Thursday, November 06, 2025

அன்னைத் தமிழ் பிழைக்கும்


 

தரணியெங்கும் நிறைந்திருக்கும்
தமிழினமே வணக்கம்!
தமிழன் என்று சொல்லுவதில்
தலைக்கனம்தான் எனக்கும்!
தங்கம் வெள்ளி வைரமெல்லாம்
தமிழைக் கண்டு மலைக்கும்!
தமிழின் பெருமை எழுதும்போது
தாளும்கூட மணக்கும்!
தாய் வீட்டு உறவுகளாய்
தமிழ் நம்மை இணைக்கும்!
தமிழ் பேசும் தருணமெல்லாம்
உமிழ் நீரும் இனிக்கும்!
இலக்கியத் தமிழ் சிறப்புகளோ
இமயத்தயே மறைக்கும்!
நெடுந்தொகையும் திருக்குறளும்
நெஞ்சங்களை நிறைக்கும்!
தலைச்சிறந்த நூல்களெல்லாம்
தமிழ் சுமந்து கனக்கும்!
தற்கால இலக்கியமும்
தமிழை வாரி இறைக்கும்!
தமிழ் நாவில் தவழும்போது
தனியொரு வித மயக்கம்!
தாய்மடி தரும் நிம்மதியது
தமிழ் மடியிலும் கிடைக்கும்!
அகில உலக அதிசயங்கள்
தமிழின் அழகில் வியக்கும்!
அடுத்து வரும் காலம் தமிழை
அண்டம் தாண்டி விதைக்கும்!
நாடி தமிழ் கற்பவர்க்கு
நன்மையொன்றே பயக்கும்!
இனியொருநாள் இவ்வுலகை
இன்பத் தமிழ் இயக்கும்!
தரணி உள்ள மட்டும் இங்கு
தமிழ் நிமிர்ந்து நிலைக்கும்!
அகிலம் அழியும் நிலை வரினும்
அன்னைத் தமிழ் பிழைக்கும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome