உதிரம் குடித்த திருப்தியில்
"உய்" யென உற்சாக ஒலியெழுப்பி
காதோரம் பறந்து கடுப்பேற்றும்
ஒற்றைக் கொசுவோ
அணைக்க மறந்து
அலறித் தீர்க்கும்
அடுத்த வீட்டுக் கடிகாரத்தின்
அலாரச் சத்தமோ
போர்வை விலகிய இடைவெளியில்
எனைப் போர்த்திக்கொண்டு
போர் தொடுக்கும்
பொல்லாத குளிரோ
முன்னாள் காதலியின் முகச்சாயலுடன்
கனவில் வந்து கண்ணடித்துப்போகும்
எவளோ ஒருத்தியோ
முந்தைய இரவுச் சண்டையில்
அந்தவொரு வார்த்தையைச்
சொல்லியிருக்கக் கூடாதென்றெனைக்
குத்திக் கிழிக்குமொரு
குற்ற உணர்வோ
எதுவும் நிச்சயமற்ற
இவ்வெந்திர வாழ்வினைப் பற்றிய
எதிர்கால பயமோ
அலுவலக அரசியலின்
அபாய நிலைபற்றிய
அர்த்த சாம நினைவுகளோ
திடீரெனக் கருத்தில் உதித்து
தீயாய் தகித்தெரியும்
கவிதை ஒன்றிற்கான
கடைசி வரிகளோ
என ஏதோவொன்று
போதுமானதாக இருந்து விடுகிறது
ஆழ்ந்த என்
பின்னிறவு உறக்கத்தினை
அலட்சியமாய் கலைத்துப் போவதற்கும்
அடுத்த சுற்று உறக்கத்திற்காய்
நான் காக்கும்படி ஆவதற்கும்!
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome