ஏதோ ஒரு சிறு காரணம்
போதுமானதாக இருக்கிறது
புரிதலற்ற இருவருக்கிடையே
பூசல் ஒன்று புதிதாய் முளைக்க!
சகிப்புத்தன்மைகள்
சமநிலை இழக்கும்போது
கலவரம் அங்கு
கனமழையாய் பொழிந்து விடுகிறது!
பொறுமையெனும் பொக்கிசம்
தான் எனும் அகங்காரத்தால்
தகர்க்கப்படும் அதே நேரத்தில்தான்
வக்கிர வார்த்தைகளுக்கான வாடிவாசல்
வன்மத்தோடு திறக்கப்படுகிறது!
"நீ எப்படி அப்படிச் சொல்லலாம்?"
எனத் தொடங்கும்போதே
தீப்பிடித்துக் கொள்கிறது
இருவருக்கும் இடையேயான உரையாடல்!
முற்பகல் சண்டையை
முதலில் தொடங்கியது யார் என்பதில்தான்
பிற்பகல் சண்டைக்கான
பிள்ளையார் சுழி போடப்படுகிறது
பெரும்பாலும்!
சண்டையிட்டுக்கொள்ளும்
அநேகப் பெற்றோருக்கு
சத்தியமாகத் தெரிவதில்லை
அஞ்சி நடுங்கி, அழுது வீங்கி
அறையின் மூலை தேடிப் பதுங்கும்
அப்பாவிக் குழந்தைகளின்
ஆழமான வலி!
அண்டை வீட்டுக் காதுகளின்
அகோரப் பசிக்கு
சண்டை நடக்கும் வீடுகளின் சத்தம்
சர்க்கரைப் பொங்கலாகி விடுகிறது!
சண்டை நடக்கும் சகல வீடுகளிலும்
முன்கோபக்காரன் மூடனாகிறான்
விலக்கிவிட வந்தவன் வீரனாகிறான்!
ஒரு சவக்கிடங்கின் அமைதிக்கு
சற்றும் குறைவில்லாதது
சண்டை முடிந்த வீட்டில்
சம்பவிக்கும் நிசப்தம்!
போர் முடிந்த வீட்டில்
யார் முதலில் பேசுவது என வரும்போது
"பார் என் வீராப்பை" என்றே
பல நாள்கள் ஓடி விடுகின்றன!
வளைந்து கொடுப்பதால்தான்
வில் ஆயுதமாகிறது!
வலிகள் பொறுப்பதால்தான்
மரக்கூழ் காகிதமாகிறது!
எனவே
இன்னல்கள் தீருமெனில்
இறங்கிப்போவதில் தவறில்லை!
எதிர்ப்புகள் தொடருமெனில்
நீ எதைச் செய்தும் பலனில்லை!
-நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome