Sunday, November 02, 2025

தமிழ் தேசியம் மலரும்


 

எந்த நொடியில்
வந்து சேரும் மரணம் - என
சொந்த மண்ணின்
மக்கள் பயந்த தருணம்
செத்து செத்துப் பிழைத்த
கொடுமை தினமும்!
என்ன பாவம் செய்தது
தமிழ் இனமும்?
சமர் களமதில்
சதை கிழிபட்ட இரணமும்
சவக்கிடங்கென
நகர் முழுவதும் பிணமும்
பயமுடன் பரிதவித்திட்ட
பல கணமும்
நினைத்திடுகையில்
திடுக்கிடும் எங்கள் மனமும்!
பதுங்கு குழியில்
கிடந்த தினங்கள் அதிகம்
பசி நெருப்பது
பழங்கஞ்சி உண்டு அணையும்
அடிமனமது அமைதி
தேடி அலையும்!
வெடியொலியுடன் பொழுதுகள்
தினம் விடியும்!
தனித் தமிழ் நிலம்
தர மறுத்திட்ட அவனும்
கரம் கொடுத்தபின்
கழுத்தினை அறுத்தவனும்
புறவழி வந்து
அரங்கேற்றிய அவலம்
நாங்கள் புதைவது கண்டு
பூரித்ததிந்த புவனம்!
வருடங்கள் பல
உருண்டோடிய பிறகும்
குறைந்திடவில்லை மனதினில்
அந்த சலனம்
கருகிய எங்கள் கனவுகள்
இனி வளரும்!
வரும் நாட்களில்
தமிழ் தேசியம் மலரும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome