Saturday, September 18, 2021

கானகத்து நாயகன்


 இப்பிரபஞ்சத்தில் நடமாடும் பிரம்மாண்டம்! 

இவை பிளிறினாலே பின்வாங்கும் பிற மிருகம்!


தந்தங்கள் இவற்றின் தனிச்சிறப்பு!

தங்கத்திற்கு இணையானது இதன் மதிப்பு!


தும்பிக்கை தவழும் தரையோடு!

தூரப்பார்வை இதன் குறைபாடு!


காதாட்டி நடந்துவரும் கானகத்து நாயகன்!

வீதி முனை கோவிலிலே வீற்றிருக்கும் விநாயகன்!


வாழை, கரும்பு கண்டுவிட்டால் வாயூறும் இதற்கு! 

வயிறு முட்ட தின்பதொன்றே 

வாழ்வில் இதன் இலக்கு!


காட்டிற்கு அரசன் சிங்கம் என்று

கதைகள் பலவும் சொல்கிறது!

கர்ஜனை செய்யும் சிங்கமும்கூட

களிறுக்கு பயந்தே செல்கிறது!


அத்தனை பெரிய உருவத்தையும் சிறு

அங்குசம் அடக்கி விடுகிறது!

ஆயுதம் கண்டும் அஞ்சா யானை

அன்பிற்கு அடங்கிப் பணிகிறது!


நமக்குள் தொலைந்த கூட்டுக் குடும்ப முறை

வனத்தில் இன்னும் இருக்கிறது!

தமக்குள் கூடி வாழும் யானைகள்

நமக்கும் சொல்லிக் கொடுக்கிறது!


உறைவிடம் தேடி உலவிடும் யானைகள் 

ஊருக்குள் வருவது தொடர்கிறது!

உணவைத் தந்து உயிரைப் பறிக்கும்

சிலரால் மனிதம் தொலைகிறது!


ஏனைய விலங்கை எடுபிடியாக்க

மானிடக் கூட்டம் துடிக்கிறது!

யானையைப் பழக்கி யாசகம் கேட்கும்

கேனத்தனங்களும் நடக்கிறது!


மதம் பிடிக்கும் யானையைக்கூட 

மடக்கும் வழிகள் இருக்கிறது!

மதம் பிடித்த மனிதர்கள் சிலரின்

மடத்தனம் மறைய மறுக்கிறது!


- நிலவை பார்த்திபன்

சவுக்க கையில் எடுப்போம்

காக்கிச் சட்ட போட்டலையுது
காட்டுப் பய கூட்டம்!
கண்டுக்காம விட்டதுல
கூடிப்போச்சு ஆட்டம்!
மக்கள் மேல எதுக்கு இந்த
எக்கச்சக்க காட்டம்? - இனி
மரியாத குடுக்கலன்னா
மன்னிக்கவே மாட்டோம்!
பொழப்பு கெட்டுப் போகுமுன்னு
பொறுத்து பொறுத்து பாத்தோம்!
பொறுக்கித் திங்கும் உங்களுக்கு
எதுக்கு இந்த ஏத்தம்?
இத்தன நாள் மனசுக்குள்ள
புழுங்கி புழுங்கி தீத்தோம்! - இனி
தமிழ்நாடே சேர்ந்து உங்க
தலையெழுத்த மாத்தும்!
கைநீட்ட சட்டத்துல
இடமிருக்கா கேப்போம்!
கொம்பு எதுவும் மொளச்சிருந்தா
காட்டுங்கடா பாப்போம்!
சாத்தாங்குளம் சம்பவத்த
கேட்டு நொறுங்கிப் போனோம்!
துடிக்க துடிக்க கொன்னதுக்கு
தூக்குத் தண்டன வேணும்!
போலீஸ் உங்க நண்பனுன்னு
புளுகுனது போதும்!
கேக்குறவன் கேனையின்னா
சாத்தான் வேதம் ஓதும்!
நோகடிச்சு கொல்லுறதா
போலீஸோட நோக்கம்?
கொதிச்சு கெடக்கும் சனங்க இனி
எதிர்த்து கேள்வி கேக்கும்!
அடுத்த கொல லாக்கப்புல
கூடாது இனி மீண்டும் - நீங்க
அடிச்சுக் கொன்ன கணக்கு மட்டும்
ஆயிரத்தத் தாண்டும்!
கையூட்டு வாங்கும்போதே
இம்புட்டு பகுமானம் - உங்க
பொய் கேசும் என்கவுண்டரும்
எந்தக் கணக்கில் சேரும்?
இனி சட்டப்படி நடந்துக்கிட்டா
ஒத்துழைப்பு குடுப்போம்!
சண்டியரா நடந்துக்கிட்டா
சவுக்க கையில் எடுப்போம்!
இனி ஒரு நாள் உங்களுக்கும்
ஆசனவாய் எரியும்!
நாங்க முழுச்சுக்கிட்டா உங்களோட
முதுகுத் தோலு உறியும்!
நல்லவங்க போலீசுல
இருக்குறது தெரியும்!
நம்மளோட கோவமெல்லாம்
அவுங்களுக்கும் புரியும்!

- நிலவை பாா்த்திபன்

கனவுகள் பலிக்காது


ஒப்பிட எதுவும் உலகினில் இல்லை
தமிழனின் பண்போடு!

உப்பிட்ட எவரையும் உள்ளத்தில் சுமப்பது
தமிழரின் பண்பாடு!
வந்தாரையெல்லாம் வாழவைத்தது
எங்களின் வரலாறு!
வாசலில் நிற்பது எதிரியென்றாலும்
மாறாது வரவேற்பு!
ஈகை குணத்தில் இமயம் தொட்டது
தமிழினம் போலேது?
ஏழு வள்ளல்கள் மட்டுமல்ல
இன்னும் ஏராளம் இங்குண்டு!
முச்சங்கம் கொண்டு மொழியை வளர்த்த இனம்
உலகினில் வேறேது?
விருந்தோம்பல் மற்றும் வீரத்தில் எங்களை
வென்றவர் கிடையாது!
திட்டம் போட்டு தமிழ் இனத்தின் பெருமையை
சிதைத்திட முடியாது!
விட்டில் பூச்சிகள் விழுவதனால் என்றும்
விளக்குகள் உடையாது!
வடமொழி திணிக்கும் கயவரின் சூழ்ச்சிக்கு
தமிழினம் படியாது!
போலிச் சேவல்கள் கூவுவதால் என்றும்
பொழுதுகள் விடியாது!
செத்துப்போன ஒரு மொழியை எங்கள்
செவிகள் ஏற்காது!
கத்துக் குட்டிகளின் கல்விக் கொள்கைகள்
கருத்தினை ஈர்க்காது!
இனிதே தொடரும் இருமொழிக் கொள்கையில்
இன்னல்கள் கிடையாது!
பிரியத்தின் பேரில் பிறமொழி கற்கும்
உரிமைக்குத் தடையேது?
வேற்று மொழிகளை ஏற்றுக்கொள்வதில்
வெறுப்புகள் நமக்கேது?
கல்வியில்கூட காவியைக் கலக்கும்
கனவுகள் பலிக்காது!

- நிலவை பார்த்திபன்

பாடும் நிலா

 

கரங்கள் நடுங்க எழுதப்படும்
இரங்கல் கவிதை இது!
சுரங்கள் ஏழும் அழுதபடி
சுனங்கும் ஒரு சூழல் இது!
பல்லாயிரம் உள்ளங்களை
புல்லரிக்க வைத்த
புல்லாங்குழல் ஒன்று
இல்லாமல் போனது இன்று!
தொள்ளாயிரம் உணர்வுகளை
தொண்டைக்குள் தேக்கி வைத்த
நல்லிதயம் ஒன்று
நமைவிட்டுச் சென்றது இன்று!
நெஞ்சாங்கூட்டின் நேர்மேலே
தேன்கூட்டைக் கொண்ட
தேகம் உன்னது!
கஞ்சா விதையில் கள் கலந்த போதை கொண்டது
உன் கானம் என்பது!
பல்லவியில் பனித்தூவி
சரணத்தால் சாமரம் வீசியவன் நீ!
மெல்லிசையின் மேடைகளை
உன் மென்குரலால் மெறுகேற்றியவன் நீ!
ஆண் குயில் என்றுனை
நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டிருந்த வேளையில்
குயிலினங்கள் கூடிப்பேசி
குருவாக ஏற்றுக்கொண்டன உன்னை!
வானம்பாடி என்றுனை நாங்கள்
வகைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் - உன்
வகுப்பறை வாசலில்
வரிசையில் நின்றுகொண்டிருந்தன வானம்பாடிகள்!
இயற்கையெனும் இளைய கன்னி
இணைத்துக்கொண்டாள் உன்னை தன்னில்!
இயலோடு இசையைப் பின்னி
இருத்திவைத்தாள் இதுவரை உன்னில்!
குழந்தையோடு சேர்த்து
குடும்பத்தையே உறங்கவைத்தது
உன் தாலாட்டு!
உன் குரலின் குளிர்ச்சியை
குத்தகைக்கு எடுத்திருந்தது நீரூற்று!
சோகங்களை சொற்களாய்ச் சோடித்து
சொக்க வைத்தது உன் குரல்!
மோகங்களை மோட்சங்களாய் மொழிபெயர்த்து
மொட்டவிழ்த்தது உன் குரல்!
உன் ஆலாபனை
ஆலோசனை சொன்னது இசைக்கு!
அந்த ஆகாயமும் அடிமையானது
உன் குரலின் ஈர்ப்பு விசைக்கு!
காதலை நீ பாடினால்
காதிலே தேன் பாயும்!
தத்துவம் நீ பாடினால்
தவிப்பினில் மனம் தோயும்!
ராகங்கள் பதினாறு - உன்
நா விட்டு வரும்போது
பாரங்கள் பலநூறு
பறந்தோடும் மனம் விட்டு!
எம் வாழ்வோடு கலந்திட்ட
வசந்தங்கள் இரண்டு....
ஒன்று உலகப் பொதுமறையாம் திருக்குறள்!
மற்றொன்று
எங்கள் உணர்வினுள் உலவிடும் உன் குரல்!
உன் குரல்வளை பொழிந்த
இசைமழை வெள்ளம்
உலகுள்ள வரையினில்
உன் பெயர் சொல்லும்!
சங்கீதம் சங்கடமின்றி
சரணடைந்தது உன்னிடம்!
அது தங்கிய இடத்திலின்று
உருவானது வெற்றிடம்!
உன் பூபாளம் கேட்டே
புலர்ந்தது காலை!
இனி புதியதோர் விடியலுக்கு
என்செய்வோம் நாளை?
பாடும் நிலா உன்னைப்
பதுக்கிக்கொண்ட மேகம் எது?
வாடும் எங்கள் நிலை மாற
வந்து மீண்டும் ஒரு பிறவி எடு!

- நீங்கா சோகத்தோடு
நிலவை பார்த்திபன்

விவசாயம் செழிக்கட்டும்

 

இது உழுது சிவந்த கரங்கள் இணைந்து
எழுதும் புதிய சரித்திரம்!
அழுது களைத்த விழிகளில் இனி
அக்கினிப் பொறி தெறித்திடும்!
இழந்த உயிர்கள் இருபதெனினும்
கிளர்ச்சி இன்னும் கிளைவிடும்!
விழுந்து எழுந்த அலைகள்தானே
விரைவினில் சென்று கரைதொடும்?
கழுகுகளின் பகல் கனவை
கலப்பைகள் இனி கலைத்திடும்!
விழுது சுமக்கும் கிளைகளை சிறு
விசைகள்தானா முறித்திடும்?
பொழுது விடியும் தருணம் வரையில்
நிலவும் இருளா நிரந்தரம்?
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
சிலந்தி வலைக்கா சிறைபடும்?
எழுக எழுக எமது தோழா
எதிரிகள் குலை நடுங்கட்டும்!
எரிமலையுனை எதிர்க்க இங்கு
எவருண்டு களமிறங்கட்டும்!
புரட்டிப் போடும் புயல் இதுவென
புவியெங்கும் இன்று புரியட்டும்!
புரட்டு வாதம் புரியும் அரசு
புலிகளின் பலம் அறியட்டும்!
அடக்குமுறை அம்புகளின்
முனைகள் அனைத்தும் முறியட்டும்!
வடக்கில் கிழித்த வத்திக்குச்சி
தெற்கில் விழுந்து தெறிக்கட்டும்!
உழவர்களின் முழக்கங்களால்
தலைநகர் தணலாகட்டும்!
கயவர்களின் மசோதாக்கள்
கழுதைக்கு உணவாகட்டும்!
விடியல் ஒன்று பிறந்து மீண்டும்
விவசாயம் செழிக்கட்டும்!
விதைப்பவனை வதைக்கும் அரசை
நமது விரல் மை ஒழிக்கட்டும்!

- நிலவை பார்த்திபன்

எப்போதும்போல் புத்தாண்டு!


 வாழ்த்துச் செய்திகளை

வறட்டுப் பார்வையோடு கடந்து செல்கிறேன்!
வழக்கமான நாளாகவே
வருடப் பிறப்பையும் மனதில் கொள்கிறேன்!
ஜனவரி ஒன்றில் மட்டும்
ஜன்னல் திறந்து
கடமைக்கு வாழ்த்திவிட்டு
கதவு சாத்திக்கொள்ளும் சிலரை
நீண்ட நாட்களுக்குப்பின்
நினைவு கூர்கிறேன்!
கனவுகளோடு வரவேற்ற
கடந்த புத்தாண்டை
இன்று கவலைகளோடு
நினைத்து பார்க்க வைத்துவிட்டு
கடந்து போயிருக்கிறது காலம்!
வறண்ட கனவுகளுக்கு
வண்ணமடித்துப் பார்க்கும் ஆசையில்
வருடப் பிறப்பு ஒவ்வொன்றையும்
வரவேற்றுத் தொலைக்கிறோம் நாமும்!
இதோ...
மாறாத நம்பிக்கையோடு
மறுபடியும் அதே
வாழ்த்துகள்
!
வாராதோ வசந்தம் என்று
வழிந்துருகும் வாஞ்சைகள்!
இனி என்னிடம் கிழிக்க எதுவுமில்லை என
தன்னிலை விளக்கம் சொல்லிவிட்டு
நிற்கதியாய் நிற்கிறது
நிர்வாண நாட்காட்டி!
நெடுந்தொடர் அலறல்களை
நெடுங்காலமாய் வழங்கிவந்த
தொலைக்காட்சிப் பெட்டியில்
ஜனவரி ஒன்றின் சம்பிரதாயப்படி
நடிகைகளின் பேட்டியும்
நகைச்சுவைப் பட்டிமன்றமும்!
புள்ளிக் கோலங்களின் கீழ்
புத்தாண்டு
வாழ்த்துகள்
சொல்லி வைத்ததுபோல்
அத்தனை வாசல்களிலும்!
நேற்றெல்லாம் காற்றுவாங்கிய
தெருமுனைக் கோவில்களில் இன்று
ஆற்று வெள்ளமாய் ஆயிரம் பக்தர்கள்!
கோரிக்கை பாரங்களால்
கோடி மடங்கு எடையேறிய நிலையில்
கோயில் சிலைகள்!
காப்பித்தூள் வாங்கக்
கடைக்குச் செல்லும் வழியிலும்
"ஹேப்பீ நியூ இயர்" என்று
ஏழெட்டு குரல்கள்!
குறுஞ்செய்தி வாழ்த்துகளுக்கு
நன்றி சொல்லியே
குறுகிப் போயின விரல்கள்!
எப்போதும்போல் பிறந்திருக்கிறது
இப்போதும் புத்தாண்டு!
வாழ்க்கை நாம் கரங்களிலே
வழங்கட்டும் பூச்செண்டு!

- நிலவை பாா்த்திபன்

உலகம் இனி நம்மது

 

