Sunday, November 02, 2025

மீண்டும் ஒரு தோல்வி


முனை மழுங்கிய
ஆயுதங்களுடன்
முன்னேறிச்
சென்று கொண்டிருக்கிறேன்
கூர் தீட்டப்படாத குத்தீட்டிகள்
போர்க்களம் புகத் தகாதவையென அறிவேன்
தெரிந்தே சுமந்து செல்கிறேன்
தேடியெடுத்து அவற்றை..
ஆயுதங்களைக் கூர் செய்ய
அவகாசம் இருக்கத்தான் செய்தது
வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு
வேறெதையோ
கொண்டு செல்கிறேன்
எதிரியின் ஆயுதம் பற்றி
பெரிதாகக் கவலையொன்றுமில்லை
விரோதியின் வியூகம் பற்றி
அறிந்துகொள்வதிலும் ஆர்வமில்லை
வலிந்து திணிக்கப்பட்ட போரை
வழிகள் வேறின்றி எதிர்கொள்கிறேன்
களம் புதிதல்ல
காயங்களும் புதிதல்ல
சமர் புதிதல்ல
சறுக்கல்களும் புதிதல்ல
எனினும் இச்சூழல் புதிது
இதன் பின்னிருக்கும்
சூட்சுமங்கள் புதிது....
இதோ...
விரைந்து நெருங்குகிறேன்
போர்க்களத்தை
திரும்ப ஒருமுறை தோற்பதற்காக
ஆம்...
தோழன் எதிரியானபோதே
தோற்றுவிட்டேன் ஒருமுறை

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome