிகழ்வுகள்
இச்சாளரத்தின் வழிதான்
சாத்தியமானது எனக்கு!
செவ்வக வடிவில்
செவ்வானம் கண்டு இரசித்தது,
எதிர் வீட்டின் தாளிப்பு ஓசையால்
எனது வயிறு பசித்தது
எனச் சின்ன சின்ன சந்தோசங்கள் சில
இச்சன்னல் வழிதான் கிடைத்தது எனக்கு!
சண்டை சச்சரவுகள்,
சங்கிலித்தொடர் சங்கடங்கள்
எனச் சலனப்பட்டுக் கிடந்த மனதை
இச்சாளரம் திறந்த பொழுதுகள்
சாந்தப்படுத்தியிருக்கின்றன!
புதுப் பாடல் ஒன்றுக்காக
புலப்படாதிருந்த சில புரட்சி வரிகள்
பூட்டியிருந்த இக்கதவு திறந்தபோதுதான்
புகுந்துகொண்டது எனக்குள்!
அவ்வளவு ஏன்?
"திரைச்சீலை திறக்கப்படாத இல்லங்கள்
சிறிய அளவிலான சிறைச்சாலைகள்"
என்ற கவிதை எழுதியதுகூட
இச்சாளரக் கம்பிகளில்
சாய்ந்திருந்த ஒரு சாயங்கால வேளையில்தான்!
இவ்வளவிற்குப் பின்பும்
இறுகச் சாத்தப்பட்டிருக்கின்றன
இன்றளவில் இச்சாளரங்கள்!
ஏன் என்று கேட்கும் மனைவியிடம்
எப்படிச் சொல்வது?
எதிர் வீட்டு மாடியில்
புதிதாய் குடி வந்தவளுக்கு
என் பழைய காதலியின் சாயல் என்பதை!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome