Sunday, November 02, 2025

திரும்பிப் பார்


 

சட்டையில் பட்ட
சிறு கறைக்காக நான்
சலித்துக்கொண்டிருந்தபோது
சட்டையணியாத யாரோ ஒருவன்
எதிர் சுவற்றின்
ஆடை விளம்பரம் ஒன்றை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்!
மகிழ்வுந்துப் பயணம் ஒன்றில்
குளிரூட்டி பழுதானதாக நான்
குறைபட்டுக்கொண்டிருந்தபோது
இத்துப்போன மிதிவண்டி ஒன்றில்
தன் மொத்தக் குடும்பத்தையும்
சுமந்து செல்கிறான் ஒருவன்!
உயர்தர உணவகம் ஒன்றில்
தாமதமான சேவைக்காக நான்
கோபப்பட்டுக்கொண்டிருந்தபோது
குப்பைத் தொட்டி ஒன்றில்
தனக்கான உணவைத் தேடுகிறான்
குழி விழுந்த வயிற்றுடன் ஒருவன்!
அண்மையில் குடியேறிய
ஆடம்பர மாளிகையின்
வாஸ்து குறைபாடு
குறித்து நான்
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது
தலைக்கு மேல் ஒழுகும் கூரையை
தார்ப்பாய் கொண்டு
மூடிக்கொண்டிருக்கிறான்
பின்பக்க குடிசையில்
பிள்ளை குட்டிகளுடன்
குடியிருக்கும் ஒருவன்!
சலித்துக் கொள்ளவும்
சங்கடப்பட்டுக் கொள்ளவும்
அலுத்துக் கொள்ளவும்
குறைபட்டுக்கொள்ளவும்
நமக்கிருக்கும் காரணங்கள் அனைத்துமே
அர்த்தமற்றதாகிப் போகின்றன
விளிம்புநிலை மனிதர்களை
நாம் திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்!
வாழ்க்கையின் சில வசதிகள்
வசப்படாது போவதென்பது
வருத்தத்திற்குரியதுதான்
வாழவே வசதியற்ற சிலரின்
வாழ்க்கையை நாம்
நினைத்துப் பார்க்காதவரையில்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome