Monday, November 03, 2025

சம்மதமில்லை எனக்கு


 

கொட்டித் தீர்த்துவிட்டு
சற்றே எனை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
உன்னைப் போலவே
என்னிடமும் உண்டு
ஓராயிரம் கதைகள்!
நீ முடித்தபின்பு தொடங்கலாமென
முடிந்தவரை காத்திருக்கிறது
என் நாகரீகம்!
ஆனால் நீயோ...
மற்றபடி ஒன்றுமில்லை
என்பதுபோல்
சட்டென விடைபெற்றுக்கொள்கிறாய் எப்போதும்!
இடைமறித்து இரண்டொரு வார்த்தைகளாவது பேசிவிடலாம்தான்!
இருப்பினும்...
ஓடையொன்றின்
ஒய்யாரச் சலசலப்பிற்கு நடுவே
ஒடிந்து விழும் மரக்கிளையாவதிலோ
அல்லது
விரும்பாத அடுப்பிற்குள்
விறகாக எனைத் திணித்துக்கொள்வதிலோ
துளியளவும் சம்மதமில்லை எனக்கு!
புரியும்போது புரியட்டும் உனக்கு!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome