Saturday, November 08, 2025

போராடுவோம்


 

திடுமென திசைமாறும் வாழ்வில்
திருப்பங்கள் சில நேரலாம்!
துடுப்புடைந்திட்ட படகெனவே
துன்பம் உன்னைச் சேரலாம்!
அடுத்தடுத்தெழும் அலைகடலென
அவலங்கள் உனைச் சூழலாம்!
எடுத்திடும் சில முயற்சிகளும்
எதிர்வினைகளால் வீழலாம்!
அடைமழை புயல் வெள்ளம் தன்னில்
அமிழ்ந்திடும் நிலை தோன்றலாம்!
இடையினில் சில இடர்கள் சூழ்ந்து
இதயத்தில் துயர் ஊன்றலாம்!
துயர் எது வந்து துரத்தும்போதும்
துணிவினை விடலாகுமா?
விடியலின்திசை தேட மறந்து
விரக்தியில் விழலாகுமா?
உணர்வலைகளில் உறுதியது
உருக்குலைவது நியாயமா?
உடைந்தழுது நீ உழல்வதினால்
உனது வினைகள் மாயுமா?
படும் கவலைகள் பரிதவிப்புகள்
பயம்கொள்ளும்வரை மாறுமா?
பலம்கொண்டவரை முயன்றிடும்வரை
கவலைகளது தீருமா?
உளி படுவதை வலியெனும்வரை
சிலை உயிர்பெறலாகுமா?
எளிதினில் மனம் தளர்ந்திடும்படி
இடம் ஒன்று தரலாகுமா?
விழிவிடும் நீர்த்துளிகள் துடைத்து
விடையெதுவென தேடுவோம்!
வழியது புலப்படும் வரையினில்
வலியுடன் போராடுவோம்!
அழிவுகள் நமை நெருங்கும்போது
அறிவினால் தடை போடுவோம்!
கடைசியில் நாம் களைப்படைந்திடும்
கணம்வரை களமாடுவோம்!
வருவது என்ன வரட்டும் என நம்
வலிமையை நிலைநாட்டுவோம்!
வருத்தங்கள் மட்டும் வாழ்க்கையல்ல
என பிறருக்கு காட்டுவோம்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome