Saturday, November 08, 2025

பணி ஓய்வு

 


பொருளாதாரத் தேவைகளுக்காக
பொழுதெல்லாம் ஓடிய கால்கள்
பழுதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய
காலம் இது!
வெகுநாட்களாக வேறு யாருக்கோ
வேலை செய்த கரங்கள்
ஒரு வழியாக
ஓய்வு கொள்ளும் நேரம் இது!
ஏழரை மணி காலையில்
ஏதோவொரு யோசனையில்
பற்றின்றி சிற்றுண்டி விழுங்கும்
பரிதாப நிலை இனியில்லை!
எட்டு மணிப் பேருந்தை
எப்படியாவது பிடித்துவிடவேண்டும்
என்ற பதட்டம்
இனி எப்போதும் தேவையில்லை!
மேலதிகாரியிடம் திட்டு வாங்கி
மேசையில் தலை கவிழும்
தேவைகள் இனியில்லை!
முந்தைய நாளில்
முடிக்காமல் விட்ட பணிகள்
முள்ளெனக் கிடந்து
மூளைக்குள் உறுத்தும் நிலை
நாளைமுதல் ஏதுமில்லை!
பணிச்சுமையின் அழுத்தத்தால் எழும்
நுனி மூக்கு கோபங்களுக்கு
இனியிங்கு வேலையில்லை!
பிள்ளைகள் உறங்கிய பிறகு
இல்லம் திரும்பும்
இயந்தர வாழ்க்கை
இனிமேலும் தொடரப்போவதில்லை!
"பார்த்து நாளாச்சே,
பரவாயில்லையா தொழில் எல்லாம்?"
என்று பால்காரரிடம் இனி
பாசமாக விசாரிக்கலாம்!
"செல்லில் பேசிக்கொண்டே
சைக்கிள் ஓட்டாதே"
என்று செய்தித்தாள் போடுபவனிடம்
இனி செல்லமாகக் கோவிக்கலாம்!
நரை விழுந்த மேலும் சிலர்
நடை பயிற்சியின்போது
இனி நண்பர்களாகலாம்!
இனி
காயப்போட்ட வத்தல் வடகம்
காக்கை தொடாது தடுக்கலாம்!
காலத்திற்கும் உழைத்தவளுக்கு
காப்பி போட்டுக் கொடுக்கலாம்!
அலமாரியில் பொருட்கள் துடைத்து
அலங்காரமாய் அடுக்கலாம்!
இதுவரை தொலைத்த இனிமைகளெல்லாம்
இருவரும் தேடி எடுக்கலாம்!
துவைத்த துணிகள்
மடித்து வைத்து
மனைவியின் வேலை குறைக்கலாம்!
மரித்துப்போகும் மணித்துளி வரையில்
மகிழ்ச்சியை வாரி இறைக்கலாம்!
எஞ்சிய வாழ்வை
நெஞ்சமினிக்க
வஞ்சனையின்றி வாழலாம்!
மிஞ்சிய காலம்
மின்னிடும் படியாய்
மீண்டும் இளமைக்கு மாறலாம்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome