சிறுகதைகள்

இனிப்பு ரொட்டி
""""""""""""""""""""""""""""""""""
இனிப்புன்னா அம்புட்டு உசுரு காவேரிக்கு
அதனால வீட்டுக்கு ஒறவுமுற சொந்த பந்தம்னு யாரு வந்தாலும் திங்கிறதுக்கு ஏதாவது இனிப்பு வாங்கிட்டு வந்துருக்காகளான்டுதான் மொதல்ல பாக்கும் காவேரி.
வந்தவக "என்னத்தா எப்பிடி இருக்க? நல்லா படிக்கிறியா"ன்னு அவக பாட்டுக்கு கேட்டுக்கிட்டுருப்பாக. காவேரி பாட்டுக்கு ஒரு பக்கம் ஊ கொட்டிக்கிட்டு வந்தவக பையவே குறுகுறுன்டு பாத்துக்கிட்டிருக்கும்.
ஆனா சொல்லிவச்சாமாதிரி வீட்டுக்கு வார சொந்தக்காரவுகள்ல முக்காவாசிப்பேரு கல்லபொரியோ காராபூந்தியோதான் வாங்கிட்டு வருவாக. அதையும் தாண்டி மிஞ்சி மிஞ்சி போனா ஒரு சீப்பு வாழப்பழம். அம்புட்டுத்தேன்.
ஒருவாட்டி செங்கட்டாம்பட்டி ராசு பெரியப்பா மிச்சரு மட்டும் வாங்கிட்டு வந்ததுக்கு "என்ன பெரியப்பா இனிப்பு எதுவும் வாங்கிட்டு வரலையா"ன்டு வெள்ளந்தியா கேட்டுப்புடுச்சு புள்ள.
அம்பட்டுத்தேன்... ஆத்தாக்காரி வெள்ளையம்மா கொல்லப் பக்கம் இழுத்துட்டுப்போயி "ஏன்டீ இப்பிடி மானத்த வாங்குற"ன்னு சொல்லி அடி வெளுத்து விட்டிருச்சு காவேரிய
காவேரியோட அப்பா துரைக்கண்ணுக்கு கிளி சோசியந்தேன் தொழிலு. ஊரு ஊரா சுத்தித் திரிஞ்சிட்டு மாசக்கடைசி வாக்குலதேன் வீட்டுப்பக்கம் வருவாப்ல. மகளுக்கு இனிப்பு பிடிக்குங்குறவாசி கலர் பூந்தியும் சீனிச்சேவும் வாங்கிட்டு வருவாப்ல.
ரெண்டு நாள்ல அம்புட்டையும் தின்டு தீத்துப்புடும் காவேரி.
"ஏன்டி கொஞ்ச கொஞ்சமா தின்டாத்தான் என்னவாம்?"அப்படீன்னு வெள்ளையம்மா அமட்டும்போதெல்லாம் துரைக்கண்ணு இருந்துக்கிட்டு "அட ஏன்டீ புள்ளைய அமட்டுற? அது திங்கிறதுக்குத்தான இம்புட்டும் வாங்கிட்டு வந்திருக்கேன்" அப்படீம்பாரு.
காவேரி பள்ளியூடம் போகும்போது வாங்கித் திங்க காசு கேட்டா வெள்ளையம்மா தராது. என்னிக்காச்சும் ஒருநா பாவப்பட்டு எட்டணா தரும். அதுவும் வெள்ரிக்கா இல்லன்னா வேர்க்கடல மட்டுந்தேன் வாங்கித் திங்கணும்னு கன்டிசனா சொல்லித்தேன் அனுப்பும்.
வெள்ளையம்மாவுக்கு பயந்துக்கிட்டு காவேரியும் வேற எதையும் வாங்கித் திங்காது. முந்தி ஒருவாட்டி குச்சி முட்டாய் வாங்கித் தின்னத எதுத்தவீட்டு அந்தோணிப்பய வெள்ளையம்மாட்ட போட்டுக் குடுத்துட்டியான். அதுல இருந்து காசு குடுக்குறத இன்னும் கொறச்சிருச்சு அந்தம்மா.
இப்பிடி இருக்கும்போதுதான் காவேரியோட மாமன்காரன் சுருளியாண்டி பட்டாளத்துல இருந்து லீவுக்கு வந்தவன் அக்கா வெள்ளையம்மாவையும் காவேரியையும் பாக்க வீட்டுக்கு வந்திருக்கியான். காவேரிக்கு மாமான்னா ரொம்ப பிடிக்கும். சுருளிக்கும் அப்பிடித்தேன். அக்கா மகளுக்கு ஆசை ஆசையா காவேரின்னு பேரு வச்சதே அந்தப் பயதேன்.
எப்பையும்போல மாமங்காரன் திங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கியான்டு புள்ள கண்ணுலயே தொளாவுது. அவசரத்துல ஊருக்கு கிளம்பி வந்த சுருளிப்பய மருமகளுக்கு ஒரு சோடி கொலுசு தவிர வேறு ஒன்னும் வாங்கிட்டு வரல.
காவேரி முகம் பொசுக்குன்னு போகவும் இவனுக்கு என்னமோ மாதிரிஆயிருச்சு. "யெக்கா..காவேரிய வெளிய கூட்டிட்டுப்போயி திங்கிறதுக்கு என்னத்தையாவது வாங்கிக்குடுத்துட்டு கூட்டிட்டு வாரேன்" னுட்டு வாடக சைக்கிள்ல காவேரிய உக்கார வச்சி கட வீதிப்பக்கம் வண்டிய விடுறியான்
நேரா கோயிந்தன் டீக்கடையில போயி நின்னவன் உள்ள போயி ஒக்காந்து "ஒரு பால்பன் குடுண்ணே" அப்பிடீங்கவும் நல்ல பதமா வெந்த ஒரு பால்பன்ன எளஞ்சூடா எலைல வச்சு எடுத்துட்டு வந்து காவேரி முன்னாடி வக்கிராரு கோயிந்தன். இப்பிடி ஒரு இனிப்பு ஐட்டம் இருக்குன்னு இன்னிக்கித்தேன் பாக்குது காவேரி.
அது ஆச்சிரியமா பாத்துக்கிட்டிருக்கும்போதே ஒரு சின்ன சில்வர் கிளாசுல சீனிப்பாக எடுத்துட்டு வந்து பால்பன்ன நட்ட நடுவுல நோகாம பிச்சு விட்டு அங்கன அத ஊத்துராப்ல கோயிந்தன்.
பொறிச்ச பால்பன் வாசனையோட சீனிப்பாகு வாசன சேந்து காவேரி வாயில இன்னொரு காவேரியா ஊறுது எச்சி. சுருளி அத வாட்டமா பிச்சு சீனிப்பாகு சிந்தாம எடுத்து காவேரிக்கு ஊட்டவும்.... அம்புட்டுத்தேன்... காவேரிக்கு கண்ணே கலங்கிருச்சு. ஏன்னா இம்புட்டு ருசியா ஒரு பலகாரத்த புள்ள தின்டதேயில்ல.
போன தீபாவளிக்கு ரமணி டீச்சர் வீட்ல குடுத்த குளோப் ஜாமுன்தான் உலகத்துலயே ருசியான பலகாரம்னு நேத்து வரைக்கும் நெனச்சுக்கிட்டு இருந்துச்சு காவேரி. அதெல்லாம் இந்த பால்பன்னுக்கு முன்னால ஒன்னுமே இல்லைன்னு ஆயிருச்சு இப்ப.
இனி சுருளி மாமா அடுத்த வாய் ஊட்டுறவரைக்கும் யாரு காத்துக்கெடக்குறது? மள மளன்டு பிச்சு திங்க ஆரம்பிக்கிது புள்ள. வாய்க்கு கொண்டு போறதும் தெரியல அது வயித்துக்குள்ள போறதும் தெரியல. அடுத்த அஞ்சு நிமிசத்துல வழிச்செடுத்தாமாதிரி கெடக்குது வாழையெல.
ஒதடு, நாக்கு, பல்லு, உள்நாக்கு, தொண்டையத் தாண்டி மேல்நெஞ்சு வரைக்கும் மெதக்குது தித்திப்பு. பாதிக் கண்ணு சொருகி நிக்குது காவேரிக்கு.
தித்திப்பு குறையிறதுக்காக தூள் பக்கோடாவ அரக்கைப்பிடி அள்ளிட்டு வந்து எலையில போடுறாப்ல கோயிந்தன். அடுத்த நிமிசத்துலயே அதுவும் காலி.
அன்னைக்கு சாயாங்காலமே சுருளியும் ஊருக்குக் போயாச்சு. அடுத்த பத்து பதினஞ்சு நாளைக்கு காவேரி தாஞ்சோட்டுப் பிள்ளைக ஒன்னுவிடாம பால்பன் தின்டதப்பத்திதேன் பேசுது. ருசி நின்ன அளவுக்கு பால்பன் அப்படீங்கிற பேரு நிக்கல காவேரி மனசுல. அதுவாசி "இனிப்பு ரொட்டி", " இனிப்பு ரொட்டி"ன்னே எல்லா பக்கமும் சொல்லிக்கிட்டுத் திரியிது.
இம்புட்டு நாளா அப்பா ஏன் நமக்கு இத வாங்கித் தரல அப்படீன்னு ரோசன பண்ணிப் பாத்துட்டு அடுத்த வாட்டி அவரு வீட்டுக்கு வரும்போது கட்டாயமா அப்பாவ வாங்கித்தர சொல்லணும்னு முடிவு பண்ணிக்கிச்சு காவேரி.
ஆடி அமாவாசைக்கு மறுநா பொழுசாய துரைக்கண்ணு வீட்டுக்கு வாராப்ல. அப்பன பாத்த அடுத்த நிமிசம் சுருளி மாமா இனிப்பு ரொட்டி வாங்கித் தந்த கதையச் சொல்லி இப்பயே கடைக்குப் போகணும்டு ஒத்தக் கால்ல நிக்கிது காவேரி.
"ஏய் எரும மாடு... அப்பா இப்த்தான வந்திருக்காரு... ஒடனே உனக்கு தின்டாகணுமா? காட்டுக் கத்தா கத்துது வெள்ளையம்மா. "அப்பா நாளைக்கு உன்னய கூட்டுப்போறேன் சாமி. இன்னிக்கு கிளிகிட்ட வெளாடு" அப்படீன்டு சசமாதானப்படுத்துறாரு துரைக்கண்ணு.
மக்யாநாளு பொழுசாய மகள கூட்டிக்கிட்டு கோயிந்தன் கடைக்கு போறாப்ல துரைக்கண்ணு. அங்க போயி பாத்தா மத்த எல்லா பலகாரமும் இருக்கு பால்பன்னத் தவிர. "போனமாசம் எங்க மாமாகூட வந்து வாங்கித் தின்னேன்ல... ஒரு இனிப்பு ரொட்டி... அது இல்லையா"? அப்பிராணியாக் கேக்குது காவேரி. ""பால்பன்னா? இப்ப போடுறதில்ல பாப்பா" அப்படீங்கிறாரு கோயிந்தன். மாஸ்டரு பக்கத்து டவுன்ல ஒரு ஓட்டல் கடைக்கு வேலைக்குப் போயிட்டாராம். பொசுக்குன்னு போச்சு புள்ளைக்கு. ஊருல வேற எந்தக் கடையிலும் பால்பன் போடுறதில்ல.
காவேரிக்கு இனிப்புச் சீயம் வாங்கிக் குடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாப்ல துரைக்கண்ணு. நாளைக்கு புள்ளைய கோபால்பட்டி கூட்டிப்போயாவது பால்பன் வாங்கித் தந்துரணும்னு நெனச்சுக்கிட்டாரு.
மக்யா நாளு மதியச் சாப்பாடு முடிச்சவுடனே மகள கூட்டிக்கிட்டு திண்டுக்கல் வண்டியேறிட்டாரு துரைக்கண்ணு. திண்டுக்கல் போயி வண்டி மாறி கோபால்பட்டில எறங்கி பலகாரக்கடையில காவேரிக்கு பால்பன் வாங்கித் தரவும் ஆசையோட வாங்கித் திங்கிது புள்ள.
அதே வாசன, அதே எளஞ்சூடு.. ஆனாலும் கோயிந்தன் கடையில தின்னாமாதிரி திருப்தி இல்லை காவேரிக்கு. இதாவது கெடச்சுதேன்னு நெனச்சுக்குச்சு பாவம்.
இங்கிட்டு துரைக்கண்ணு கடக்காரர்ட்ட "இந்த பால்பன்ன எப்படீண்ணே செய்றீக?" அப்படீன்டு கோளாறா கேக்குறாப்ல.
"மைதாமாவு, அரச்ச சக்கரத்தூளு, இத்துணூண்டு ஏலப்பொடி, கொஞ்சம் சோடா உப்பு, இதெல்லாம் ஒன்னாச் சேத்து தயிர் ஊத்திப் பெனஞ்சு அர மண்நேரம் ஊற வக்ய வேண்டியது...
இங்கிட்டு பிசுபிசுன்டு கைல ஒட்ற பதத்துக்கு சக்கர பாகக் காச்சிக்கிட வேண்டியது...
அப்புறம் ஊற வச்ச மாவ எண்ணையில பொரிச்செடுத்தா அம்புட்டுத்தேன். பொரிச்ச உருண்டைய சக்கரப் பாகுல போட்டாலும் சரித்தேன். இல்லன்டா தனியா தொட்டுத் தின்டாலும் சரித்தேன். அது அவுகவுக இஷ்டம்". பரபரன்னு வேலையப் பாத்தமேனிக்கு பக்குவத்த சொல்லிமுடிச்சுருச்சு கடக்காரப் பெருசு.
காவேரியக் கூட்டிக்கிட்டு வீடு வந்து சேந்த ஒடனே இந்த பக்குவத்த வெள்ளையம்மா காதுல போட்டு வக்கிறாப்ல துரைக்கண்ணு.
அடுத்த மாசம் காவேரி பொறந்தநாளன்னைக்கு வீட்லயே பால்பன் செய்யிது வெள்ளையம்மா. பள்ளியூடம் முடிச்சு ஆசையாசையா வந்து தின்டு பாத்த காவேரி மூஞ்சிய சுளிக்கிது. "போம்மா உனக்கு செய்யவே தெரியல. இனிமே வீட்ல செய்யாத". கறாரா சொல்லிப்புடுச்சு காவேரி.
எத்தன நாளானாலும் அந்தப்புள்ளைக்கு அன்னைக்கு கோயிந்தன் கடலை தின்ன இனிப்பு ரொட்டி மட்டும் மறக்கவே இல்ல.
வாரா வாரம் வெள்ளிக்கிழம பக்கத்து வீட்டு ஈஸ்வரி அக்காகூட முத்தாலம்மன் கோயிலுக்கு போகும்போது கோயிந்தன் கடையத் தாண்டித்தேன் போகணும். அப்பெல்லாம் செத்த நின்னு பலகாரத் தட்ட ஏக்கமா பாத்துட்டுத்தேன் போகும். ஆனா அந்த தட்டுல வேற ஏதாச்சும் பலகாரம் கெடக்கும்.
இப்படியே வருசமெல்லாம் ஓடுச்சு. காவேரி பள்ளியூடம் முடிச்சு மருதைல நர்சு படிப்பும் முடிச்சு திண்டுக்கல்ல ஒரு ஆஸ்பத்திரில வேலையும் வாங்கிருச்சு. அய்யம்பாளையத்துல மெடிக்கல் கட வச்சிருக்க தனசேகரனுக்கு வாக்கப்பட்டும் போயிருச்சு.
வாக்கப்பட்டுப்போன அதே வருசத்துல காவேரி பொறந்தநாளன்னிக்கு வேலைக்குப் போயிட்டு பொழுசாய வீட்டுக்குள்ள நுழையுது.... வீடெல்லாம் கமகமன்னு அதே இனிப்பு ரொட்டி வாசம்.
காவேரி மாமியா வடிவு தட்டுல ரெண்டு பால்பன்ன வச்சு நீட்டுது. பிச்சுத் தின்டு பாத்தா... அன்னிக்கு கோயிந்தன் கடைல தின்ன அதே ருசி, அதே பக்குவம்.
நம்ப முடியாம மாமியா மொகத்தப் பாக்குது காவேரி. "என்னாத்தா பாக்குற?போனவாட்டி உங்க அம்மாட்ட பேசிக்கிருக்கும்போது அவுகதேன் சொன்னாக ஒனக்கு இது புடிக்கும்டு. நல்லாருக்காத்தா?"
"கடைல திங்கிறாமாதிரியே ரொம்ப நல்லாருக்குத்த" மனசு நெறஞ்சு சொல்லுது காவேரி.
"எல்லாம் உங்க மாமனாரு சொல்லிக்குடுத்ததுதேன்". சொவத்துல மால போட்டு தொங்குற புருசன் போட்டோவக் காட்டி சொல்லுது வடிவு. "அவரு சமையல் மாஸ்டரா வேல பாத்தவரு தாயி. அவருக்குத் தெரியாத பக்குவமே இல்ல. உங்க ஊர்லகூட ஒரு கடைல கொஞ்ச நாளு வேல பாத்திருக்காரு" சொல்லிட்டு பெருமூச்சு விடுது வடிவு.
காவேரிக்கு குத்துமதிப்பா புரிஞ்சிருச்சு. இருந்தாலும் ஆர்வமா கேக்குது "எங்கூர்ல எந்தக் கட அத்த"?
"கணேசனோ கோயிந்தனோ ஏதோ ஒரு பேர் சொல்லுவாருமா".
காவேரிக்கு ஆச்சரியம் தாங்க முடியல. அடுத்த வாயி பிச்சு திங்கும்போது கண்ணெல்லாம் கலங்குது. அன்னைக்கு கோயிந்தன் கடைல மொத மொதல்ல இதே ரொட்டியத் திங்கும்போது வந்துச்சுல்ல... அதே கண்ணீரு

- நிலவை பார்த்திபன்



இப்போதும் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
பொன் வண்டுகளைப் பற்றிய
என் பழைய நினைவுகளை!
பஞ்சவர்ணக் கிளிகளோ,
தோகை மயில்களோ அல்லது மின்மினிப் பூச்சிகளோ தந்த பிரமிப்பைவிட
எவ்வகையிலும் குறைந்ததன்று
பொன்வண்டுகள் என்னுள் ஏற்படுத்திய ஆச்சரியங்கள்!
நகர வாழ்க்கை நோக்கி
நகரத் தொடங்கியபின்
பொன் வண்டுகளை காணும் வாய்ப்பு
பொய்யாகிப் போனது!
இதுவே நிகழப்போகிறது என
இளம்பருவத்திலேயே உணர்ந்திருந்தால்
இன்னும் சற்று அதிகமாகவே இரசித்திருப்பேன்
மின்னித் திரிந்த அந்த வண்டுகளை!
கொடிக்காய் மரங்களில் மிடுக்காய் ஊறுமதை பிடிக்கும் வித்தை
பிடிபட்டதில்லை எளிதில் பலருக்கு அக்காலத்தில்.
பொன் வண்டுகள் வைத்திருக்கும்
அண்ணன் மார்களை மன்னர்களாகப் பார்த்த காலமொன்றிருந்தது! பெருமிதம் வழியும் முகத்தோடு தெருவில் அவர்கள் நடக்கும்போது ஏக்கப் பார்வை பார்த்த ஏராளமானவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்!
பொன் வண்டுகளை அடைத்துவைக்க அண்ணன்மார்கள் பின்பற்றும் யுத்தி பொன் வண்டுகளைக் காட்டிலும்
சுவாரசியமானது!
சிகரெட் அட்டைகள் சிலவற்றை சேர்த்து பக்கவாட்டில் அடுக்கி
பாங்காய் இணைத்து உருளை வடிவில் ஒரு அறை செய்து உள்ளே விட்டுவிடுவார்கள்
அந்த பிடிபட்ட வண்டுகளை!
கொடிக்காய் மரத்தில்
பிடிபடுவதாலோ என்னவோ
கொடிக்காய் இலைகள் மட்டுமே
அவற்றிர்க்குப் பிடித்தமான உணவு
என பிடிவாதமாக நம்பினார்கள்
அண்ணன்மார்கள்!
அதற்காக அவ்வட்டைப் பெட்டியின்
அடித்தளத்தில் கொடிக்காய் இலைகளைக் கொட்டி வைத்திருப்பார்கள்.
எண்பதுகளின் கிராமப்புற சிறுவர்களுக்கு பொன் வண்டுகளைப் பற்றி சொல்ல வேண்டியிருக்காது. அறியாத மற்றவர்களுக்காக அப்பொன் வண்டுகளை வர்ணிக்காது போனால்
பொதுமன்னிப்பென்பது கிட்டாதெனக்கு.
சாந்து நிறத்தில் சலவைக் கல் போன்றே வழவழப்பானது அதன் உடல்! மின்னும் பச்சை நிறத்தில்
கண்ணைப் பறிக்கும்படி இருக்கும் அதன் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகள்.
பொன் வண்டுகளைப் பற்றி என்னிடம் அதிகமாகக் கதை சொல்வது சுப்பிரமணியும் திரவியமும்தான்.
பொன் வண்டு பற்றி அவர்கள் சொன்ன பல விசயங்களில் முக்கியமானதாக எனக்குப் பட்டது நீலவேணிக்கும் (எட்டாம் வகுப்பு "இ" பிரிவு) பொன் வண்டு ரொம்பப் பிடிக்கும் என்பதுதான்.
நீலவேணிக்காகவே "இ" பிரிவை இளித்தபடி எட்டிப் பார்க்கும் பலரில் நான் இல்லையென்றபோதும் நீலவேணி போட்டு வரும் ரெட்டை ஜடையும், தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் பழக்கமும், ஒற்றைக் கையால் வாய்மூடிச் சிரிக்கும் அழகும் மிகவும் பிடிக்கும்.
நீலவேணியிடம் நான்கைந்து பொன்வண்டுகள் இருந்ததாகவும் யார் பொன் வண்டு வைத்திருந்தாலும் அவர்களிடம் நட்பாகப் பேசி பொன் வண்டு பற்றி விசாரிக்கும் என்றும் திரவியம் பயல் கொளுத்திப் போட்டிருந்தான்.
ஆக பொன் வண்டுகளின் மீதான ஆசையை அதிகப்படுத்திய காரணிகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.
கனகராஜ் அண்ணனுக்கு
இவ்வண்டு கடித்து
துண்டாய் போனது விரல்
என சுப்பிரமணி பலமுறை
என்னிடம் சொல்லி
பயமுறுத்தி வைத்திருந்தான்!
அதன் தலைக்கும் உடலுக்கும் இடைப்பட்ட பிளவில் கை வைத்தால் வெட்டிவிடுமாம்.
பழகினால் ஒன்றும் செய்யாது என அவனே
சமாதானமும் சொல்லி வைப்பான்!
பின்னொருநாளில் இளங்கோ தாத்தாவிடம் இதுபற்றி கேட்டபோது
"அது பச்சப்புள்ள மாதிரிடா, கடிக்காது" என்று பொடி போட்டுக்கொண்டே பொறுப்பாக பதில் சொன்னார்.
அதன்பிறகு சற்று தைரியம் வரவே
எப்படியாவது அதைத் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் எனத் தொந்தரவு செய்யத் தொடங்கியது மனது!
மதி அண்ணனிடம் புதிதாகப் பிடிபட்ட பொன் வண்டு இருப்பதாக சுப்பிரமணிப் பயல் சொல்லியிருந்தான்.
ஐஸ் கம்பெனியில் வேலை செய்யும் மதி அண்ணன் முத்து சைக்கிள் கடையில் மாலை நேரங்களில் மணிக்கணக்காய் அமர்ந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.
அன்று சற்று முன்னமே சென்று
அவருக்காக காத்திருந்து அவர் வந்ததும் வராததுமாக கேட்டுவிட்டேன் ஒரு வழியாக.
"நாளைக்கு வாடா, உன் கையிலயே அத நடக்க விடுறேன்" என்றார்.
அன்றிரவு அவ்வளவாகத் தூக்கம் வரவில்லை. இடை இடையே வந்த உறக்கத்தின் நடுவில் பொன் வண்டு கையில் ஊறுவதாகவே கனவு வந்துகொண்டிருந்தது.
அடுத்தநாள் மூன்று மூன்றரைக்கெல்லாம் முத்து அண்ணன் சைக்கிள் கடையில் போய் நின்றுவிட்டேன். "டே அவன் அஞ்சு மணிக்குமேலதான்டா வருவான்" என்றார் முத்து அண்ணன்.
"வருவார்ல அது போதும்" என்று திருப்திப்பட்டுக்கொண்டது மனது.
பாழாய்போன மதி அண்ணன் அன்றைக்கு என்று ஆறு மணிக்குத்தான் வந்தார்.
என்னைப் பார்த்ததும் தலையில் கைவைத்தபடி "அய்யோ மறந்துட்டன்டா" என்றார்.
ஏமாற்றம், அழுகை, கோபம் மூன்றும் ஒரே நேரத்தில் வந்து அழுத்தியது. விருட்டென திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.
"நாளைக்கு கட்டாயம் எடுத்து வர்றேன்டா" மதி அண்ணன் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாதபடி நடையின் வேகத்தைக் கூட்டினேன்.
வீட்டிற்கு வரும் வழியில் சர்ச்சிற்கு பின்னால் வளர்ந்திருந்த கொடிக்காய் மரத்தடியில் வந்து அமர்ந்துவிட்டேன்.
எப்படியாவது பொன்வண்டை கையில் வாங்கிப் பார்த்து அதை சுப்பிரமணிப் பயலிடம் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது தள்ளிப்போனதை தாங்க இயலவில்லை.
ஏனென்றால் சுப்பிரமணி "மதி அண்ணன் யாருக்கும் பொன் வண்டத் தராது. நான் கேட்டப்பவே தரேன்னு சொல்லி தரல" என்று வேறு சொல்லியிருந்தான். பிடிபட்ட பொன்வண்டுகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்துவிட்டு மரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம்.
நேரமாக நேரமாக ஏமாற்ற உணர்வும் பொன் வண்டைத் தொட்டு விளையாடும் ஆசையும் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் நாமே ஏன் பொன் வண்டைத் தேடிப் பிடிக்கக்கூடாது என்று யோசனை வரத்தொடங்கியது. அதுவும் இந்த மரத்திலேயே தேடினால் என்ன?
எப்படியாவது வீட்டிற்குப் போவதற்குள் ஒரு பொன் வண்டையாவது பிடித்துப் போய் திரவியத்திடம் பெருமையாக காட்டிவிடவேண்டும்.
திரவியத்திற்குத் தெரிந்தால் அவன் சித்தி மகள் பாண்டியம்மாள் மூலம் நீலவேணிக்கு கடத்தப்பட்டுவிடும் இந்தச் செய்தி. பாண்டியம்மாளும் நீலவேணியும் நெருங்கிய தோழிகள்.
பரபரவெனத் தேடத் தொடங்கினேன். மரத்தின் சிறு பொந்துகளில் தொடங்கி மரக்கிளைகளின் நுனிவரை பார்வையால் அலசுகிறேன். எப்படியாவது ஒன்று தட்டுப்பட்டுவிடாதா என்கிற ஏக்கம் எனது தேடலை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது.
அரைமணிநேரத் தேடல் தாண்டியும் அகப்படவில்லை என் கண்களுக்கு எதுவும். மரத்தின் ஒரு பகுதியை உலுக்கியும் பார்த்தாகிவிட்டது. பலனேதுமில்லை. விரக்தி என்னை நிரப்பிக்கொண்டது.
வீட்டில் தேடுவார்கள் என ஞாபகம் வரவே எனது தேடலை நிறுத்திவிட்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.
வழியில்தான் நீலவேணி வீடு.
வழக்கமாக நீலவேணி வீட்டை நான் கடக்கும்போது அதுவாகவே வேகத்தைக் குறைத்துக்கொள்வதுண்டு என் கால்கள்.
சில சமயங்களில் நீலவேணி திண்ணையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும் . எனது நடமாட்டத்தைக் காட்டிக்கொள்ள ஏதாவது ஒரு சினிமா பாட்டை சத்தமாகப் பாடியபடி நடப்பது வழக்கம். அப்படிப் பாடும்போது என்னையும் அறியாமல் தலைமுடியைக் கோதும் வழக்கமும் இருந்தது.
அன்றைக்கு நீலவேணி தோழிகளுடன் வீட்டு வாசலில் பாண்டி ஆடிக்கொண்டிருந்தது. எப்போதும் உடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பாண்டியம்மாளைக் காணவில்லை.
பொன்வண்டு கிடைக்காத வெறுப்பில் நீலவேணியின் முகம் பார்க்கத் தயங்கியது மனம். லேசாக அழுகை வேறு வந்தது. தலை குனிந்தபடியே வேகமாகக் கடந்துவிடும் எண்ணத்தில் விரைவாக நடக்கிறேன்.
சரியாக அவர்களைக் கடந்து நான்கடி தாண்டியிருப்பேன்.
"டேய் பார்த்தி..."
நெருக்கமானவர்கள் மட்டுமே எனை அப்படி அழைப்பதுண்டு.
சத்தம் வந்தவுடன் தானாக நின்றுவிட்டன கால்கள். யாராக இருக்கும்? நீலவேணியா?
இதுவரை நாங்களிருவரும் பேசிக்கொண்டதில்லை. என் பெயர் அதுக்குத் தெரியுமா என்று யோசித்ததில்லை.
"இருங்க பிள்ளைகளா வந்துடறேன்"
என்ற குரலைத் தொடர்ந்து ஒரு ஜோடிக் கொலுசொலி எனை நோக்கி ஓடிவரும் சத்தம்.
திரும்பிப் பார்க்கிறேன்.
நீலவேணியேதான்.
அடிப்பாவி நான் மகிழ்வான மனநிலையில் எத்தனையோ முறை உனைக் கடந்தபோது பேசியிருக்கக்கூடாதா?..
அருகில் வந்து அழகாக மூச்சிறைக்கிறாள்.
"நீ பொன்வண்டு வளக்குறியா?"
பூச்செண்டு ஒன்று பொன்வண்டைப் பற்றி விசாரிக்கிறது..
இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லும் ஆனந்தத்திற்காகத்தானே ஆசைப்பட்டேன்?
இல்லை என்று தலையாட்டி தலை குனிகிறேன்.
"டே யார்ட்ட கத விடுற? உன் தோள்மேலதான உக்காந்திருக்கு" இனிமையான குரலில் இருமடங்கு ஆச்சரியம்!
தலை திருப்பித் தோள்களில் தேடுகிறேன்.
வலதுபுறத் தோளில் அழகாக அமர்ந்திருந்தது அந்தப் பொன்வண்டு. அவ்வளவு பெரிய பொன்வண்டை அதுவரை நான் பார்த்ததில்லை.
"ஏ ரொம்ப அழகா இருக்குப்பா. இன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாளைக்குத் தரவா?"
ஏக்கமாய் கேட்டது அந்த எட்டாம் வகுப்புப் பொன்வண்டு.
எனக்கு இன்னமும் ஆச்சரியம் விலகவில்லை. எப்படிச் சாத்தியமானது இது?
சர்ச் வளாக கொடிக்காய் மர்த்தடியில் அமர்ந்திருந்தபோது சட்டையில் வந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் அந்த சமத்துக் குட்டி.
நாளைக்கே சர்ச்சில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட வேண்டும் என எகிறிக் குதித்தது மனது.
அதற்கு மேல் அந்த இடத்தில் யோசனையில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
"எடுத்துக்கோ நீலவேணி. பொறுமையா தா போதும்" பெருந்தன்மை பெருக்கெடுத்தது எனக்கு.
தன் கையாலேயே என் தோள்தொட்டு பொன்வண்டை எடுத்துக்கொண்டது நீலவேணி.
பாண்டி விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் நீலவேணியைச் சூழ்ந்துகொள்ள
திரும்பி நடையைத் தொடர்கிறேன் நான்!
ததும்பி மிதந்துகொண்டிருந்தது மனது!
நீலவேணியின் ஸ்பரிசம் பட்ட தோளில்
நீண்டு வளரத் தொடங்கியிருந்தது சிறகொன்று!

- நிலவை பாா்த்திபன்




கருப்பண்ணசாமி கோயில்ல
காலைலயே கூட்டம்!
உடுக்கச் சத்தம்
ஊரையே மெரட்டுது!
முத்துராசு பொண்டாட்டிய
முனியடிச்சிருச்சாம்!
அப்படித்தேன் பேசிக்கிட்டாக ஊருக்குள்ள!
அங்கிட்டு
புருவம் வரைக்கும் பூசுன விபூதிப்பட்ட,
நடுவுல சதுரமுமில்லாம வட்டமுமில்லாம
சந்தனப்பொட்டு குங்குமம்னு
கையில உடுக்கயோட
கண்ண உருட்டிக்கிட்டு நிக்கிறாரு
பூசாரி!
எதுத்தாப்புல எதையோ வெறிச்சமேனிக்கு
எனக்கென்னான்னு நிக்குது
முத்துராசு பொண்டாட்டி மரிக்கொழுந்து!
கும்புட்ட கை கும்புட்டமேனிக்கு
பம்மிக்கிட்டு நிக்கிறாப்ல முத்துராசு
அவ முதுகுக்கு பின்னாடி !
"ஏய்....வந்துருக்கது யாருன்னு சொல்லு"
வறட்டுக் கத்தா கத்துறாரு பூசாரி!
மசுரே போச்சுன்னு நிக்குது மரிக்கொழுந்து!
"வகுத்துப்புள்ளக்காரின்னு பாக்குறேன்...
இல்லன்னா வரி வரியா உரிச்சுப்புடுவேன் பாத்துக்க..!"
சவுக்க கண்ணுல காட்டி
சத்தம் போட்டுப் பாக்குறாரு...
சட்ட பண்ணல மரிக்கொழுந்து!
"பேய் முனியா இருக்குமோ?"
பூசாரி காதுல குசுகுசுன்னு கேக்குறாப்ல
முத்துராசோட மூனாம் பங்காளி முருகேசன்!
"ஊமக் காட்டேரி உள்ள எறங்கியிருக்கு... அதேன் பேசமாட்டிங்குது புள்ள"
புதுசா கொளுத்திப் போட்டு
பீதியக் கெளப்புறாரு பூசாரி!
"காட்டேரியோ கரகாட்டக்காரியோ..
வெரசா வெரட்டி விடுங்க பூசாரி..
வேல கெடக்கு"
தெனாவட்டா பூசாரியவே அரட்டுது
மரிக்கொழுந்தோட மாமியா மாகாளி!
"நாளையிலருந்து நாலு நாளைக்கு
நடுச்சாம பூச பண்ணுனா எதுவா இருந்தாலும் எறங்கி ஓடீரும்"!
அந்த நேரத்துல அதேன் வந்துச்சு பூசாரி வாயில பாவம்!
கூட்டம் கலைய ஆரம்பிக்க
பொத்துனாப்ல பொண்டாட்டிய கூட்டிட்டுக் கெளம்புறாப்ல முத்துராசு!
"மூனாவதும் பொட்டப் புள்ளயப் பெத்துப் போட்டீனா,
மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு
ங்கொப்பென் வீட்டுக்கே
போயிற வேண்டியதுதான்"னு மாமியாக்காரி சொன்னது
ஒரு பக்கம்....
வகுத்துல இருக்கது பொட்டப்புள்ளதேன்னு
முந்தாநேத்து சந்த வாசல்ல கிளிசோசியக்காரன் சொன்னது இன்னொரு பக்கம்!
ரெண்டையும் மாறி மாறி
ரோசன பண்ணி
மண்ட காஞ்சு கெடக்குது மரிக்கொழுந்துன்னு
பேயோட்டுற பூசாரிக்கும் தெரியல!
அவரு வாயப் பாத்து நின்ன முத்துராசுக்கும் தெரியல!
அவசரமா பேயோட்ட வேண்டியது
அந்தப் புள்ளயோட மாமியாகாரிக்குதேன்னு நெனச்சோ என்னமோ
அங்கிட்டு வழக்கத்தவிட ஆவேசமா நிக்கிறாரு
வடக்க பாத்து கருப்புசாமி!

- நிலவை பாா்த்திபன்




பங்குனி வந்தாத்தேன்
பத்தொம்போது வயசு முடியுது பஞ்சவர்ணத்துக்கு!
பஞ்சாயத்து போர்டுல
வேல பாக்குற மாப்ள அமையவும்
படக்குன்னு பரிசம் போட்டுட்டாக!
எம்புட்டோ கெஞ்சிப் பாத்துச்சு புள்ள!
வம்படியா வாசல்ல பந்தக்கால ஊன்டிப்புட்டாப்ள காத்தமுத்து!
அவரச் சொல்லியும் குத்தமில்ல...
"ஆளாயி அஞ்சாரு வருசமாச்சு,
தாயில்லாத பொட்டப் புள்ள
காலாகாலத்துல கண்ணாலத்த முடிச்சுவிட்று சாமி"
அப்படீன்னு பெரியாத்தாவோட பொலம்பல் ஒரு பக்கம்!
"நீயே தோட்டங்காடுன்னு
பொழுதுக்கும் அல்லாடிக்கிட்டு கெடக்க!
நடு நடுவுல ரத்த கொதிப்புன்னு
பத்து நாளைக்கு ஒரு தடவ
சித்த வைத்தியர் வீட்டு வாசல்ல போயி நிக்கிற!"
நடமாட்டத்துல இருக்கும்போதே
நல்ல எடமா பாத்து
கட்டிக் குடுத்துறுய்யா முத்து...
அப்படீன்னு ஊர் பெருசுக வேற
உசுப்பேத்தி விட்றுச்சுக இன்னோரு பக்கம்!
மாப்ள வீட்டப் பத்தி விசாரிச்ச வரையில
நல்ல மருவாதியான குடும்பம்!
டவுன்ல ஒரக்கட வேற வச்சிருக்காக..
சொத்து பத்துக்கு ஒன்னும் கொறச்சலில்ல!
வேறென்ன வேணும்னு
வெறசா நாள் குறிச்சிட்டாப்ள!
பொத்திப் பொத்தி வளத்த
ஒத்தப் புள்ள பஞ்சவர்ணம்!
படிப்பு வரமாட்டீங்குதுன்னு
பன்னெண்டாப்ப பாதியிலயே நிப்பாட்டிருச்சு!
ஆத்தா செத்த
இந்த அஞ்சு வருசத்துல
பொறுப்பா அப்பனயும் பெரியாத்தாவயும் பாத்துக்கிடுச்சு!
இங்கனயே சுத்திக்கிட்டு கெடக்குற புள்ள
டவுனுக்கு வாக்கப்பட்டுப் போச்சுன்னா
நாலு நல்லது கெட்டதப் பாத்து சந்தோசப்பட்டுக்கிடும்!
இதேன் காத்தமுத்தோட நெனப்பு!
கல்யாணம், மறுவீட்டுச் சாங்கியம்லாம்
முடிஞ்சு
பொண்ணு மாப்ள ஊருக்கு கெளம்புறாக..
"போய்ட்டு வாரேம்பா" ண்டு சொல்லும்போதே
பொத்துக்குட்டு ஊத்துது கண்ணீரு
பஞ்சவர்ணத்துக்கு!
அப்பனை தனியா விட்டுப் போறமேண்டுதான்
அம்புட்டுக் கவலையும்
அந்தப் புள்ளைக்கி!
"நீ வெசனப்படாம போய்ட்டு வா தாயி
அதேன் பெரியாத்தா எங்கூட இருக்குல்ல.."
கயித்துக் கட்டுலே கதீண்டு கெடக்குற
கெழவிய காட்டி ஆறுதல் சொல்றாப்ள காத்தமுத்து!
வண்டி கெளம்பி வடக்க போயி மறஞ்சிருச்சு!
இங்கிட்டு மம்பட்டிய தோள்ல மாட்டிக்கிட்டு
தோடத்துக்கு தண்ணி பாச்ச கெளம்பிட்டாப்ள காத்தமுத்து!
மழ பேஞ்ச காட்டுக்கு
மம்பட்டியோட போறானேண்டு
மண்டையச் சொறியுது பெரியாத்தா...
பொறவு?
ஆளு அரவமில்லாத காட்டுலதான
அவரு அழுது தேம்புறத பாக்க
ஆள் யாரும் இருக்காது?
என்ன செய்ய?
"ஆம்பள அழுகக்கூடாதுடா" ண்டு
அடிக்கடி சொல்லி வளத்து விட்ருச்சு
பெரியாத்தா...

- நிலவை பாா்த்திபன்



அப்ப நான் எட்டாப்பு படிச்சிட்டிருக்கேன்
உள் பாக்கெட் வச்ச சட்ட போடணும்னு ஒரு ஆச அப்ப. எப்போ இருந்து அந்த ஆச தொடங்குச்சுன்னு சரியா சொல்லத் தெரியல.
வீட்ல அப்பாவோ இல்ல சொந்தக்காரங்களோ யாரும் உள் பாக்கெட் வச்ச சட்ட போட்டு பாத்ததில்ல. ஆனா கடை வீதியிலயும் சந்தையிலயும் நெறய பேரு உள் பையில காசெடுக்க, வைக்க பாத்திருக்கேன்.
குறிப்பா எங்க தெருவுக்கு சைக்கிள்ல மீன் விக்க வர்ற தாத்தா, ஐஸ் வண்டி அண்ணன் அப்புறம் பிளாஸ்டிக் குடம் விக்க வர்றவரு இவங்க எல்லாம் உள் ஜோப்புல இருந்து காச எடுத்துப் பாத்திருக்கேன்.
அதுலயும் அந்த குடம் விக்கிற அண்ணன நல்லா ஞாபகம் இருக்கு. பெரும்பாலும் சில்றக் காசுன்னா மடிச்சுக் கட்டுன கைலிய சைடுல லேசா தூக்கிவிட்டு டவுசர் பாக்கெட்ல போட்டுக்குவாரு. ஒத்த ரூவா, ரெண்டு ரூவா, அஞ்சு ரூவா நோட்டல்லாம் வெளி சட்ட பையில. பத்து ரூவாய்க்கு மேல பெரிய நோட்டெல்லாம் உள் ஜோப்புக்கு போயிரும். அதுக்கு வசதியா சட்டைல மேல ரெண்டு பட்டன் தொறந்துதான் கெடக்கும்.
அப்பெல்லாம் நாமளும் இது மாதிரி உள் பாக்கெட் வச்ச சட்ட போடணும்னு தோணும்.
இப்பிடி இருக்கும்போதுதான் பள்ளிக்கூடத்துல கூடப் படிக்கிற மூர்த்திப் பய ஒரு நாள் புதுச் சட்ட போட்டு வர்றான் வகுப்புக்கு. அதுவும் உள் பாக்கெட்டோட.
அன்னைக்கெல்லாம் அவனோட அலப்பறைய பாக்கணுமே. எப்பவும் ஜாமின்ட்ரி பாக்ஸ்ல வக்கிற பேனாவ உள் பாக்கெட்டுல வச்சிக்கிட்டு அத பொழுதுக்கும் வெளிய எடுக்குறதும் உள்ள வக்கிறதுமா ஓவர் அலும்பு. இதுல ரெண்டு அல்லக்கை பய புள்ளைக அவன் கூடவே இருந்துகிட்டு அந்த சட்டையப் பத்தியே பேசிக்கிட்டுருக்காய்ங்க.
அத விட முக்கியமா வகுப்புல பசங்க பக்கம் எது நடந்தாலும் கண்டுக்காம இருக்குற வானதியே இந்த மூர்த்திப் பய பண்ற சேட்டைய அப்பப்ப திரும்பிப் பாக்குது.
(வானதியப் பத்தி இங்க சொல்லியே ஆகணும். வகுப்புலேயே உயரமான பொண்ணு அதுதான். ரெண்டாவது ரேங்க் எடுக்கும். ரெட்ட ஜட போட்டு நெத்தியில மெல்லிசா சந்தனப் பொட்டு ஒன்னு வச்சி வரும். பள்ளிக்கூடத்துல சுதந்திர தின ஊர்வலத்துல வானதிக்குத்தான் பாரத மாதா வேசம் போடுவாங்க. அம்புட்டு அம்சமா இருக்கும்).
ஆக அப்பவே முடிவு பண்ணிட்டேன் அடுத்த தடவ சட்ட தைக்கும்போது உள் பாக்கெட் வச்சே ஆகணும்னு.
போன வாட்டி தீபாவளிக்கு சட்ட தைக்கக் குடுத்தபோதே சற்குணம் டெய்லர்ட்ட உள்பை வைக்கச் சொல்லியிருந்தும் மறந்துட்டாரு. அவரு மறந்துட்டேன்னு சொல்லியிருந்தாக்கூட கொஞ்சம்தான் கோவம் வந்துருக்கும். ஆனா "சின்னப் பயலுக உள் பாக்கெட் வச்ச சட்ட போட்டா நெஞ்சுல தேமல் வரும்"னு சொன்னதத்தான் ஏத்துக்கவே முடியல.
அடுத்த முறை துணி எடுக்கிற சந்தர்ப்பமும் வந்துச்சு. பிறந்தநாளுக்காக. இந்தத் தடவ சற்குணம் டெய்லர்ட்ட எனக்கு தேமல் வந்தாலும் பரவால்ல. உள் பாக்கெட் வைக்க மட்டும் மறந்துறாதீங்கன்னு சொன்னதோட அவர் தச்சு முடிக்கிற நாள் வரைக்கும் நடு நடுவுல அவர் கடைக்குப் போயி ஞாபகப்படுத்திட்டே வந்தேன்.
ஒரு வழியா இந்தத் தடவ உள் பாக்கெட் வச்சு குடுத்துட்டாரு. இதுல ஒரு சின்ன வருத்தம் என்னன்னா இந்த வாட்டி பிறந்தநாள் சனிக்கிழமைல வருது. பள்ளிக்கூடம் லீவு. புதுச்சட்டைய பள்ளிக்கூடத்துக்கு போட்டுப் போக இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணும்.
சனிக்கிழமை புதுச்சட்டையோட தெருவ பல முற சுத்தி வந்தாச்சு. உள் பாக்கெட் இருக்குறது எல்லோருக்கும் தெரியணும்னு கை நிறைய பொறிகடலைய அள்ளி அத உள் ஜோப்புல போட்டு அப்பப்ப அத எடுத்து தின்னுக்கிட்டு திரிஞ்சேன். "பொறிகடலைய டவுசர் பையில போட்டுத் திங்காம ஏன்டா இப்படி கஷ்டப்பட்டு திங்கிற"ன்னு முக்கு வீட்டு சுந்தரி அக்கா கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லல.
ஒரு வழியா திங்கக் கிழம வந்துருச்சு. சீக்கிரம் எழுந்து குளிச்சுக் கிளம்பி அதே புதுச் சட்டைய போட்டு எட்டர மணிக்கு முன்னாடியே பள்ளிக்கூடம் போயாச்சு.
கார்த்திகாவுக்கு வீடு பள்ளிக்கூடம் பின்னாலயே இருந்ததால மொத ஆளா பள்ளிக்கூடம் வந்துரும். கார்த்திகாட்ட எதையாவது தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருக்கணும் இந்த வடிவேல் பயலுக்கு. அதனால அவனும் சீக்கிரமாவே வந்துட்டான். "என்னடா புதுச்சட்டையா? " வடிவேலுதான் ஆரம்பிச்சான். முந்தாநேத்து பிறந்தநாள்னு சொல்லி உள் பாக்கெட்ல இருந்து நியூட்ரின் சாக்லேட் எடுத்துக் குடுத்தேன். கார்த்திகாவும் வாங்கிக்கிடுச்சு. "உன் சட்டையிலயும் உள் பாக்கெட் இருக்காடா"? வடிவேல் இப்படிக் கேட்டதுல அந்த "யும்" எனக்கு பிடிக்கல.
அடுத்தடுத்து யார் யார் புதுச்சட்டையப் பத்தி கேக்குறாங்களோ அவங்களுக்கு மட்டும் உள் பாக்கெட்ல இருந்து சாக்லேட் எடுத்துத் தந்துக்கிட்டு இருந்தேன். அப்படிக் குடுக்கும்போது வானதி என்னப் பாக்குதான்னு பாத்துக்குவேன். நான் நெனச்ச மாதிரியே வானதி என்ன கண்டுக்கல.
அடுத்து அறிவியல் வகுப்புல போர்ட பாத்து படம் வரையும்போது அழி ரப்பர உள் பையில இருந்து எடுத்து எடுத்து அழிச்சத பாத்து சில பேரு கடுப்பானத பாக்க முடிஞ்சது. மூர்த்தி பய போயி டீச்சர்கிட்ட என்னமோ சொல்ல டீச்சர் எம்பேர கூப்பிட்டு சட்ட பட்டன ஒழுங்கா போடுன்னு சத்தம் போட்டாங்க.
அதுவரைக்கும் ஏம்பக்கம் திரும்பாம இருந்த வானதி இப்பன்னு பாத்து திரும்பி பாக்குது. உள் பாக்கெட்டுல இருந்து சாக்லேட்டையும் ரப்பரையும் எடுக்க முதல் பட்டன திறந்து விட்டதப் பாத்துட்டு மூர்த்தி மூதேவி போட்டுக் குடுத்திருச்சு.
சாப்பாட்டுக்கு மணி அடிச்சதும் இதப்பத்தி மூர்த்திட்ட கேக்கப்போக அவனுக்கும் எனக்கும் சண்டையாகிப் போச்சு. ரெண்டு பேரும் கட்டி உருண்டதுல மூர்த்தி என்னோட புது சட்டய கிழிச்சிட்டான். ஆத்திரமும் அதிர்ச்சியுமா பின்னாடி திரும்பிப் பாக்குறேன்... வானதியோட கூட்டாளி கலைச்செல்வி வானதி காதுல ஏதோ சொல்ல ரெண்டும் வாயப் பொத்தி சிரிக்குதுங்க.
அவ்வளவுதான் எங்க இருந்து அவ்வளவு கோவம் வந்துச்சுன்னு தெரியாது, மூர்த்திப் பய மூஞ்சில குத்துன குத்துல அவன் சில்லு மூக்கு ஒடஞ்சு சிந்துது ரத்தம்.
அப்புறம் விசயம் ஹெச்செம் வரைக்கும் போயி ரெண்டு பெரம்படியோட முடிஞ்சது. சட்ட கிழிஞ்ச வருத்தத்த விட, அடி வாங்குன வருத்தத்த விட வானதி சிரிச்ச வருத்தம்தான் அதிகமா இருந்துச்சு. அடுத்த ரெண்டு நாள் வீட்லயும் சரி பள்ளிக்கூடத்துலயும் சரி யார்ட்டயும் சரியா பேசல. குறிப்பா வானதி பக்கம் திரும்பிக்கூட பாக்கல.
சட்ட கிழிஞ்ச அன்னைக்கே அக்கா அத தச்சி தந்திருந்தாலும் மறுபடி அந்த சட்டையப் போட மனசு வரல. அப்படியே ரெண்டு மூணு மாசம் ஓடுச்சு.
ஒரு நாள் பிஈடி சார் வகுப்புக்கு வந்து "நாளைக்கு குரூப் போட்டோ எடுக்க வர்றாங்க. அதனால எல்லாரும் தலைக்கு சாம்பு போட்டுக் குளிச்சிட்டு இருக்குறதுலயே புது ட்ரஸ்ஸா பாத்து போட்டு வங்க" ன்னாரு. அப்பக்கூட எனக்கு அந்த உள் பாக்கெட் வச்ச சட்ட போடனும்னு தோணல. போன தீபாவளிக்கு எடுத்த செகப்பு கலர் சட்டையத்தான் போட்டுப் போனேன்.
குரூப் போட்டோ எடுத்து முடிச்சு வகுப்புக்குத் திரும்பும்போது கார்த்திகா வந்து "ஏன்டா உன் பிறந்தநாள் சட்டய போட்டு வரல? நல்லாத்தான இருந்துச்சு" அப்படீன்னு கேட்டுச்சு. "நானே அந்த சட்டய மறந்துட்டேன் நீ எப்படி ஞாபகம் வச்சிருக்க"?ன்னு கேட்டேன். "வானதி தாம்பா கேக்கச் சொல்லுச்சு". கார்த்திகா அப்படிச் சொல்லும்போதே பின்னாடி சந்தன வாசன.
திரும்புனா வானதி என்னப் பாத்து மெல்லிசா சிரிக்குது. அன்னைக்கு வாயப் பொத்தி சிரிச்சதுக்கும் இந்த சிரிப்புக்கும் ஆயிரம் வித்தியாசம்.
இன்னும் சரியா சொல்லணும்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போட்டோ எடுக்கும்போது கேமராவுல வந்துச்சே ஒரு வெளிச்சம் அந்த வெளிச்சத்த வானதி முகத்துல மறுபடியும் பாத்தேன்.
தேமல் வரும்னு சொன்ன சற்குணம் டெய்லர்ட்ட அப்பவே போயி சத்தமா சொல்லணும்னு தோணுச்சு "வந்தது தேமல் இல்ல தேவதைன்னு".
இத்தன வருசத்துக்கு அப்புறம் இதோ இப்ப இத எழுதும்போதுகூட ஒரு நிமிசம் கண்ண மூடிப் பாக்குறேன்.....
இம்மியளவும் குறையாம அதே வெளிச்சம் அப்பிடியே மனசுக்குள்ள....

- நிலவை பார்த்திபன்



பாப்பம்மாள பாம்பு கடிச்சிருச்சு!
காலைல வெள்ளன எந்திரிச்சி வெள்ளாம காட்டுக்கு வேல செய்யப் போன புள்ளைக்கு வக்யப் போருக்குத் தெக்க "சுருக்"குனு என்னமோ கால்ல குத்துனாமாரி இருந்திருக்கு...
சுள்ளி கிள்ளி ஏதாச்சும் குத்தியிருக்கும்னு நெனச்சுக்கிட்டு சும்மா இருந்திருச்சு
செத்த நேரத்துக்கெல்லாம் காலு கங்கா காந்துது.... கண்ணு வேற லேசா இருட்டுக்கட்டவும்
"யெப்பே எனக்கு கிறுகிறுன்டு வருதுப்பே"ன்னு
சொன்னமேனிக்கு கீழ உக்காந்துருச்சு
மக சத்தம் கேட்டு அங்குட்டு மட வெட்டிக்கிருந்த மாசானம் மம்பட்டிய போட்டுட்டு ஓடியாறாரு
கூடவே மாசானத்தோட தம்பி மயன் கதிரேசனும் அரக்கப் பறக்க ஓடியாரியான்
கிட்ட வந்து என்னக்கா ஆச்சுன்டு கேக்கவும்...விசயத்தச் சொல்லி அழுகுது பாப்பம்மா
"போய் அங்க என்னான்டு பார்ரா" ன்னு கதிரேசன பத்திவிட்டு பாப்பம்மா காலப் பாக்குறாரு மாசானம். வலது காலு சுண்டு வெரலுக்கு மேல லேசா ரத்தம் கசியிது!
ஏதோ பூச்சிக்கடின்டு தெரியுது, என்னன்னு மட்டுப்படல...
அங்கிட்டு வக்யப்போரு பக்கம் பாக்கப்போன கதிரேசன் பெரியப்பா... ன்டு கத்திக்கிட்டே உசுர வெறுத்துக்கிட்டு ஓடியாரியான்.
என்னடான்டு கேட்டா..
"இத்தேத்தண்டி பாம்பு.... வேலிக்கு அங்குட்டு வேகமா போகுது" ன்டு ரெண்டு கையயும் நெட்டுக்க விரிச்சுக் காட்றியான்
பாப்பம்மா அத கேட்டு மறுபடியும் அழுக ஆரம்பிக்க...மாசானத்துக்கு விசுக்குன்னு போச்சு. பயத்த காட்டிக்கிடாம "நீ பயப்படாதத்தா.... அது தண்ணிப்பாம்புதேன்... ரெண்டு நாளா இங்கனையே சுத்திக்கிருக்கு... இந்தாருக்கு வைத்தியர் வீடு இப்ப போயிரலாம்" மகள தேத்திக்கிட்டே கைலியக் கிழிச்சு பாப்பம்மா கால்ல இருக்கக் கட்டுறாரு.
அக்காவப் பாத்துக்கடா இந்தா வந்துற்றேன்டு சொல்லிட்டு பம்பு செட்டு பக்கம் ஓடுறாரு.
பத்தடி ஓடுன ஆளு திரும்பி" அக்கா தண்ணி கிண்ணி கேட்டுச்சுன்னா குடுத்துறாதரா.." சொல்லிட்டு திரும்ப ஓடுறாரு..
பம்புசெட்டுக்கு இங்குட்டு நாலஞ்சு வாழமரம் ஏழடிக்கு மேல வளந்து நிக்கிது. எல்லாம் பாப்பம்மா வச்சதுதேன்.
நேரா மோட்டார் ரூம்புக்கு ஓடுன மாசானம் உள்ளருந்து அருவாளையம் ஒரு ஓலப் பாயையும் எடுத்து வந்து வாழ மரத்துல ரெண்ட வெட்டி விருவிருன்டு பட்டைய உரிக்கிறாரு. உரிச்ச மட்டைய பாயோட சேத்து பாப்பம்மாட்ட ஓடியாராரு.
பாய கீழ விரிச்சி அதுமேல வாழமட்டைய விரிச்சி பாப்பம்மாள அதுல படுக்கப்போட்டு அப்பனும் தம்பியுமா தூக்கிட்டு ஓடுறாக...
அங்க இருந்து அரக் கிலோமீட்டர் தூரந்தேன் வைத்தியர் சிவகொழுந்து வீடு.
ஒருவழியா பத்து நிமிசத்துக்குள்ள வைத்தியர் வீட்டுக்கு வந்துட்டாக. மேலையும் கீழையுமா மூச்சு வாங்குது மாசானத்துக்கும் கதிரேசனுக்கும்.
வெளிய நின்டு பல்லு வெளக்கிக்கிட்டிருந்த சிவகொழுந்து வேப்பங்குச்சிய தூக்கி எரிஞ்சுபுட்டு "என்ன மாசானம்.. புள்ளைக்கு என்ன?"ன்டு கேட்டமேனிக்கு கிட்டக்க ஓடியாராரு...
அந்த வட்டாரத்தில சிவகொழுந்து கெட்டிக்கார வைத்தியரு. ஆனா பாத்தா யாரும் அப்படிச் சொல்ல மாட்டாக...
பரட்டத் தல, வெள்ளத் தாடி, சட்ட போடமாட்டாரு. பச்ச வேட்டி பச்சத் துண்டோட ஊருக்குள்ள சுத்திக்கிருப்பாரு. தரகு வேலையும் பாக்குறதுவாசி, அதுவிசயமா எங்கயாவது அசலூரு போகணும்னாத்தேன் சட்ட போடுவாரு.
ரத்தக் கொதிப்புல இருந்து பித்தப்பை கோளாறு வரைக்கும் நாடியப் பிடிச்சே நறுக்குனு சொல்லிப்புடுவாரு.
பாப்பம்மாள வாழமட்டைல படுக்கவச்சு தூக்கியாந்தத பாத்தவுடனே சிவகொழுந்துக்கு புரிஞ்சிருச்சு.
"சூதானமா எறக்குங்கப்பா"ன்னு அவரும் ஒரு கை பிடிச்சு பாப்பம்மாள கீழ எறக்குறாரு.
பாப்பம்மா மூஞ்சியப் பாத்து "புள்ள முழிச்சித்தான இருக்கு அப்ப பரவால்ல" ன்னுட்டு மாசானம் பக்கம் திரும்பி பாம்ப அடிச்சாச்சா? என்ன பாம்புன்னு பாத்தீயளா?
கேட்டுக்கிட்டே பாப்பம்மா கண்ண ரெண்டையும் இமய தூக்கி பாக்குறாரு.
"எங்கன பாப்பா கடிச்சுச்சு"?
காலக் காட்டுது பாப்பம்மா.
பாத்தா..கடிவாய் வீங்கிக் கெடக்கு!
மாசானம் கட்டுன கைலித்துணிய அவுக்குறாரு. " ஏம்பா..இம்புட்டு இறுக்கியா கட்டுறது..?" மொனகிக்கிடே வெள்ளத் துணிய மஞ்சத்தண்ணில முக்கி கடிச்ச எடத்த தொடச்சிட்டு பாக்குறாரு. பாத்தவொடனே தெரிஞ்சிருச்சு அவருக்கு. இருந்தாலும் குனிஞ்சு கடிவாய மோந்து பாக்குறாரு.
இங்குட்டு திரும்பி...
"மாசானம்...பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல" வெசப்பாம்பு கடிச்சாமாரித் தெரில..."
இதக்கேக்கவுந்தேன் மாசானத்துக்கு நிம்மதியே வருது. பாப்பம்மாளுக்கும் பதட்டம் கொறைய ஆரம்பிச்சு எந்திரிச்சி ஒக்காருது.
வேப்பெல கொழுந்துல அஞ்சாறு தழய குடுத்து பாப்பம்மாள மெல்லச் சொல்றாரு. "கசப்பு தெரியுதா தாயி?"
ஆமான்டு மண்டையாட்டுது புள்ள. "பொறவென்ன... மருந்து தாரேன், எல்லாஞ் சரியாப் போயிரும்.. "
ஆமணக்கு எலைய கைப்பிடி அள்ளி மெளகு சேத்து தண்ணி விட்டு அரச்சுத் தாராரு. அடுத்த அஞ்சு நிமிசத்துல புள்ள வாந்தி எடுக்குது.
