குருங்கவிதைகள்

வெங்காயம் உரிக்கவா?
வேறு ஆளைப் பார்!
துணி காயப்போடவா?
தூரம் போ!
கடைக்குப் போகவா?
கண்டிப்பாய் முடியாது!
அழைப்பு மணிச் சத்தமா?
ஆள் யாரென்று நீயே பார்!
பையன் புத்தகப்பையா?
பார்த்து நீயே எடுத்துக்கொடு!
இதோபார்...
மறுபடி மறுபடி வந்து தொந்தரவு செய்யாதே,
மகளிர் தினக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!

- நிலவை பாா்த்திபன்


கருவறை மூலவர்
அமைதியாய் காட்சி தரும்போது
வெளியில் நிற்கும் காவல் தெய்வங்கள் உக்கிர கோலத்தில் இருப்பது ஏன் என்றான் மகன்.
"கருவறையில் நுழைய இடமில்லையென்றால்
கடவுளுக்கும் கோபம் வரும்"
என்றேன் நான்!

- நிலவை பாா்த்திபன்


என்னதான் கண்ணுக்குள் வைத்து
கவனித்துக்கொண்டாலும்
நாம் உடைந்து அழும் ஒவ்வொருமுறையும்
நமைப் பிரிந்து செல்லவே பிரியப்படுகிறது
நன்றிகெட்ட இந்த கண்ணீர்!

- நிலவை பாா்த்திபன்


விருந்து மண்டபத்தில்
விழுந்து சிதறிய பருக்கைகளை நோக்கி
கட்டுக்கோப்பான வரிசையில்
கட்டெறும்புகள்!
அடுத்த பந்தியில் இடம் பிடிக்க
அடித்துப் பிடித்தபடி
ஆறறிவு மனிதர்கள்!
உண்மையைச் சொல் மனிதா
உனைவிட எறும்பினம் சிறிதா?

- நிலவை பாா்த்திபன்


தற்கொலை செய்யப் போனவனை
தடுத்து நிறுத்தி
கோழைத்தனத்தின் உச்சம் அதுவென
கோடிட்டுக் காட்டினேன்!
முட்டாள்தனம் அதுவென்று அவன்
மூளைக்கு விளக்கினேன்!
தலை குனிந்து அழுதவனைத்
தட்டிக் கொடுத்துத் தன்னம்பிக்கையூட்டினேன்!
மறுநாள் வந்து சேர்ந்தது அவன்
மரணித்த செய்தி!
தற்கொலையெனும் தவறான முடிவெடுத்த
குற்ற உணர்வில் சாவதாகக்
குறிப்பெழுதி வைத்திருந்தானாம்!

- நிலவை பாா்த்திபன்


முன்தலையில் முடிகொட்ட வைத்தது மூப்பு!

வேலையிழந்தது வெகுநாளாய் உழைத்த சீப்பு!

- நிலவை பாா்த்திபன்


நாளை நீ!

மிதித்தனைத்தபோது சிரித்தபடி
சொன்னது சிகிரெட்
"இன்று நான்....நாளை நீ"
எழுதியவர் : நிலவை.பார்த்திபன்

பொய்
பொய்யைச் சுமந்து நிற்பதாக
பொழுதெல்லாம் புலம்பித் தீர்த்தது
கிழிக்க மறந்த தேதிகளை 
கீழ் வயிற்றில் தாங்கியபடி
என் வீட்டு நாட்காட்டி!

உறக்கம் 
உறக்கமற்ற இரவுகளை 
உருப்படியாகக் கழிப்பதெப்படி 
என்ற சிந்தனையின் 
ஏதோ ஒரு புள்ளியில்தான் 
எனை மறந்து உறங்கிப்போகிறேன் 
ஒவ்வொரு முறையும்!

விலங்கு  
காட்டு விலங்குகளின் எண்ணிக்கை 
கனிசமாகக் குறைவதை ஈடுகட்டத்தான் 
சில விபரீத மனிதர்கள் 
விலங்குகளாக மாறுகிறாா்கள் போலும்!

தேடல் 
ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தேடியாகிவிட்டது. 
இனி மீதமிருப்பது 
நான் தொலைத்த அந்த 
ஒரு இடமாகத்தான் இருக்கக்கூடும்!

வண்ணக் கனவுகள்  
கனவுகள் கருப்பு வெள்ளையால் நிரம்பியவை
என எங்கோ படித்ததாகச் சொன்ன நண்பனிடம்
கடைசிவரை நிரூபிக்க இயலவில்லை
அடிக்கடி என் கனவில் வரும்
அழகான வானவில்லின் நிறங்களை!

வியர்வை 
மின் விசிறிக்கும் வியர்த்து விடுகிறது
முன் இருப்பது நீயெனும் பட்சத்தில்!

நிர்வாணம் 
கர்ப்ப மேகங்ள் 
கனமழையைப் பிரசவித்துவிட்டு
காணாமல் போனபின்
நீலவானின் நிர்வாணம்கூட
நிச்சயமாய் அழகுதான்!

பூக்களைப் பறிக்காதீர்கள்

"பூக்களைப் பறிக்காதீர்கள்"
என்ற பலகையைக் காட்டி
நீ பறித்த பூவை
உன்னிடமிருந்து பறித்த
தோட்டக்காரனிடம் நான்
சொல்ல நினைத்தது ஒன்றுதான் 

"பூக்களைப் பிரிக்காதீர்கள்"


புரளி

பூக்கடை வீதிப்பக்கம்
போகாதே என்றால் புரிந்துகொள்!
கட்டி வைத்த மாலைகளில் ஒன்று
கால் முளைத்து நடப்பதாக
புரளி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்
பூக்கடைக்காரர்கள்!

மருதாணி

மருதாணி கைச்சிவப்போடு
மகிழ்ச்சியாய் உலவுகிறாய்!
உன்னிலும் சிவந்து நிற்கிறது
நீ தொட்டுப் பறித்த
மருதாணிச் செடி!

ஒற்றை மேகம்

ஒற்றை மேகம் மட்டும்
இறங்கியதெப்படி
உன் வீட்டு மொட்டை மாடியில்?
ஓ... நீ தலை துவட்டுகிறாய்!

சிரிப்பு

பேருந்தினுள் நடத்துனர்
உனைக் கடந்து செல்கையில்
சிரித்துப் பேசாதே தோழிகளிடம்
சில்லறையில் சில சிதறிவிட்டதாக
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போகிறார் பாவம்!

பூச்செடி

பூங்காவிலிருந்து வெளியே வருகிறாய்!
ஏதோ ஒரு பூச்செடி
குறைவதாக நினைத்து
எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
தோட்டக்காரர்!

மின்னூட்டம்

அடுத்த கனமே
சார்ஜ் ஏறிவிடுகிறது
அலைபேசியில்..
நீ எடுத்துப் பேசும்
எல்லா நேரமும்!

இடி

நீ அச்சத்தோடு
அர்ஜுனா சொல்லும் அழகிற்காகவே
அடிக்கடி வந்துபோகிறது இடி!

வாடிய பூக்கள்

உன் எதிர்வீட்டுத் தோட்டத்தில்
எல்லா பூக்களும் வாடியிருக்கின்றன!
நீ ஊருக்குப் போயிருக்கிறாயா?

காத்திருந்த வானவில்

வழக்கம்போல் நீ
இரசிக்க வருவாயென
வந்து காத்திருந்த வானவில்
மொட்டை மாடியில் உனைக் காணாது
ஒற்றை நிமிடத்தில் கலைந்துபோனது!

இஞ்சி

இஞ்சி தின்றாலும்
இனிக்கவே செய்கிறது
நெஞ்சத்தில் இருப்பது
நீ என்பதால்!

இன்னும் ஆழமாக

இன்னும் ஆழமாக
வேரூன்றிப் போனாய் இதயத்தில்
இதுவரை உனை
மறக்க எடுத்த
இரண்டொரு முயற்சியிலும்!

கண்ணாடி

நீ முகம் பார்ப்பதற்கு
முந்தைய நிமிடங்களில்
தன்னை அழகுபடுத்திக்கொள்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி!

கவிதைகள்

ஒரு புத்தகம் வெளியிடத் தேவையான
மொத்தக் கவிதைகளையும்
எழுதி முடித்துவிட்டேன்
புதிதாய் வாங்கிய நாய்க்குட்டியுடன் நீ
கொஞ்சி விளையாடியதைப் பார்த்துக்கொண்டிருந்த
கொஞ்ச நேரத்தில்!

கோலம்

அரிசி மாவு கோலமிட்டுவிட்டு
அருகில் நின்று பார்க்கிறாய்
கோலத்தை விட்டுவிட்டு
உன்னையே மொய்க்கின்றன
எறும்புகள்!

ஓட்டு

நீ ஓட்டுப்போடும்போதுதான்
ஓட்டுப்பதிவு எந்திரமே
வெற்றி பெறுகிறது!

கோவில்

நாத்திகன் எனக்கும்
கோவில் புகும் ஆசை வந்தது
வாசலில் உன் காலணி கண்டபோது!

நாய்க்கு நன்றி

முன்பொருமுறை
எனைக் கடித்த நாய் என்றபோதும்
இன்றைக்கு எலும்பு வாங்கிப் போட்டேன் அதற்கு!
நேற்று அது குரைத்தபோதுதானே
இறுகப் பற்றிக்கொண்டாய்
என் இடதுகரத்தை?

தற்கொலை

குடைபிடித்து நடக்கிறாய்...
உனைத் தொடமுடியாத ஏக்கத்தில்
தரையில் விழுந்து
தற்கொலை செய்துகொள்கின்றன
மழைத்துளிகள்!

தென்றல்

உனக்கென்ன? ஜன்னல் சாத்திவிட்டு
சாதாரணமாய் சென்றுவிட்டாய்!
உனைத் தேடி வந்த தென்றல்
கதவில் மோதியே தன்
கதை முடித்துக்கொண்ட கதை
தெரியுமா உனக்கு?

அரை நிர்வாணம்

காயப்போட்ட துணிகளில்
பாதியை எடுத்தபிறகுதான் உணர்ந்தேன்
ஆடையிழந்த கொடி
அரை நிர்வாணமாய் இருப்பதை!

உதட்டுச்சாயம்

மூடி திறந்ததும் உன்
முக அழகில் மூர்ச்சையாகி
உன் இதழ் ஸ்பரிசத்தில்
இனிப்பேறிக் கரைகிறது
உணர்ச்சியற்ற உன் உதட்டுச்சாயம்!

வர்ணிப்புகள்

வெறும் வர்ணிப்புகள் மட்டுமே
என் காதல் என
நிர்ணயித்துவிடாதே!
மரணித்து நான் போயினும்
மறு பிறவியிலும் தொடரும்
மங்கை உன்மீதான
மகத்தான என் காதல்!

என்ன செய்யப் போகிறாய்

வெடித்து அழ நேரம் பார்க்கிறது
வேதனையில் வெதும்பிய மனம்!
தடுக்கிறது அதைத் தற்காலிகமாய்
தன்மானமும் தடித்து வளர்ந்த மீசையும்!
இயன்றவரை இதயம் நொறுக்கி
எனை வியந்து போகச் செய்த
என் விதியே!
இன்னும் என்னவெல்லாம்
செய்யக் காத்திருக்கிறாய்
எஞ்சியிருக்கும் என் நெஞ்சுரமும்
பஞ்சாய் பறக்கும்படி?

இடைவேளை

தன்னம்பிக்கை பற்றி
தரமான சில கவி படைத்தும்
தனக்கென்று வருகையில்
தடுமாறத்தான் செய்கிறது மனது!
தோல்விகள் தொடர்கதைகளாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்!
விழுந்தவன் எழ ஒரு
விளம்பர இடைவேளையாவது வேண்டாமா?

கண்ணாமூச்சி

ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும்
ஒரே கதவிற்குப்பின் ஒளியும் குழந்தைகளை
ஒரு முறை கூட கண்டுபிடிக்க முடிவதில்லை அப்பாக்களால்!

அலைபேசிகள்

அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை
அலங்கோலமாய் எழுதத் தொடங்கிவிடுகின்றன
அழும் குழந்தையின் கையில்
தரப்படும் அலைபேசிகள்!

கிறுக்கல்கள்

வெள்ளையடித்த வீடு
எல்லோருக்கும் பிடித்திருந்தது!
தன் சுவர் கிறுக்கல்களை
சுண்ணாம்புக்குப் பறிகொடுத்த
சுட்டிக் குழந்தையைத் தவிர!

குழப்பம்

பொம்மை கட்டியணைத்து உறங்கும் குழந்தைகளிடம்
பொதுவாக ஏமாந்து விடுகின்றன கொசுக்கள்!
பொம்மை எது குழந்தை எது என்கிற குழப்பத்தில்!

கதைகள்

அலைபேசிகள் அணைத்துவைக்கப்படும் அல்லது
அலட்சியப்படுத்தப்படும் வீடுகளில் மட்டுமே
இன்றும் கதைகள் கேட்டுக் கண்ணுறங்குகின்றன குழந்தைகள்!

தள்ளாமை
தள்ளாமை தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கிறது
தாத்தா பாட்டிகள் தங்கள்
பேரக் குழந்தைகளிடம்
நேரம் செலவிடும்போது மட்டும்!

தாத்தா

டிசம்பரில் வரும் 
கிருஸ்துமஸ் தாத்தாவைத் தெரிந்த அளவிற்கு
கிராமத்தில் வசிக்கும் 
தன் சொந்தத் தாத்தாவைத் தெரிவதில்லை 
சில குழந்தைகளுக்கு!

பாதச்சுவடுகள்

கடற்கரையில் யார் போட்டது
கண்ணைக் கவரும் இக்கோலங்களை?
ஒ ... இவை உன் பாதச்சுவடுகள்!

கடிகார முட்கள்

சுவர் கடிகாரத்தினுள்
சுற்றிக்கொண்டிருக்கும் முட்கள்
ஒன்றையொன்று நெருங்கும்
ஒவ்வொரு முறையும்
ஓராயிரம் மின்னல்கள்
என் ஒற்றை இதயத்தில்!
சிறிய முள்ளில் உன் பெயரையும்
பெரிய முள்ளில் என் பெயரையுமல்லவா
எழுதி வைத்திருக்கிறேன்! 

வானவில்

இரவிலும் வானவில் தெரிவதாக
இப்போதெல்லாம் பிதற்றுகிறேனாம்!
நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
நான்கைந்து நாட்களாக!
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை
வானவில் பிடிக்குமென்று
வஞ்சி நீ என்னிடம் சொன்னதை!

புகைத்துக் கெட்டவனின் புலம்பல் 

வெள்ளையுடையில் திரிந்த
உனக்குச் சிவப்புத் திலகமிட்டு
மகிழ்ந்த சீர்திருத்தவாதி நான்!
இன்று என் மனைவியின்
திலகமழிக்கவல்லவா
மனு செய்கிறாய்!



மறந்தேன் இறந்தேன் பிறந்தேன் 

முகவரி மறந்தேன் உன் 
முகம் பார்த்த
முதல் நாளில்!
அடிக்கடி இறந்தேன் உன்
அலைபாயும் கூந்தலழகில்!
மறுபடி பிறந்தேன் நீ
மனம் திறந்த
அந்த மழைநாளில்!


மயக்கம்!

மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
மாலையிட்டவன் நானென்பதால்!

மோட்சம் கொடு

கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!

அம்மா வேறு அன்பு வேறா?

வலிக்கிறது என்று நான்
சொல்லி முடிப்பதற்குள்
வழிந்தோடி வருகிறது
கண்ணீர் உனக்கு!
ஒரே பொருளுக்கு
இனியும் எதற்கு
இரு வேறு பெயர்கள்
அம்மா,அன்பு என்று?

உன் நினைவுகள்!

இல்லை..இனியும் உனை
நினைப்பதாக இல்லை
என முடிவெடுத்த
மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து
என்னுள் எட்டிப்
பார்க்கிறது ஏகாந்தமாய்
உன் நினைவுகள்!

எப்படி முடிகிறது உன்னால்?

அம்மா என்று
அடிமனதில் நினைத்தவுடன்
கூப்பிட்டாயா என்று
குறிப்பறிந்து கேட்க
எப்படி முடிகிறது உன்னால்?

சிபாரிசு

காத்திருக்கிறது தென்றல்
உன் காதோரம் ஏதோ சொல்ல!
அது அனேகமாய் என் சின்ன
இதயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும்
சிபாரிசாய்க் கூட இருக்கலாம்!

அம்மா

நின்றாலும் கால் வலிக்கும்
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!

கனவு

என்னோடு நீ
கை கோர்த்து நடப்பதாக
கனவொன்று காணுகிறேன்
கண்ணுறங்கும் நேரமெல்லாம்!
விழிப்பு வரும் நேரங்களில்
விம்மி அழுகின்றேன்
தூக்கத்தோடு சேர்ந்து
கலைந்துவிட்ட அந்தத்
தூய்மையான கனவையெண்ணி!

காதல்

நரகம் சொர்கம்
நயமாய்க் கலந்து
நடுவில் கொஞ்சம்
நஞ்சையும் சேர்த்து
அமிலம் அமிர்தம்
அதனுடன் குழைத்து
கரும்பு கொண்டு
கலக்கி வடித்தால்
கவர்ச்சியாய் ஒரு கரைசல்
அவனியில் அதன் பெயர் காதல்!

அதனால்தானோ?

சிறப்புக்குறியது என்று நான்
நினைப்பதெல்லாம் உனக்கு
சிரிப்புக்குறியதாய்த் தெரிகிறது!
உன் கூந்தல் உதிர்த்த
ரோஜாவை என் வீட்டுக்
குளிர்சாதனப்பெட்டியில்
கண்டபோது நீ குலுங்கிச்
சிரித்ததும் அதனால்தானோ?

இனி அழப் போவதில்லை

அழகில்லை நீ
என்று எனை யார்
சொன்னாலும் இனி
அழப் போவதில்லை காதலி!
அழுக்கில்லை உன் மனதில்
என்று நீ சொன்ன
வார்த்தைகள் என்
நினைவில் இருக்கும்வரை!

தெய்வத்தின் இருப்பிடம்

தெரியாமலே இருக்கிறது
தெய்வத்தின் இருப்பிடம்
பலருக்கு!
அடுக்களை நெருப்பில்
அன்னை எனும் தெய்வம்
அல்லாடிக் கொண்டிருக்க,
கற்பூர நெருப்பில்
கடவுளைத் தேடும்
கண்கெட்ட உலகமிது!

திருட்டு

நானில்லை என்றபோதும்
நம்ப மறுக்கிறாய்!
எங்கேயோ தொலைத்த உன்
கால் கொலுசுக்காக
என்ன ஏன் சந்தேகிக்கிறாய்?
உன் நினைவாக
சேமித்து வைக்க
உன் கால் கொலுசு எதற்கெனக்கு?
உன் காலடி ஓசையே போதுமே!
நான் திருட
நினைத்ததென்னவோ உண்மைதான்!
ஆனால் அது
உன் உடமையை அல்ல
உன் உள்ளத்தை!

ஹைக்கூ

பூக்களைப் பார்த்தபின்தான்
புரிந்துகொண்டேன் கடவுளுக்கும்
ஹைக்கூ வரும் என்று!

காகித ரோஜா

காகித ரோஜாவும்
கமகமத்தது என்
காதலிக்குச் சூட்டிய பின்னால்!

ஏமாற்றம்

தேனெடுக்க வந்த வண்டு
தேம்பியழுதது!
வெள்ளை ரோஜாவை நெருங்கும்
வெள்ளாட்டைக் கண்டு!

பூக்காரி

இல்லாத மனைவிக்கு
இரண்டு முழம் வாங்கினேன்
புடைத்த வயிற்றுடன் பூக்காரி!

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைக்காகப் பறிக்கப்பட்டபோதும்
அழவே செய்தன பூக்கள்
பிரியமான செடியைப்
பிரிவதையெண்ணி!

முதலிரவுப் பூக்கள்

முத்தக் காட்சிகள் முடியும்வரை
முகம்பொத்தியே கிடந்தன
முதலிரவுப் பூக்கள்!

நன்றி

தொட்டிச் செடியிலிருந்து
எட்டிப் பறிக்கையில் எனைத்
திட்டித்தீர்த்த குட்டி ரோஜா
கார்க்குழல் ஏந்திய என்
காதலிக்கு சூட்டுகையில்
என் காதோரம் சொன்னது,
"எமைப் பறித்தமைக்கு
நன்றி" என!

குப்பை

குப்பை
மலையாய்ச் சேர்ந்திருக்கும்
குப்பை கண்டு
மலைக்காதே பெண்ணே!
சிலரது மனக் குப்பையுடன்
ஒப்பிடுகையில் இது ஒன்றும்
அதிகமில்லை!

பட்டாசு

கொஞ்ச நாள் முன் செத்த
தாத்தாவுக்காக கொளுத்தக்கூடாதாம்
தீபாவளிப் பட்டாசு!
இறுதி ஊர்வலத்தில் மட்டும்
இருபதாயிரம் ரூபாய்க்குப்
பட்டாசு வெடித்தோமே?
பணிவாகத்தான் கேட்டேன்
பட்டாசாய் வெடிக்கிறார் அப்பா!

நட்டவுடன் பூப்பூக்கும்

நட்பு எனும் செடியொன்றே
நட்டவுடன் பூப்பூக்கும்!
நம்பிக்கை எனும் நீரூற்ற
நாள்தோறும் கனி கொடுக்கும்!
ஆணிவேரின் அடிவரைக்கும்
அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்!
ஆயிரம்பேர் நாடினாலும்
அனைவருக்கும் நிழல் கொடுக்கும்!

குழந்தை வரம்

"சன்னதியில் நிம்மதியாய்
சாமி கும்பிட விடுதா சனியன்?"
எதிர் வரிசையில் அழுத
ஏதோவொரு குழந்தையின்மேல்
எரிச்சல் கக்கிவிட்டு
கும்பிட வந்த
சாமியின் பக்கம் திரும்பி
தன் குறை சொல்லி அழுதாள்
குழந்தை வரம் வேண்டி!
துவரை கல்லாய் மட்டுமே
இருந்த கடவுள் இப்போது
காதும் பொத்திக் கொண்டார்!

நிலவைக் காணவில்லை

நிலவைக் காட்டி
கதை சொன்னதில்
நிம்மதியாய் தூங்கிப்போனது குழந்தை!
மறுநாள் பொழுது விடிந்தது,
நிலவைக் காணவில்லை என்ற
அவளது நீண்ட அழுகையுடன்!

விற்பனைக்கல்ல!

வளர்க்க வசதியில்லையென்று
வந்த விலைக்குத் தன்
சொந்தப் பிள்ளையை விற்றவள்
தற்கொலைக்குத் தயாரானாள்!
மடியில் கட்டிய தன் குழந்தையுடன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த
மற்றொரு தாயைக் கண்டு!

வலி

வலி
காதலர் தினக்
காலைப் பொழுதில்
நிலத்தில் கிடந்த
ரோஜா ஒன்றில் தெரிந்தது,
நிராகரிக்கப்பட்ட காதலின் வலி!

பொறாமை

பிப்ரவரியைப் பார்த்துப்
பிற மாதங்கள்
பொறாமைப்பட்டன!
காதலர் தினமெனும்
கவர்ச்சி நாளுக்காக!

ரோஜாவின் கண்ணீர்!

ரோஜாவின் கண்ணீர்!
காதலர் தினத்தின்
முந்தைய நாளில்
பதறித் துடித்தது
அந்தப் பரிதாபத்திற்குரிய ரோஜா!
"யாரோ இருவர் இணைவதற்காய்
இணைந்திருக்கும் எங்களையேன்
இரக்கமின்றிப் பிரிக்கிறீர்கள்?"
கதறி முடிக்குமுன்னர்
காம்புடன் பறிக்கப்பட்டது
இரட்டையாய்ப் பூத்திருந்த
அந்த இளஞ்சிவப்பு நிற
ரோஜாக்களில் ஒன்று!

பிறந்தநாள்

பிப்ரவரி 14 பிறந்தநாள் ஆனது 
முந்தைய காதலர்தின
முத்தங்கள் அனைத்திற்கும்!

விரக்தியில் வீதிகள்!

விரக்தியில் வீதிகள்!
நேற்றுவரை விடுமுறையை வீதியில்
விளையாடிக் கழித்த குழந்தைகள்
இன்று பவ்யமாய்ப் பள்ளியில்!
விளக்க இயலா விரக்தியில் வீதிகள்!

நட்பின் சிறப்பு

நட்பின் சிறப்புதூண்கள் தூர்ந்துபோகாதவரை
கட்டிடங்கள் கவலைப்படுவதில்லை!
நண்பர்கள் நம்மோடிருக்கும்வரை
நம் நம்பிக்கைகள் நசிந்துபோவதில்லை!
உப்பில்லா வீட்டில்
உணவுகள் ருசிப்பதில்லை!
நட்பில்லா வாழ்வில்
நம்பிக்கைகள் துளிர்ப்பதில்லை!
நரை,மூப்பு,பிணி என்று
நட்பிற்கு ஏதுமில்லை!
நான்கு புறம் புயல் வரினும்
நட்பு மரம் சாய்வதில்லை!

வீரம்

வீரம்
கவிதைப் போட்டியில்
வீரம் என்கிற
தலைப்பு தரப்பட்டது!
'பிரபாகரன்' என்கிற
ஒற்றைப் பெயரை
அழுத்தமாய் எழுதித் தந்தேன்!
பிறகென்ன?...
முதல் மூன்று
பரிசுகளும் எனக்குத்தான்!

சுவை

சுவை
ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
தமிழ்நாட்டுச் சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!

ஊதுபத்தியும் ஊசிப்பட்டாசும்

பூசை அறையில்
வாசம் பரப்பிக் கிடந்தபோது
உணராத உன்னதத்தை 
ஊசிப் பட்டாசின்
உச்சி முகரும்போது
உணர்ந்து விடுகின்றன
ஊதுபத்திகள்!
வெட்கத்தில்
வெடித்தே போகின்றன
ஊசிப்பட்டாசுகள்!

போதை

கன்னக் கதுப்பில்
வந்து விழும்
கற்றை முடியை
அப்படி விலக்காதே
பெண்ணே அடிக்கடி!
ஓரளவு போதையை மட்டுமே
ஒத்துக்கொள்ளும் என்னுடம்பு!

இரத்தம்

இரத்தப் பரிசோதனை
நாட்களில் மட்டும்
உன் முத்தங்கள்
வேண்டாம் கண்ணே!
இரத்தத்தில் சர்க்கரை அளவு
மொத்தமாய் ஏறிவிடுகிறது
நீ முத்தமிடும் நாட்களில்!

No comments:

Post a Comment

Comments are always welcome