Tuesday, June 16, 2020

அப்பா

எழில்மிகு இந்த உலகினில் உலவும்
எட்டாவது விந்தை!
தழும்பிடும் அன்பை தனக்குள் சுமக்கும் அழகிய உறவே தந்தை!

தெய்வம் எல்லாம் தோற்பதில்லை தந்தை அன்பின் முன்னாலே!
தெய்வம் என்றே அர்த்தம் ஆகும் தந்தை என்று சொன்னாலே!

கருப்பையில் நம்மை சுமந்தவளுக்கு கவிதைகளுண்டு ஆயிரம்!
பொறுப்பைச் சுமக்கும் தந்தையரை நாம்
புறக்கணித்தால் கேவலம்!

பயமுறுத்தும் கடலில்தானே
பவளமும் முத்தும் பலவிருக்கும்! - அதுபோல்
கெடுபிடி காட்டும் தந்தைக்குள்ளே
கெட்டிப்பட்ட அன்பிருக்கும்!

நல்ல நிலையில் பிள்ளையைக் காண
சொல்ல இயலா துயர் பொறுப்பார்!
அள்ள அள்ளக் குறையா அன்பை
உள்ளத்திற்குள் மறைத்திருப்பார்!

தந்தையென்ற உறவை விடுத்து
தரணியில் உயர்ந்தது ஏது?
தன்னை உருக்கி நம்மை உயர்த்தும்
அவருக்கு இல்லை ஈடு!

கப்பலாய் இருந்து கரைசேர்க்கும் அந்த
தந்தையைப் போற்றி உயர்வோம்!
அப்பழுக்கில்லா அன்பின் மறுபெயர்
அப்பா என்று உணர்வோம்!

தன்னலமில்லா இதயம் கொண்ட
தந்தையின் ஆசிகள் பெறுவோம்!
இன்னலை மறந்து நம் நலம் காத்த
அவரது தவறுகள் பொறுப்போம்!

- நிலவை பாா்த்திபன்

Monday, June 15, 2020

பேரிடர் தவிர்க்க ஊரடங்கை மதிப்போம்



அடுத்தவர்க்கு நோயென்றால்
அலட்சியமாய் கடப்போம்!
அடுத்து நம்மைத் தொற்றும்போது
அழுது அலறித் துடிப்போம்!

காவல்துறையின் கெடுபிடிக்கு
கோபம் கொண்டு கொதிப்போம்!
ஆபத்திலே மாட்டும்போது
அய்யோ என்று குதிப்போம்!

பேரிடரைத் தவிர்த்திடவே
ஊரடங்கை மதிப்போம்!
இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம்
இப்போதைக்கு மறப்போம்!

நமைக் காக்க நமக்கு நாமே
கட்டுப்பாடு விதிப்போம்!
வீட்டிற்குள்ளே நாமிருந்து
விழிப்புணர்வை விதைப்போம்!

ஊரடங்கின் தேவைகளை
ஊருக்கெல்லாம் உரைப்போம்!
சூழ்ந்திருக்கும் இருளகல
சூரியனாய் உதிப்போம்!

உள்ளத்தினுள் நல்லதொரு
உறுதிமொழி எடுப்போம்!
எல்லைக்குள் நாமிருந்து
எமனையுமே எதிர்ப்போம்!

அடிக்கடி நாம் கைகழுவி
அச்சங்களைத் துடைப்போம்!
ஆபத்திலும் சேவை செய்யும்
அனைவரையும் துதிப்போம்!

மருத்துவர்கள் அறிவுரையை
மனதிற்குள் பதிப்போம்!
தொற்று நோயைத் தோற்கடித்து
வெற்றிக் கனி பறிப்போம்!

காவு வாங்கும் கிருமியதை
காலில் போட்டு மிதிப்போம்!
பூண்டோடு அழித்து அதை
பூமிக்குள்ளே புதைப்போம்!

சக மனித இடைவெளியை
சகலரும் கடைபிடிப்போம்!
சீனக் கிருமி கொன்றொழித்து
சீக்கிரம் சிறகடிப்போம்!

- நிலவை பார்த்திபன்

சுவாசிக்க இயலவில்லை என்னால்



"சுவாசிக்க இயலவில்லை என்னால்"

அழுத்தப்படும் கழுத்து நரம்புகளின்
அடியிலிருந்து எழுகிறது அந்த
அபயக் குரல்!

கதறல் எழுவது
கருப்புத் தொண்டையிலிருந்து என்பதாலோ என்னவோ
கடைசிவரை கண்டுகொள்ளப்படவில்லை
அந்தக் கல்நெஞ்சக் காவலர்களால்!

ஒன்பது நிமிடங்களுக்குள்
ஓய்ந்து போகிறது அந்த
ஒடுக்கப்பட்டவனின் ஓலம்!

முரட்டு இனவாதத்தின்
முழங்காலில் சிக்கி
சாலையோரத்தில் சடலமாகிப்போகிறான்
சற்றுமுன் உயிர்ப்புடன் இருந்த
அந்த சாமானியன்!

வெறிபிடித்த அந்த
வெள்ளை அதிகாரியால்
மரித்துப் போகிறது
மானுடம் அங்கு!

அரிப்பெடுத்த அதிகார வர்கத்தினால்
அடங்கிப்போகிறது ஆத்மா ஒன்று!

இருபது டாலர் கள்ள நோட்டிற்காக
குரல்வளை நெறித்துக் கொல்லப்படுவதென்பது
நிற வெறியின்
நீள அகலங்களுக்குள்
நிதர்சனமாய் பொருந்திப் போகிறது!

கொடுமை கண்டால்
கொதித்தெழும் உணர்வு ஒன்றே
கொரோனாவையும் மீறி
கோடு தாண்ட வைத்திருக்கிறது
வல்லரசு தேசத்தின்
நல்ல குடிமக்களை!

கருப்பும் வெள்ளையும்
கரம் கோர்த்துக் களமிறங்கியதில்
சிதறித் தெறிக்கிறது
சிவப்புச் சித்தாந்தம் அங்கு!

ஒடுக்குமுறையினால் நிகழ்ந்த
ஒற்றை மரணத்திற்கே
ஓராயிரம் எதிர்ப்புகள்
ஓங்கி ஒலிக்கிறதங்கே!

இங்கோ...
ஏகப்பட்ட ப்ளாயிட்டுகளை
ஏற்கனவே இழந்திருக்கிறது
பாவப்பட்ட எங்கள் பாரத தேசம்!

தூத்துக்குடி துப்பாக்கிகள் வெடித்ததில் துடிதுடித்து சிலர்!
மாட்டுக் கறியால்
மண்டை உடைந்து சிலர்!
மத வெறியின் மரணப் பசிக்கு பலர்!
கரை வேட்டிகளின் நரவேட்டைக்கு சிலர்!

என...
பல உண்டு
எங்கள் பட்டியலில்!

வெடித்தெழுவது உங்கள் பாணியென்றால்,
வேடிக்கை பார்ப்பது எங்களது பாணி!

ஆ..ஊ..என்றால்
அமெரிக்காவைப் பார்
என அலறும் நாங்கள்
ஆர்பாட்டமென்றால் மட்டும்
அத்தனை துவாரங்களையும்
அடைத்துக்கொள்வோம்!

என்ன செய்வது?...

நாடாள்வது எமன்களாக இருந்தாலும்
நாங்கள் மட்டும் எருமைகளே!

- நிலவை பார்த்திபன்

தேவதையின் தேநீர் கோப்பை


பறிக்கப்பட்ட தேயிலைகள்
பாக்கியம் செய்ததாக உணர்வது
உன் கோப்பையில்
தேநீராகும்போது மட்டும்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆவி பறக்கும் உன் தேநீர் கோப்பைக்குள்
தாவிக் குடியேறிவிடுகிறது மனது!
அடுத்து அறங்கேறப்போவது
அழகான உன் இதழ் ஸ்பரிசம் என்பதால்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊதி ஊதி உதடு பதிக்கிறாய்
தேநீர் கோப்பையில்!
உன் உதடுபட்டு மீண்டும் உஷ்ணமேறிப்போகிறது
தேநீர் கோப்பை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைசித் துளி தேநீரைக் குடித்துவிட்டு
நீ கைக்குட்டை தேடிய இடைவெளியில்
உணர முடிந்தது,
தேவதைகளின் உலகில்
தேநீரே தேசியபானமாக
இருக்கக் கூடுமென்று!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ குடித்து வைத்த தேநீர் கோப்பையில்
கிடைத்துவிடுகிறது எனக்கான கவிதை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ மிச்சம் வைத்த தேநீரில்
மிதக்கும் அந்த எறும்பிற்கு
நிச்சயம் சொர்கம்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேநீர் அருந்திய திருப்தியில் நீ!
தேன் அருந்திய திருப்தியில்
உன் தேநீர் கோப்பை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளிம்பு வரை
நிரம்பி வழிகிறது விரக்தி
உன் தேநீர் கோப்பையில்......
நீ தேநீர் அருந்தாத நாட்களிலெல்லாம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்போதெல்லாம்
தேநீர் இடைவேளைக்காக
அதிகமாகக் காத்திருப்பது
உன் தேநீர் கோப்பைகளே!

- நிலவை பாா்த்திபன்