Thursday, November 06, 2025

சொத்தைப் பல்லில் ஒரு யுத்தம்


 

என் பல்லிடுக்கில் ஒரு
பருக்கை புகுந்தது!
பல நாளாய் அங்கு
படுத்துக் கிடந்தது!
என் பற்தூரிகை அதை
பார்க்க மறந்தது!
பருக்கையோ வாயில்
இருக்கை அமைத்தது!
பாக்டீரியாவை அது
பந்திக்கழைத்தது!
பற்றுயிரி என்
பல் சிதைத்தது!
பற்குழி வெட்டி
பாத்தி அமைத்தது!
பல்லாங்குழியாய்
பரவி வளர்ந்தது!
சிரிக்கையில் அது என்
சிங்காரம் கெடுத்தது!
நரம்புவரை சென்று
நங்கூரமிட்டது!
கூச்சமும் வலியும்
கூட்டணி சேர்ந்தது!
அது கூரிய ஊசி
குடைவதைப் போன்றது!
வேப்பங்குச்சிகள்
வீட்டில் சேர்ந்தது!
கிராம்பு ஏலக்காய்
சீக்கிரம் தீர்ந்தது!
வீட்டு வைத்தியம்
வீணென்றானது!
விடிய விடிய என்
உறக்கம் போனது!
பல் மருத்துவரை
பார்க்க நேர்ந்தது!
பரிசோதனைகள்
பலவும் நடந்தது!
வேர் சிகிச்சைக்கென
நேரம் வந்தது!
வேறு வழியில்லை - இதை
அவர்தான் சொன்னது!
இரண்டே ஊசியில்
ஈறு மரத்தது!
அதன்பின் பல்லை
ஆயுதம் அறுத்தது!
சொத்தைப் பல்லில் ஒரு
யுத்தம் நடந்தது!
பல்லின் உயரமோ
பாதியாய் குறைந்தது!
பொய் வேர் ஒன்று
பொருத்தப்பட்டது!
கவசம் ஒன்று அதில்
கவிழ்த்தப்பட்டது!
என் நீண்ட வலியது
நிறுத்தப்பட்டது!
என் வங்கி அட்டைதான்
வருத்தப்பட்டது!
கல்லீரல் இதயம்
கண்ணில் வலியென்றால்
எல்லோருக்குள்ளும்
ஏதேதோ கலக்கம்!
பல்லென்று வந்தால்
பலரின் மனங்களும்
பார்த்துக்கொள்ளலாம்
பிறகென்று நினைக்கும்!
உள்செல்லும் உணவை
உகந்ததாக்கிட
பல் போல் வேறெதும்
படைக்கப்படவில்லை!
முப்பத்தியிரண்டாய்
முன்வாயில் நிற்கும்
சிப்பாய்கள் அவர்களின்
சிறப்புக்கிணையில்லை!
இரவு காலையென
இருமுறை தினமும்
பல் துலக்குதல்
பயன்தரும் பழக்கம்!
இனிப்பை இயன்றவரை
குறைத்திடும் வரைக்கும்
பல்லுயிரி நமைப்
பகையென விலக்கும்!
கவனமாகப் பல்
காப்பது எப்படி?
உணவு உண்டபின்
உடனே கொப்பளி!
கசடு சேராமல்
கழுவுதல் ஒன்றே
நமது பற்களுக்கு
நாம் செய்யும் நற்பணி!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome