Thursday, November 06, 2025

மானுட மாமிசம்

 


கண்மூடித்தனங்களை
கலாச்சாரம் என்கிறாய்!
நான் மறுத்தால் அதை
மகாபாவம் என்கிறாய்!
அறிவுக் கொவ்வாதவற்றை
ஆச்சாரம் என்கிறாய்!
அதெப்படி என்கிறேன்
அபச்சாரம் என்கிறாய்!
பண்பாடு பக்தி சார்ந்தது என்கிறாய்!
உடன்பாடு இல்லை என்கிறேன்
புண்படுத்தியதாய் புலம்புகிறாய்!
சம்பந்தமற்றவைகளை
சம்பிரதாயம் என்கிறாய்!
சம்மதிக்க மறுத்தால் எனைச்
சண்டாளன் என்கிறாய்!
குரங்கிலிருந்து வந்துவிட்டு
குடிப்பெருமை என்கிறாய்!
உன் கூற்று தவறென்கிறேன்
எனைக் குற்றவாளி என்கிறாய்!
சாத்திரம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்
உன் கோட்பாட்டில் குறை கண்டால்
ஆத்திரம் கொள்கிறாய்!
வினாக்களுக்கு அப்பாற்பட்டது
சனாதானம் என்கிறாய்!
விவாதத்திற்கு அழைத்தால்
விலகிச் செல்கிறாய்!
சாதிக் கண் கொண்டே
சகலத்தையும் பார்க்கிறாய்!
சமத்துவம் பேசினால் எனைச்
சதிகாரன் என்கிறாய்!
மதம் பிடித்து
மனிதம் வெறுக்கிறாய்!
மடமை இதுவென்கிறேன்
மாற மறுக்கிறாய்!
பேசிக்கொண்டிருக்கும்போதே
தேசபக்தி என்கிறாய்! - உன்
வேசத்தைக் கண்டுகொண்டால்
எனை தேசத்துரோகி என்கிறாய்!
உன் கயமைத்தனம் மறைக்க
கடவுளை இழுக்கிறாய்!
மானுடத்தின் மாமிசம் தின்றே
மறுபடி மறுபடி கொழுக்கிறாய்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome