Wednesday, November 27, 2013

இது கம்மல் அல்ல காதல்

இது கம்மல் அல்ல காதல் 


வலிய வந்து பழகி எந்தன்
வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை
விடிய விடிய வதைத்தாய்!

சிரிப்பு எனும் சிதை மூட்டி என்
சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில்
காதல் விதையை விதைத்தாய்!

கணவன் என்றால் நீதான் என்று
காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து
கனவை என்னுள் வளர்த்தாய்!

மீசை விலக்கி முத்தம் தந்து
மீண்டும் தரவா என்றாய்!
மீனைக் கொத்தும் பறவை போல
மனதைக் கொத்தித் தின்றாய்!

திங்களிரண்டு கடந்தபின்பு
திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி
திடீரென்று உடைத்தாய்!

சீமை மாமன் திரும்பிவர
சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை
சீட்டுக்கட்டாய் சரித்தாய்!

காதலன் என்னைக் கைவிட நினைத்த
காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால்
அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால்
அடிமனதில் கீறல்!
நீ நினைத்தபோது கழற்றிவிட
இது கம்மல் அல்ல காதல்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 25-Nov-13, 5:23 pm 

Tuesday, November 26, 2013

இதற்குப் பெயர் பூமியில்லை

இதற்குப் பெயர் பூமியில்லை 

இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!

இருக்கை கூப்பி
இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு
இரங்கற்பா வாசித்தான்!

விதைக்கக் கற்றவன்
விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன்
சுகவாசியானான்!

நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தன் வனப்பை!

விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!

இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!

இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை! 

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் 
நாள் : 1-Jul-13, 10:48 am

Friday, November 22, 2013

நண்பா...

 நண்பா... 


ஒன்னாப்புப் படிக்கும்போதே
ஒன்னுமன்னா திரிஞ்சோம்!
நித்தம் தூங்கும்
நேரம் மட்டுந்தான
ரெண்டு பெரும் பிரிஞ்சோம்!

ஒத்த முட்டாய் வாங்கி
அதக் காக்கா கடி கடிச்சோம்!
ஒத்துமையாச் சேந்துதான
ஒண்ணுக்குக் கூட அடிச்சோம்!

மூணாப்புல பிரிஞ்சதுக்கே
மூஞ்சி வீங்க அழுதோம்!
நட்பு எனும் கலப்ப வச்சு
ரெண்டு நெஞ்ச உழுதோம்!

என்னயடிச்ச கணக்கு டீச்சர்
கண்ணாடிய ஒடச்ச!
எங்க வீட்டு நோம்புக் கஞ்சி
உன் பூணூல் நனையக் குடிச்ச!

மனசு ஒண்ணா ஆனா பெறகு
மதத்த எங்க நெனச்சோம்?
பழனிமல பள்ளிவாசல்
ரெண்டையும் ஒண்ணா மதிச்சோம்!

நான் காச்ச வந்து கெடந்த்தப்ப
உன் வீட்டைக்கூட மறந்த!
பள்ளிக்கூடம் போகாம
என் பக்கத்திலேயே கெடந்த!

என் நாயி செத்ததுக்கே
ஏழு நாளு அழுத!
எம்மேல நீ வச்ச பாசம்
என்னன்னு நான் எழுத?

என் சைக்கிள் தொலஞ்சபெறகு
உன் சைக்கிள நீ தொடல!
நீ சைவமுன்னு தெரிஞ்சபெறகு
கவிச்சி என் நாக்குல படல!

பஞ்சம் வந்து பல்லக்காட்ட
பத்தாவதையே நான் தொடல!
நீ பன்னெண்டாவது முடிச்சபோதும்
நம்ம பந்தபாசம் கெடல!

காலேஜில எடம் கெடச்சு
கண்ணீரோட பிரிஞ்ச!
மாட்டு டாக்டர் படிப்புக்காக
மதுரையில சேந்த!

காஞ்சிபுரம் பொண்ணுமேல
காதலுன்னு சொன்ன!
அவக கண்ணப் பாத்து
பேசக்கூட தெம்பில்லாம நின்ன!

மறுநாளே கெளம்பி நானும்
மதுர வந்து சேந்தேன்!
ஒனக்குக்கூடத் தெரியாம
உன் காதல
அவட்ட சொன்னேன்!

தேனாட்டம் கொரலிருந்தும்
தேனீயாட்டம் கொட்டுச்சு!
இங்கிதமே தெரியலன்னு
இங்கிலீசில் திட்டுச்சு!

வாரக் கடசி லீவுல என்
வாசக்கதவ தட்டுன!
அவ சம்மதிச்ச
சேதி சொல்லி
என்னத் தூக்கி சுத்துன!

நாலுமாசம் வரைக்கும் எல்லாம்
நல்லபடியா போச்சு!
அதுக்குமேல கொஞ்சம்கொஞ்சமா
கொரஞ்சுபோச்சு பேச்சு!

படிப்ப முடிச்ச பின்னால
பழனி பக்கம் நகந்த!
ஆசப்பட்ட பொண்ணு பேர்ல
ஆஸ்பத்திரி தொறந்த!

மண்டக்குள்ள காதல் ஏற
மத்ததெல்லாம் மறந்த!
கல்யாணத்துக்குப் பெறகும்கூட
கண்டுக்காம இருந்த!

நடுவுல ஒரு
பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன்
போல ஆகுமா?

காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!

என்னிக்காச்சும் ஒரு நாளு
என்னத் தேடி வருவ!
அதுக்குள்ள மறந்துறாத
எங்க வீட்டுத் தெருவ!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 2-Mar-12, 1:24 pm

Wednesday, November 20, 2013

எதை நான் கிறுக்க?


கவலை வந்து
கழுத்தை நெரிக்க
கரங்கள் எங்கு
கவிதை வடிக்க?

கரங்கள் இரண்டும்
கண்ணீர் துடைக்க
கற்பனை எங்கே
கருத்தில் உதிக்க?

சிந்தும் கண்ணீர்
சீராய் வழிய
சிந்தையில் எங்கு
சந்தம் பிறக்க?

வலிகள் வந்து
வாழ்வைத் தீண்ட
வரிகள் எங்கு
வளமாய்த் தோன்ற?

முட்கள் மனதை
முழுதாய்க் கீற
சொற்களை எங்கே
சோர்வின்றித் தேட?

உணர்வை எல்லாம்
ஊசிகள் தைக்க
உவமையை எங்கே
உள்ளம் நாட?

வாழ்க்கைச் செடியில்
வருத்தம் பூக்க
வார்த்தையில் எங்கு
வசந்தம் சேர்க்க?

நினைவுகள் எல்லாம்
நெருப்பில் நீந்த
புனைவுகள் எங்கே
புதிதாய்த் தோன்ற?

விரக்தியில் மனது
விறகாய் எரிய
விரல்களில் எங்கு
பேனா ஏந்த?

அழுதவிழி இரண்டும்
அப்படியே இருக்க
எழுதுகோல் எடுத்து
எதை நான் கிறுக்க?

அழுத்தும் சோகம்
அகத்தைச் சிதைக்க
எழுத்தும் நடையும்
எங்கே சிறக்க?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 20-Nov-13, 11:52 am 


Tuesday, November 19, 2013

என் மகன்

 

என் இரண்டரை
வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக்
கலந்த இளந்தளிரே! 

கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு
வரைந்த ஓவியமே! 

எனை அப்பா
என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே! 

என் கரம் பிடித்து
நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப்
பெற்ற பொன்வண்டே! 

குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க
வந்த குறிஞ்சி மலரே! 

மழழை எனும்
மகுடி கொண்டு
மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை
வருடி மகிழ்ச்சியூட்டுவாய்! 

உணவூட்ட உடன்படாது
உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள்
கேட்டே கண்கள் மூடுவாய்! 

தொலைக்காட்சி காணும்போது
தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத்
தோளேறித் தொங்கி ஆடுவாய்! 

நான் அலுவலகம் செல்லும்போது
அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது
அனைத்துத் தேற்றுவாய்! 

புண்ணான மனமும் உன்
புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும்
உன் பூ முத்தம் மாற்றும்! 

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்  
நாள் : 8-Aug-11, 8:41 pm 


Friday, November 15, 2013

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!



முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!



பதினெட்டு வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த
கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு
கலையத் தொடங்கிய நாள்!

சக நண்பன் சரவணனுடன்
பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!

"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள்
அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது
முகப்புப் பலகை!

கான்கிரீட் மலையாய்
கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல்
நீட்டித் தொட்டிடும்!

வகுப்பறை...
படிக்க வந்த
பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!

பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன்
"பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன
என் நகங்கள்!

புன்னகையோடு தன்னருகில்
இடம் தருகிறான்
அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன்
"பழனிக்குமார்" என்றே ஞாபகம்!

வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!

இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம்
சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...

என்ன செய்வது?...
ஆண்கள் பள்ளி எனும்
அனல் பாலைவனத்திலிருந்து
வந்த எனக்கு, கானல் நீரும்
கரும்புச்சாறாய்தான் தெரியும்!

அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம்
செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே
நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!

என் முறை வருகிறது....

கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என்
குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!

உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது
இரு மடங்காக!

முதல் நாளில் மட்டும்
மூன்று நண்பர்களின்
அறிமுகம் பெற்றேன்!

சில நேரங்களில் நகைச்சுவையும்,
பல நேரங்களில்
நாராசமும் காட்டும்
அன்பு நண்பன்
குண்டு விஜயகுமார்!

அசிங்கமாகத் திட்டினாலும்
அமைதியாகச் சிரிக்கும்
வி.எம்.செந்தில்!

என்னைக் கூசாமல் "குருவே"
என்றழைத்த "மணிமாறன்"!

இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர்
இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு
முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை
போட்டதுபோல் மற்றொருவன்!

ராகிங்...
இளைய மாணவர்களின்
இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின்
மூர்க்க விளையாட்டு!

தோல் செருப்பு
காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!

வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!

மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!

மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!

மொத்தத்தில், அவர்களின்
ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய்
நின்று ஊறுகாய் ஆனோம்!

இப்படியாகக் கழிந்தது
அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது
இதயத்தில் அந்த நினைவு!

பதினைந்தாண்டுகள்
பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள்
அந்தப் பசுமையான சுவடு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 24-Jul-11, 6:10 pm

 

Thursday, November 14, 2013

தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!




தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள் 

 

அது ஒரு ஆடை
நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன்
வீரியம் காட்டி
மேற்கு நோக்கி
மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது! 

வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!

வியர்வை எனும்
மையால் வெப்பம்
என் உடல் முழுதும்
கையொப்பம் இட்டிருந்தது!

புழுக்கம் என்னைப்
புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும்
கந்தக அமிலம்"! 

என் தலையில் சுரந்த
வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில்
இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது! 

கடற் காற்றுக்கு
உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத்
தொட்டுவிட்டேன் கடற்கரையை! 

மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில்
மகிழ்ச்சியின் இழைகள்!

கரைமணலைக் கரைத்துவிடும்
வீண்முயற்ச்சியில் அடுத்தடுத்து
அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்! 

படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம்
அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம்
அவன் முகத்தில்! 

அவர்களுக்கும் எனக்குமான
வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்! 

"இது கடற்கரையா
அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம்
அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது! 

நாகரீகம் என்னை
அங்கிருந்து நகர்த்தியது!

தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு
விலை சொல்லும் பூக்காரி! 

பலூன் ஊதி ஊதி பாதியாய்
இளைத்துப்போன பலூன் வியாபாரி! 

என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத
பஜ்ஜி கடைக்காரன்!

பெற்றோரின் சுண்டுவிரல்
பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல்
விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன்
வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை
நம்பியிருக்கும் குதிரைக்காரன்!

வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத்
துடிக்கும் குறும்புக் கூட்டம்! 

கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து
பொறுக்கும் சிறுமிகள்! 

அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்! 

ஆனால் மறுபுறம்
கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத்
தனிமையில் விடுங்கள்" என்று! 

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 28-Jul-11, 6:44 pm 


Wednesday, November 13, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

 

 

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

 

வெதும்பிப்போன மனதிற்கு
வெள்ளையடித்துப் போவதுதான்
பண்டிகைகளின் பணி!

ஆனால்....
பணமெனும் நீர் உறிஞ்சியே
பண்டிகைப் பயிர்கள் வளர்வதால்
அதை நட்டுவைத்த பாவத்திற்காய்
நடுத்தெருவில் நிற்கிறது நடுத்தர வர்க்கம்!

ஆண்டவனுக்குப் படையல் வைக்க
அடகுக்கடையில் வளையல் வைக்கும்
அவல நிலையில் அவர்கள்!

அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால்
அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு
அதிக மகிழ்ச்சி!

விழாக்கால வேட்டுச் சத்தங்களின்
விரிவான பின்னணியில்
ஒன்று சீட்டுக்கடை இருக்கும்!
அல்லது சேட்டுக்கடை இருக்கும்!

பற்றாத குறைக்கு
மொத்தமாய் வாங்கிய கடன்
புத்தாடைக்குள் புகுந்த பின்னும்
புத்திக்குள் உறுத்தி நிற்கிறது!

செயற்கையாய் சிரிக்கும் கலையை
இயற்கையாய்ப் பெற்றவர்கள் இந்தியர்கள்!
நாம் இயற்கையாய் சிரிக்கும் இனிய நாளையே
இனி பறைசாற்றுவோம் பண்டிகை நாளென!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 13-Nov-13, 10:42 am