தக்க சமயத்தில்
நீங்கள் செய்த உதவியொன்றிற்கு
அக்கணமே நான்
நன்றியுரைக்காது போயிருக்கலாம்!
எதார்த்தமாக நீங்கள் உதிர்த்த
ஏதோவொரு வார்த்தைக்கெதிராய்
எரிச்சலுடன் நான்
எதிர்வினையாற்றியிருக்கலாம்!
பரபரப்பானதொரு நகர்தலின் நடுவே
உங்கள் பாசப்புன்னகையொன்றை
நான் பாராது கடந்திருக்கலாம்!
கடுமையான சூழலொன்றில்
உங்கள் கைபேசி அழைப்பினை
நான் கவனிக்காது விட்டிருக்கலாம்!
எனை நியாயப்படுத்தவேண்டி
நான் உதிர்த்த சில வார்த்தைகள்
உங்களைக் காயப்படுத்தியிருக்கலாம்!
என் நகைச்சுவை விரல்களின்
நறுக்கப்படாத நகங்கள்
கீறல்கள் சிலவற்றை
கிறுக்கியிருக்கலாம் உங்களுக்குள்!
சபை நிறைந்ததொரு சந்தர்ப்பத்தில்
அன்பிற்குரிய உங்களை
அருகிலிருந்தும்
அவதானிக்காது போயிருக்கலாம்!
இன்னும் சில இங்கு விடுபட்டிருக்கலாம்
என் அலட்சியத்தால்
நீங்கள் இரணப்பட்டிருக்கலாம்!
வேண்டப்பட்ட உங்களிடம் நான்
வேண்டிக்கொள்வது ஒன்றுதான்...
கிளைகளைக் கண்டு
வேர்களை மதிப்பீடு செய்யாதீர்கள்!
என் பிழைகளைக் கொண்டு
என் பிரியத்தை மதிப்பிட்டுவிடாதீர்கள்!
அபிப்ராய பேதங்கள் குறித்து
அதிகம் அலட்டிக்கொள்ளாத நான்தான்
இதையும் சொல்கிறேன்!
நான் இப்படித்தான் என்று
நானே சொல்லாதவரை
இவன் இப்படித்தான்
என்ற மதிப்பீடுகளை
இயன்றவரை தவிருங்கள்!
உங்கள் கூற்று தவறென
நீங்கள் உணர நேர்கையில்
கூடவே எழும் குற்ற உணர்வினை
அவ்வளவு எளிதாகப்
புறந்தள்ளிவிட இயலாது!
மேற்சொன்ன பிழைகளுக்காக
நான் கொண்ட
குற்ற உணர்வினைப் போலவே!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome