Saturday, November 08, 2025

அதே நானாக


    என் அமைதியை
ஆத்திரம் என்கிறீர்கள்!
என் இரசனையை
கீழ்த்தரம் என்கிறீர்கள்!
என் அடக்கத்தை
ஆணவம் என்கிறீர்கள்!
என் அன்பினை
அலட்சியம் செய்கிறீர்கள்!
என் நிறைகளை
நிரந்தரமற்றவை என்கிறீர்கள்!
என் குறைகள்
குமட்டலுக்குறியவை என்கிறீர்கள்!
என் குறைகளெனும்
கூராயுதம் பட்டே
என் நிறைகளெனும் நீர்க்குமிழிகள்
உடைவதாகச் சொல்கிறீர்கள்!
நான் முன்புபோல் இல்லையென
முணுமுணுக்குறீர்கள்!
மாறியது நீங்கள்தான் என்கிறேன்
மறுதலிக்கிறீர்கள்!
தோகையின் வருடலென
தொடர்ந்து நான் நம்பியவற்றை
தோற்றப் பிழைகளென
காட்டிச் செல்கிறீர்கள்!
என் எதிர்பார்ப்புகளின்மீது
எறிகணைத் தாக்குதல் நடத்திவிட்டு
அவை எரிந்து கருகும்போது
எதிரில் நின்று இரசிக்கிறீர்கள்!
கதைப் புனைவுகள் பல கொண்டு
எதை நிறுவ முயல்கிறீர்கள்?
களைப்பில் எனை ஆழ்த்த வேண்டி
கரணம் அடித்துப் பயில்கிறீர்கள்!
புறக்கணிப்பின்மூலம் எனைப்
புண்படுத்திவிடலாம் என்பது
உங்கள் புரிதலின் குறைபாடு!
நிராகரிப்புகளின் மூலம் என்
நிம்மதி கெடுக்கலாம் என்பது
நிராசையாகப் போகும்
உங்கள் நிலைப்பாடு!
தன்மானம் எனது தண்டுவடம்! - அது
தவறியும் வளையாது உங்களிடம்!
என் நெஞ்சில்
நீங்கள் தந்த ரணம் - அவை
உச்சங்கள் நான் தொட
உரங்கள் இடும்!
மீண்டும் சிலமுறை
முயன்று பாருங்கள்
மிருகமென்று எனை நிரூபிக்க
மீதமிருக்கும் வழிமுறைகளை!
தோற்று நீங்கள் திரும்பும்போது
தொட முடியா
தொலை தூரத்தில்
திடமாக நின்றிருப்பேன் நான்
அதே நானாக!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome