Sunday, November 02, 2025

சிறைவாசிகள்


 

வாசல்வரை வந்தும்
வரவேற்கப்படாத உறவுகளாய்
வாங்கியடுக்கியும்
வாசிக்கப்படாத புத்தகங்கள்!
கடைக்குட்டி வந்தபின்பு
முத்தத்திற்கு ஏங்கும்
மூத்த குழந்தையாய்
அனைத்தே வைக்கப்பட்டிருக்கும்
ஆன்ட்ராய்ட் தொலைக்காட்சி
விரும்பித் தொலைத்த
விலையுயர்ந்த பொருளாய்
குடும்பத்துடன் அமர்ந்து
கூடிப் பேசிக் களித்த
பொழுதுகள்
நின்று வென்ற பின்பு
கண்டு கொள்ளப்படாத
தொகுதியாய்
முன்பு அன்றாடம்
ஆடிக் களித்த
சுண்டாட்டப் பலகையும்
சதுரங்கமும்
நகரம் தேடிக் குடியேறியவன்
நழுவ விட்ட
கிராமத்து வாழ்க்கையாய்
முன்பு நாள்தோறும் நிகழ்வுற்ற
நண்பர்களின் சந்திப்பு
தொப்பை மறைக்கும்
தொடை மச்சமாய்
அருகிருந்தும்
அந்நியமாகிப்போன
அண்டை வீட்டார்
என நம் அன்றாடங்களை
அள்ளித் தின்றுவிட்டு
அடுத்த வேளை உணவுக்காய்
நம் சுயத்தையும் சுருட்டி
விழுங்கிக் கொண்டிருக்கின்றன
தீராப் பசி கொண்ட
நம் திறன் பேசிகள்
மீள வழியிருந்தும்
ஆழச் சென்று
சிக்கிக்கொள்வதையே
ஆனந்தமெனக் கொள்ளும்
ஒவ்வொருவரும்
சிரித்தபடி அதில்
மூழ்கிக்கொண்டிருக்கும்
சிறைவாசிகள்

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome