Sunday, September 14, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!




என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!


எத்தனை முறை எண்ணிப் பார்க்கினும்  
எள்ளளவும் சலிப்பதில்லை 
என் அரைக்கால் சட்டைப் பருவத்து
அற்புத தீபாவளி நினைவுகளை!

நான்கு மணிக்கு எழுப்பச் சொல்லி 
நாற்பது முறை நினைவுபடுத்தியதில் 
என்னோடு சேர்ந்து அம்மாவும் 
தூங்காமல் போன தீபாவளி இரவுகள் முதல்,

தீபாவளி  அதிகாலையில் 
தெருவில் வெடிக்கும் 
முதல் வெடி யாருடையது?
என்கிற போட்டியில் 
அத்தனை தீபாவளிகளிலும் 
அசராமல் தோற்றது வரை 

எதுவும் அகலவில்லை 
என் இனிய நினைவுகளை விட்டு!

தீபாவளிப் பலகாரம் மட்டுமல்ல 
தீபாவளிப் பண்டிகையே 
தித்திக்கத்தான் செய்தது அன்று! 

இப்போதும் வரத்தான் செய்கிறது  
வருடம் தோறும் தீபாவளி!

அதே பட்டாசு சத்தம்! அதே பலகார வாசம்!

ஆனாலும் குறைகிறது 
ஆழ் மனதில் ஏதோவொன்று!


                       - நிலவை.பார்த்திபன்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - உனக்காக!


உனக்காக! 


கையிலதான் பூக்கூட
கண்ணுலதான் ஏக்கத்தோட 
மயிலு நானும் காத்திருக்கேன் 
மாமன் உனக்காக! 

என்னைக்கு நான் உங்கூட 
சேரப்போறேன் உரிமையோட?
எப்ப சேதி சொல்லப்போற 
எனக்காக?

கூடையில வச்ச பூவு 
வாசம் மாறிப் போகுமுன்ன 
கூந்தலில வச்ச பூவு 
வாடி வதங்கிப் போகுமுன்ன 
குறும்புக்கார மாமன் நீயும் 
இந்தக் குயிலைத் தேடி வரணும்!

கூறப் பொடவ குளிச்சி உடுத்தி 
கூட்டாஞ்சோறு ஆக்கி வடிச்சு 
குத்தாலத்து மேகம் போல 
கூந்தலத்தான் அள்ளி முடிஞ்சு 
காத்திருக்கும் எனக்கு நீயும் 
தாலி கொண்டு தரனும்! 

வச்ச கண்ணு வாங்காம 
வாச பாத்துக் காத்திருக்கேன்!
நீ வைக்கப்போகும் பொட்டுக்காக  
பிச்சிப் பூவா பூத்திருக்கேன்!

                                - நிலவை.பார்த்திபன்

Saturday, May 03, 2014

பித்தனானேன்

கல்லூரிக் காலத்தில் விடுதித் தோழனின் காதல் வலியை உள்வாங்கி எழுதிய கவிதை...

நகரே உறங்கும்
நடு இரவு!

விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்

மூச்சிருந்தும்
பிணமாக நான்!
முழுநிலவாய்
என் மனதில் நீ!

நித்திரை மறந்த
நீண்ட இரவை
உன் நினைவின்
துணையால் கடக்கிறேன்!

விடிய விடிய
வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான்
துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே
படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி
நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல
பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல
காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல்
பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு
அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய்
தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி
சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து
ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு
கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில்
தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு
காதல்பானம் தொடுக்கிறேன்!

           - நிலவை.பார்த்திபன்


Tuesday, January 28, 2014

உழவின்றி உலகில்லை

உலகத்தின் உயிர்நாடி
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!

வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!

உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!

தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!

உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!

வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!

Wednesday, January 22, 2014

ஏக்கம்

மாட்டுவண்டி ஏறி
வரும் மன்மதனே!
எனை மாட்டுப் பெண்ணாய்
ஏற்பாயா?

இல்லை மாட்டேன் என்று
மறுதலித்து என் மனதில்
அமிலம் வார்ப்பாயா?

நான் கல்யாணத்தன்றே
கணவனை இழந்த
கறைபடாத முல்லை!

விதவை எனக்கும்
ஆசை வருவதில்
விசித்திரம் ஒன்றும் இல்லை!

தூக்கம் துறந்த கண்களில்
இன்று ஏக்கம்
மட்டுமே மிச்சம்!

ஏங்கித் தவிக்கும்
பேதை என்னை
ஏற்பாயோ என அச்சம்!

பெண்பார்க்கும் படலம்
பல கண்டு புண்ணாய்ப்
போனது நெஞ்சம்!

பெண்ணைக் கடவுளாய்ப்
போதித்த நாட்டில் இன்று
பண்பாட்டிற்கே பஞ்சம்!

சம்மதம் என்ற
ஒற்றைச் சொல்லில்
என் சங்கடமெல்லாம்
தீர்ப்பாயா?

இல்லை சமையலை
மட்டும் ருசித்துவிட்டு
சந்தடியின்றி நகர்வாயா?

Monday, January 20, 2014

ஈழத்திற்கு இருளில்லை

அங்கு எங்கள் சகோதரர்களின்
சடலங்கள் புதையுண்டிருக்கலாம்
ஆனால் எங்கள் சபதங்கள்
இன்னும் புதைபடவில்லை!

அங்கு எங்கள் குடும்பங்கள்
கொளுத்தப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் கொள்கைகள்
இன்னும் கொளுத்தப்படவில்லை!

அங்கு எங்கள் போராட்டங்கள்
பொசுக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் போர்க்குணம்
இன்னும் பொசுக்கப்படவில்லை!

எங்கள் வீரர்கள் அங்கே
வீழ்ந்துபோயிருக்கலாம்
ஆனால் எங்கள் வீரம்
இன்னும் வீழ்ந்துவிடவில்லை!

முள்வேலி முகாம்களில்
எங்கள் முன்னோடிகளை
முடக்கியிருக்கலாம்
ஆனால் எங்கள் முயற்ச்சிகள்
இன்னும் முடங்கிவிடவில்லை!

எங்கள் வெற்றியின் கிளைகள்
அங்கு வெட்டப்பட்டிருக்கலாம்
ஆனால் எங்கள் வேர்கள்
இன்னும் வெட்டப்படவில்லை!

தனியீழம் நோக்கித்
தளராமல் நடப்போம்!
தமிழ்த்தேசம் அமையத்
தடையனைத்தும் கடப்போம்!

நம் இனமழிக்க வருவோரின்
இருதயங்கள் பிளப்போம்!
சகுனிகளைச் சங்கறுத்துச்
சாக்கடையில் கலப்போம்!

புரட்சிப் புற்கள் மேயக்கிடைத்தால்
புள்ளி மான்களும் புலியாகும்!
நாம் புரட்டிப்போடும்
புயலாய் எழுந்தால்
பகைவர் கூட்டம் பலியாகும்!

பொழுது ஒருநாள்
புலரும் என்று
பொறுத்திருந்தால் பொருளில்லை!
இறுதித் தமிழன் இருக்கும்வரையில்
ஈழத்திற்கு இருளில்லை!

Sunday, January 19, 2014

மின்னல்!

அங்கே விண்மீன்களைப் பிடிக்க
வெள்ளைத் தூண்டில் போடுவது யார்?

அந்தப் பால்வெளியைக்
கீழ்வழியாகக் கிழிப்பது யார்?

அங்கே நிலவை உருக்கி
நிலம்நோக்கித் தெளிப்பது யார்?

மின்னல் - கடவுளின் கைரேகை!

கருப்பு மேகம் சுழற்றும்
வெள்ளைச் சாட்டை!

கதிரவன் மறைந்த கருப்பு பூமியை
வெளிச்சமடித்து வேவுபார்க்கும்
வானத்தின் செயல்!

வானம் வடிக்கும்
வைரக் கண்ணீர்!

வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!

வான்மகள் மழை என்ற
பெயரில் வாசல் தெளித்து,
கோலம் என்ற பெயரில்
கோனலாய்க் கிழிக்கும் கோடு!

வெள்ளை மையால்
வரையப்படும் வேரின் ஓவியம்!

மேகத்தாய் பிரசவிக்கும்
மின்சாரக் குழந்தை!

மழைவானம் கொழுத்தும்
மத்தாப்பு!

மேகப் புற்றிலிருந்து வெளியேறும்
வெள்ளிப் பாம்புகள்!

ஆகாய அரசாங்கம் வெளியிடும்
வெள்ளை அறிக்கை!

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!

இயற்கை இறைக்கும்
இலவச மின்சாரம்!

கொடியாய் விண்ணில் படர்ந்து,
இடியாய் மண்ணில் இறங்கும்,
அழகிய ஆபத்து!

Saturday, January 18, 2014

படகுகளே பாடைகளாய்!

இனிமேலும் இடிதாங்க
இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம்
இன்னும்கூட எழவில்லை!

இழப்பதற்கினி எதுவுமில்லை,
இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க
கனவில்கூட எண்ணமில்லை!

மிரட்டும் அலைகளும்
மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில்
இயல்பென்று ஆனது!

வலைகொண்டு கடல்செல்வதும்
கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும்
அவலமாகிப் போனது!

இந்திய எல்லையை
இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!

உயிரைக் கையில்
பிடித்தபடிதான் வலையில்
மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று
துன்பங்களையும் சுமக்கிறோம்!

ஆண்டுக் கணக்காய்
அழுதுவிட்டோம் அரசின்
உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய்
போன உயிர்கள்
ஐநூறையும் தாண்டி!

புத்தியை இழந்த
மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது
செவி பொத்திய அரசே!

மீனவர் உயிரை
மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும்
துரோக அரசே!

மீன் பிடிக்கும்
எங்கள் கைகள்
இனி வாள்
பிடிக்க நேரும்!

எம் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் இனி
கண்ணிவெடிகளாய் மாறும்!

நாம் பிச்சை
தந்த தீவை
அந்தப் பித்தர்கள்
ஆண்டது போதும்!

கச்சத்தீவை மீட்டால்தான்
இனி மிச்ச
உயிர்களாவது வாழும்!

Friday, January 17, 2014

ஆக்ரா அனாதையாகிறது

(குறிப்பு: சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் தாஜ்மஹால் விரைவில் தரைமட்டமாகும் என்ற இடிசெய்தி கேட்டு என் பேனாவழி கசிந்த கவிதை இது. ஷாஜஹானின் காதல் தூய்மையானதா என்கிற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
சேனைத் தமிழுலா எனும் வலைதளம் நடத்திய கவிதைப்போட்டியில்  இக்கவிதை மூன்றாம் பரிசைப் பெற்றது. )

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு
சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று
விறகாகக் காத்திருக்கிறது!

சரித்திரம் ஒன்று
சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று
அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று
காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து
சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும்
தோற்றம்-மறைவு -
முதன்முறையாக ஒரு
கல்லறைக்காக
எழுதப்படப் போகிறது!

காதலின் பெருமையை
இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது
கலங்கரை விளக்கம்!

ஈடில்லாப் பெருமையை
இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி
இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை
தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத
ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர்
பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே
எங்களுக்குச் சம்மதம்!

அதைக் குனிந்து
பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும்
தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச்
செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம்
உங்கள் விஞ்ஞானமே மருந்து!

Thursday, January 16, 2014

சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்

மடியில் சுமந்து பாலூட்டியவளை
“மம்மி” என்றழைக்கும்போதும்,
தமிழ்நாட்டுத் தகப்பனை
“டாடி” என்றழைக்கும்போதும்,
செவிபொத்தி அழுகின்றாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
நாகரீக நாகம் தீண்டி
நல்ல தமிழ் சாகும்போதும்,
நான்கு வரி தமிழில் பேச சிலர்
நாக்கு நுனி நோகும்போதும்,
சினம்கொண்டு சீறுகின்றாள்
செந்தீயாய் செந்தமிழ்த்தாய்!
தரமான தமிழ்ப் பெயர்கள்
தரணியிலே நூறிருக்க
வரம் வாங்கிப் பிள்ளை பெற்று
வடமொழியில் பெயர் வைத்தால்
சீறாமல் என்ன செய்வாள்
சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்!
தமிழ்த்தேரே இங்கு
தள்ளாடும்போது
வடமொழித்தேரின்
வடம்பிடித்திழுத்தால்
“சீ”யெனச் சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
“கொலைவெறி”யாய் தமிழர் நாவில்
அலைமோதும் ஆங்கிலத்தால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்துபோன தமிழையெண்ணி
சிங்கமெனச் சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
இளங்கோவும், பாரதியும்
இனிக்க இனிக்க இறைத்த தமிழ்
இங்கிலாந்தின் தாய்மொழியால்
இறங்குமுகம் காணும்போது
சிலிர்த்தெழுந்து சீறுகிறாள்
சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்!
ஊற்றுநீராம் உயர்தமிழில்
சேற்றுநீர் வந்து சேர்ந்ததுபோல்
காற்றுவாக்கில் கலந்துவிட்ட
வேற்றுமொழி வாரத்தைகளை
நாற்றைச் சூழ்ந்த களையெனவே
நாம் களைந்து எறிந்திடுவோம்!
சினம்கொண்ட தமிழ்தாயின்
மனம் மாறி மகிழ்ந்திடவே!
தினம் பேசும் நம்மொழியின்
தரம்கெடாது காத்திடவே
நல்லதமிழ் நாவிலேற்றி
நம்கடனைத் தீர்த்திடுவோம்!

Friday, January 10, 2014

காதலுக்குக் கண்ணில்லை!

காகிதத்தில் கவியெழுதிக்
காதல் சொன்னேன்!
முழுதாகப் படித்து முடித்து
"முட்டாள்" என்றாய்!

கைக்குட்டையில் இதயம் வரைந்து
கையில் தந்தேன்!
குப்பையிலே எறிந்துவிட்டு
"குட்பை" என்றாய்!

நெஞ்சமெல்லாம் நீதான்
என நெருங்கிச் சொன்னேன்!
நேற்று பார்த்த படத்தில்
வந்த வசனம் என்றாய்!

கண்ணாய் உனைக் காப்பேன்
என கலங்கிச் சொன்னேன்!
நாய் வளர்ப்பதில் நாட்டமில்லை
என்று நகர்ந்து சென்றாய்!

மிருதுவான உணர்வுகளை
மின்னஞ்சல் செய்தேன்!
மீசைக்கார மாமனனுப்பி
மிரட்டச் செய்தாய்!

"காலமெல்லாம் காத்திருப்பேன்"
எனக் காதில் சொன்னேன்!
காவல்துறை கதவு தட்டும்
எனக் கத்திச் சொன்னாய்!

கருணை காட்டவேண்டுமென்று
கனிவாய் கேட்டேன்!
கருனைக்கிழங்கைக் கையிலெடுத்துப்
பார்த்துக்கொள் என்றாய்!

என்ன செய்ய வேண்டும் எனைப்
பிடிப்பதற்கு என்றேன்!
ஏற்கனவே பிடித்துவிட்டது உனக்குப்
பைத்தியம் என்றாய்!

இறுதிவரை இணங்க மறுத்தால்
இறப்பேன் என்றேன்!
இயன்றவரை உதவுகின்றேன்
இன்றே இற என்றாய்!

கடைக்கண் திறக்காதா
காதல்? என்றேன்!
காதலுக்குக் கண்ணில்லை
எனக் கணக்காய் முடித்தாய்!


நிலவை.பார்த்திபன்

Thursday, January 09, 2014

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்!



வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று
களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர்
நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு
நோபல் பரிசென்றால்,
சில நூறு நோபல்கள்
உனக்குத் தரலாம்!

எம் தலைவனை விடச்
சிறந்த படைப்பு
இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று
வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை
வெல்வாய் என்ற
எம் கனவுகள்
காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது
அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது
எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால்
வெந்தது பாதி!
சில துரோக நாய்களால்
நொந்தது பாதி!
இன்று எங்கள்
சத்தியத் தாயின்
சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை
போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக்
குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத்
தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும்
நெஞ்சோடு உனக்கு
வீரவணக்கம் செலுத்துகிறோம்!

Wednesday, January 08, 2014

அட்டையில் செய்த அச்சாணிகள்

சாதிக்கக் கட்சி
தொடங்கியது அன்று!
சாதிக்கொரு கட்சி
தொடங்குவது இன்று!

அரசியல் மேடைகளில் சிலர்
அணுகுண்டாய் முழங்கும்
நேர்மை,தூய்மை,வாய்மைகளுக்கு
தேர்தல்நேர விரல்மையைக்
காட்டிலும் ஆயுள் குறைவு!

இத்தேசத்தில் நடக்கும்
தேர்தலுக்கெல்லாம் ஏப்ரல்
ஒன்றாம் தேதியே
ஏதுவான நாள்!
அப்போதுதான்
முட்டாள்கள் தினம்
முழுமை பெறும்!

நம் வாக்குகள் அங்கு
சாகடிக்கப்படுவதாலேயே அதனை
"வாக்குச் சாவடி" என்கிறோம்!

மாற்றம்வேண்டி வாக்களித்ததில்
இன்றுவரை
நாற்றம் மட்டுமே மிச்சம்!

தேசத்தின் வரிப்பணமிறைத்துத்
தேர்தல் நடத்தி
இறுதியில் தேள்களைத்தானே
தேர்ந்தெடுக்கிறோம்?!

ஆட்சிக் கட்டில்
கிடைக்குமென்றால் இங்கு
மரணப் படுக்கைகூட
சிலருக்கு மகிழ்ச்சியே!

அரசியல் அரங்கில்,
தன்னலம் தலைவாசல்
வழி நுழைவதும்,கொள்கைகள்
கொல்லைப்புறத்தில் வெளியேறுவதும்
வெளிப்படையான வெட்கக்கேடுகள்!

அட்டையில் செய்த
அச்சாணிகளாய் சில
அட்டூழியக்காரர்கள் இருக்கும்வரை
ஆரோக்கியப் பாதை நோக்கி
அசைவதெங்கே அரசியல் தேர்?