பக்கத்துல வந்திருச்சு
சட்டமன்ற தேர்தலு!
எக்கச்சக்க பொய்யச் சொல்லி
ஏய்க்குது ஒரு கும்பலு!
குள்ள நரிக் கூட்டம் வந்து
போடுதுங்க கும்புடு!
பல்லக் காட்டி ஓட்டு கேட்டு
பக்கம் வந்தா கம்பெடு!
பத்து வருச ஆட்சியில
மக்கள் கத கந்தலு!
இன்னுமாடா இந்த சனம்
உங்களெல்லாம் நம்புது?
வாளப் போல ஆயுதந்தான்
வாக்குரிம என்பது!
பாலப் போல கள்ளிருக்கும்
பகுத்தறிஞ்சா நல்லது!
உதிக்கப்போகும் சூரியனால்
உலகம் இனி நம்மது!
எதுத்து நிக்கும் கட்சியெல்லாம்
எக்குத்தப்பா பம்முது!
அழியப்போற அடிம கட்சி
அழுது அழுது விம்முது!
தமிழ்நாடே தாமரைய
குனிய வச்சு கும்முது!
ஆமக்கறி மய்யமெல்லாம்
காமெடியில் பின்னுது!
அதையும் நம்பி ஒரு கோஷ்டி
அக்கப்போரு பண்ணுது!
மலரும் இங்க தாமரன்னு
மடையன் யாரு சொன்னது?
மானமுள்ள மக்கள் வாழும்
பெரியாரின் மண்ணிது!
களவாணிப் பய கூட்டம்
கடைசி நாள எண்ணுது!
குப்பமேடு கூவமெல்லாம்
இவிங்க முன்ன சின்னது!
முட்டி போட்டு முதல்வரான
முகராசி உன்னது!
வெற்றிநட போடுதாமே
அதுக்கு அர்த்தம் என்னது?
மீதங்கூட வைக்காம
போதும் நீங்க தின்னது!
சாகும் வர மறக்காது
பாவி நீங்க பண்ணது!
அணையப் போகும் அகல் விளக்கா
ஆளுங்கட்சி மின்னுது! - நீங்க
அடிச்ச காச கணக்குப் பாத்தா
ஆகாயத்த மிஞ்சுது!
எடப்பாடி ஆட்சியில
ஏமாத்தந்தான் எஞ்சுது!
பொழப்பத் தேடி அலஞ்சதுல
செருப்புதான பிஞ்சுது?
அதிமுக பேரச்சொன்னா
அப்பாவி சனம் அஞ்சுது!
தேர்தலுல தெரியும் நீங்க
பத்து வருசம் செஞ்சது!

- நிலவை பாா்த்திபன்

சூரியனை எழவிடு

பட்ட துன்பம் பாரம் நீங்க
ஒட்டுமொத்த முடிவெடு! - உன்
சுட்டுவிரல் நுனியழுத்தி
சூரியனை எழவிடு!
குட்ட குட்ட குனிவதிங்கு
குற்றம் என்ற நிலையெடு!
நித்தம் நித்தம் நிகழும் கொடுமை
நிறுத்தும் வழியை நினைத்திடு!
உரிமை மீட்கும் ஒளியின் கீற்று
உதிக்கும் திசையில் உலவிடு!
அடிமை ஆட்சி அகல வேண்டும்
அறிவை அதற்குச் செலவிடு!
வழிமறந்த வசந்தம் உன்தன்
வாசல் தேடி வரவிடு!
விழி கெடுத்த வீணர் கூட்டம்
விலகிச் செல்ல வழிவிடு!
கயவர் ஆண்ட களங்கம் நீங்க
கறைகள் அகற்றிக் கழுவிடு!
கலைஞர் வளர்த்த கழக ஆட்சி
கனிய நீயும் கரம் கொடு!
உன்னில் என்னில் பொங்குகின்ற
உணர்வைச் செதுக்க உளியெடு!
இன்னல் தீர்த்து மண்ணைக் காக்க
பகைவர் கொன்று பலியெடு!
கவலை துன்பம் எதற்கு மீண்டும்?
களத்தில் இறங்கி களையெடு! - நம்
கதவில் வந்து காவி பூசும்
கயவர் நோக்கி கனைதொடு!
கருப்பு சிவப்பு கப்பலேறி
கடல் கடந்து கரைதொடு! - நமை
முடக்க நினைத்த மூடர் சிலரின்
முகத்தில் பூச கரியெடு!
சமத்துவமதன் மகத்துவத்தை
சரித்திரத்தில் எழுதிடு!
சகித்து வாழ்ந்த வாழ்வு போதும்
சதிவலைகளை அறுத்திடு!

- நிலவை பாா்த்திபன்

 

காணாமல்போன கனவுகள்


 என் கனவுகளில் சில காணாமல் போனதைக் காலம் கடந்து உணர்கிறேன்!

ஒன்று நான் புரண்டு படுத்த இடைவெளியில் அவை உருண்டோடியிருக்கலாம்!

அல்லது நான் கடிகாரம் பார்க்க
கண் விழித்த கனப் பொழுதில்
அவை களவு போயிருக்கலாம்!

காரணம் எதுவாயினும் காணவில்லை என்பது மட்டும் நிஜம்!

இருட்டில் தொலைத்த கனவுகளை
இருவிழி மூடி இப்போதும் தேடுகிறேன்!

சிலப்பல கனவுகள் அவற்றில்
விலை மதிப்பற்றவை என்பதால்
சீக்கிரம் மீட்டெடுக்க
சிரத்தையாய் முயல்கிறேன்!

நீங்கள் பயணிக்கும் வழியில்
பார்க்க நேரலாம் பறிபோன எனது பலவண்ணக் கனவுகளை!

அவ்வாறு காண நேரந்தால் அனுப்பி வையுங்கள் அவைகளை என் திசைநோக்கி!

தொலைந்து போன என் கனவுகள் சிலவற்றிற்கு
தோகை மயிலின் சாயலுண்டு!

சித்தாந்தக் கோட்பாடுகளால்
சிவப்பு நிறமேறிய கனவுகளும்
சில உண்டு!

ஒரு வர்கப் புரட்சியை வளர்த்தெடுக்கும் கனவொன்றை ஒரு வரிப்புலியையொத்த வடிவில் வழியில் நீங்கள் காணக்கூடும்!

பசிகொண்ட சில கனவுகளும் பட்டியலில் உண்டு!

உங்கள் உணர்வுகளை உணவாகக் கேட்குமாயின் உணர்ந்துகொள்ளுங்கள் அவற்றை என் கனவென!

அரை நிர்வாணக் கனவுகளும் அவற்றில் சில உண்டு!
அப்படியே விட்டுவிடுங்கள் அவைகளைக் காணநேர்ந்தால்!

வல்லரசுக் கனவொன்று
வழிதவறி அலையக் கண்டால்
கல்லறைத் தோட்டத்திற்கு
கையோடு அனுப்பி வையுங்கள்!

பளபளப்பாய் சில கனவுகளை பார்க்க நேர்ந்தால் அவை
பகுத்தறிவு சார்ந்த என் பகல் கனவென்றறிக!

பத்திரமாய் அவற்றை ஒப்படைப்பீர்களாயின்
பரிசுண்டு உங்களுக்கு!

நிறமற்ற என் கனவுகள் சிலவற்றையும்
நீங்கள் காண நேரலாம்!

அர்த்தமேதுமின்றி
அடிக்கடி வந்து போனபோதும்
நான் உறக்கத்தில்தான் இருக்கிறேன் என்பதை
உறுதிப்படுத்திய கனவுகள் அவை!

நெருப்பெரியும் வெப்பத்தை நீங்கள்
நெருங்கும்போதே உணர்ந்தால்
சந்தேகமே வேண்டாம்..

அவை சமூகக் கோபங்களைச் சுமந்து நிற்கும் இந்தச் சாமானியனின் கனவுதான்!

வகைப்படுத்த இயலாத மற்றும் வரையறைக்குள் அடங்காத கனவுகளும் இவ்வரிசையில் உண்டு!

இப்படியாக நீள்கிறது
இதுவரை நான் தொலைத்த கனவுகள்!
இயன்றவரை பட்டியலிட்டும்
இன்னும் சில நினைவிலில்லை!

நான் தொலைக்க முயன்றும்
தொலையாத கனவுகளின் பட்டியல்
இதைவிட நீளமானது!
அலைகடலையும் விழுங்குமளவு ஆழமானது!

நீங்களும் என்போல் தொலைத்து அழுதிருக்கலாம்
நிலாக்கால கனவுகள் சிலவற்றை!

நிஜத்தில் சாத்தியப்படாத சில நிகழ்வுகள்
கனவுலகில் கைகூடுமாயின்
யாருக்குத்தான் வருத்தமிருக்காது
அக்கனவுகள் கலையும்போதும்
காணாமல் தொலையும்போதும்!

எதற்கும் ஒருமுறை
உங்கள் தலையணையடியில் தவறாமல் தேடிப்பார்த்து விடுங்கள்!
கிடைத்தாலும் கிடைக்கலாம்
உடைந்த நிலையில்
உங்களின் சில கனவுகள்!

நாம் கனவு தொலைத்த கதை ஒரு புறமிருக்கட்டும்...

இங்கு நிஜத்தை தொலைத்த கூட்டமொன்று நிம்மதியாய் உறங்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறது!
அல்லது உறங்குவதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறது!

பரிதாபப்படுவதைவிட பரிகாசிக்க ஏதுமில்லை!

பாவம் அவர்கள்.....

- நிலவை பாா்த்திபன்