"அம்புட்டுத்தேன்... சரியா போச்சு. வாழச்சாறு கொஞ்சம் தாரேன் குடிச்சதும் எதுக்கும் கவுர்மன்டு ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு கூட்டிப் போயிட்டு வந்துரு மாசானம். ஒம் பொஞ்சாதி ஒச்சாயிட்ட சொல்லி ரெண்டு நாளைக்கு பாசிப்பருப்பு சேத்த பச்சரிசி பொங்கல் மட்டும் வச்சுக்குடுக்கச் சொல்லு. எண்ண, காரம் ஆகாது பாத்துக்க"
சிவகொழுந்து இப்படிச் சொல்லவும்
"அதேன் நீங்க மருந்து குடுத்துட்டீகள்ள? பொறவெதுக்கு ஆஸ்பத்திரி"? சந்தேகமா கேக்குறாரு மாசானம். சிவகொழுந்து வைத்தியத்துல அம்புட்டு நம்பிக்க அவருக்கு
"வெள்ளிக்கிழம பூசாரிபட்டில இருந்து பாப்பம்மாள பொண்ணு பாக்க வாராகல்ல? மறந்துட்டியா? அன்னைக்கின்டு புள்ள சோர்வா வந்து நின்டுச்சுன்னா நல்லாவா இருக்கும்? "
சரியாத்தான் சொல்றாரு வைத்தியருன்னு நெனச்சுக்குட்டு ஆஸ்பத்திரி கூட்டுப்போறாக பாப்பம்மாள.
எல்லாஞ் சரியாப் போச்சு ரெண்டு நாள்ல. புள்ளையும் வெடிப்பா எந்திரிச்சி ஒக்காந்துருச்சு. ஆனா வெள்ளிக்கிழம பொண்ணு பாக்க வாரதாச் சொன்ன பூசாரிபட்டிக்காரவக மதியம் வரைக்கும் வரல.
சிவகொழுந்து போன் போட்டுக் கேக்கவும்,.. "பொண்ணுக்கு பாம்பு கடிச்சது நல்ல சகுனமா தெரியல. அதுவாசி நீங்க வேற எடம் பாத்துக்குங்க"ன்டாக. பாம்பு கடிச்ச விசயம் பூசாரிபட்டி வரைக்கும் எப்பிடிப் போச்சுன்டு தெரியல..
பாப்பம்மாளுக்கு பொசுக்குனு போச்சு பாவம். கண்டக்டர் மாப்புளன்னு சொல்லவும் கனவோட திரிஞ்சிச்சு. இப்ப படக்குன்டு இப்படிச் சொல்லவும் ஒரு மாதிரி ஆயிருச்சு புள்ள.
நாலு நாளா மந்திரிச்சு விட்டா மாதிரியே சுத்துது பாவம். "ஏ கிறுக்குக் கழுத..இதுக்குப் போயா மொகரைய தூக்கி வப்பாக? இதவிட நல்ல இடம் வராமயா போயிறும்"? அப்பனும் ஆத்தாவும் இப்பிடி ஆறுதல் சொன்னாலும் அவுகளுக்கும் உள்ளார கொஞ்சம் சங்கடந்தேன். ஆனா வெளிய காட்டிக்கிடல.
ஏன்னா ஏற்கனவே ஏழெட்டு எடத்துல இருந்து வந்து பாத்துட்டுப் போயும் எதுவும் அமையல. இந்த பூசாரிபட்டி சாதகம் நல்லா பொருந்திருக்குன்னு செக்காம்பட்டி சோசியர் சொல்லிருந்தாரு. அவுகளும் பணம் நகநட்டுன்டு பெருசா எதிர்பாக்கல.
போட்டா அனுப்பி குடும்ப விசயமெல்லாம் ஏற்கனவே பேசியாச்சு. சும்மா சாங்கியத்துக்கு ஒரு வாட்டி பொண்ண பாத்துட்டு தட்டு மாத்திக்கிடலாம்னு பேசி வச்சிருந்தாக. போன மாசம் முத்தாலம்மன் கோயில் திருவிழாலயே பொண்ணும் பையனும் பாத்துக்கிட்டாக.
"கல்யாணத்துக்கு நிக்கிற புள்ளைய தோட்டங்காட்டுக்கு கூட்டிப்போகாதீகன்னு சொன்னா கேட்டாத்தான" மாசானம் பொண்டாட்டி ஒச்சாயி பொலம்பல் வேற ஒரு பக்கம்
மனசே சரியில்ல மாசானத்துக்கு. பேசாம இருளப்பசாமி கோயில்ல போயி ஒக்காந்துட்டாரு. ஒரு மண்நேரமா சாமியவே வெறிச்சிப் பாத்துக்கிட்டிருந்துட்டு படக்குன்டு கெளம்பி தோடத்துக்குப் போயி படுத்துட்டாரு.
மக்கயா நாளு புண்ணாக்கு வாங்க டவுனுக்குப் போன மாசானத்த பெரியசாமி டீக்கடைக்கிட்ட மறிக்கிறாரு சிவகொழுந்து.
"விசயம் தெரியுமா மாசானம்? நம்ம பாப்பம்மாள பொண்ணு பாக்க வாரேன்டு அப்புறம் அபசகுணம்னு சொல்லி வேணாம்னாய்ங்கள்ல.. அந்த பூசாரிபட்டிக்காரய்ங்க.. மக்யாநாளே ராசக்காபாளயத்துல ஒரு பொண்ண பேசி முடிச்சிட்டாய்ங்க... "
மாசானத்துக்கு எரிச்சலாகிப் போச்சு.
"அதேன் வேணாம்னு போய்ட்டாய்ங்கள்ல அப்பறம் அவிங்க எங்க பேசி முடிச்சா எனக்கென்ன?" சொல்லிட்டு கெளம்புன மாசானத்த மறுபடியும் மறிக்கிறாரு சிவகொழுந்து.
"அட அதில்லப்பா.. அந்த மாப்புள பயலோட அம்மாவ நேத்து பாம்பு கடிச்சிருச்சாம். பெரியாஸ்பத்திரில சேத்துருக்காக. இன்னும் கண்ணு முழிக்கலையாம்.. "
மாசானம் இத எதிர்பாக்கல..
"ஒங்களுக்கு சொன்னது யாரு"
கடசி வாய் டீய குடிச்சி முடிச்சு கிளாச வச்சுட்டு கிட்டக்க வந்து
"அவுக ஊர்ல மைக் செட்டு போடப் போன நம்ம இருளப்பன்தேன்" அப்படீங்கிறாரு சிவகொழுந்து..
இருளப்பன்னு பேரக் கேக்கவும் என்ன நெனச்சாரோ தெரியல... அப்பிடியே டீக்கட பெஞ்சுல ஒக்காந்துட்டாரு மாசானம்...
டீ சாப்புட்றயா யா? சிவகொழுந்து கேட்டதுக்கு பதில் சொல்லாம குனிஞ்சு தரைய பாத்தமேனிக்கே ஒக்காந்திருக்காரு மாசானம் கொள்ள நேரமா....

- நிலவை பார்த்திபன்



ஐஸ் ஐஸ்..பால் ஐஸ், சேமியா ஐஸ்...
அப்படீன்னு சூசையண்ணனோட சத்தம் கேக்க ஆரம்பிச்சிருச்சுன்னா பள்ளிக்கூடத்துல அடுத்த ரெண்டு நிமிசத்துல மணியடிக்கப் போறாகன்டு அர்த்தம்
அது ரீசஸ் பெல்லா இருந்தாலும் சரி
சாப்பாட்டு நேர பெல்லா இருந்தாலும் சரி!
சத்தம் போடறதோட நிக்காம ஐஸ் பெட்டி மூடிய "டப்பு டப்புனு" சத்தம் வர்றாமாதிரி தெறந்து மூடுவாப்ள சூசையண்ணன்!
வாடக சைக்கிள் பின்னாடி கேரியர்ல "அமுதா ஐஸ்" னு எழுதுன வெள்ள கலர் ஐஸ் பெட்டிய இழுத்துப் புடிச்சு கட்டியிருப்பாப்ள.
சூசையண்ணன் சத்தம் பள்ளிக்கூடத்துல அம்புட்டு வகுப்புக்கும் கேக்கும்
மாணிக்கம் வாத்தியார் வகுப்புல இருக்கும்போது ஐஸ் வண்டி சத்தம் கேட்டுச்சுன்னா
"எலே பூராப்பேரும் ஒன்னுக்கு போயிட்டு நேரா வகுப்புக்குத்தேன் வரணும் பாத்துக்கிடுங்க. எவனாவது ஐஸ் வாங்கித் தின்டீங்கன்னா பிச்சுப்புடுவேன்" அப்பிடீம்பாரு.
சூசையண்ணன் ஆளு கொஞ்சம் குட்ட. பெரும்பாலும் சந்தனக் கலர் சட்ட போட்டு மேல ரெண்டு பட்டன தெறந்து விட்றுப்பாப்ள. கீழ டவுசரு தெரியிராப்ல கைலிய மடிச்சுக் கட்டி, தலையில துண்ட வச்சு உருமா மாதிரி கட்டீருப்பாப்ள
பால் ஐஸ், சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், தேங்கா ஐஸ், பெப்சி ஐஸ், டபுள் கலர் ஐஸ்னு ஏகப்பட்ட ஐட்டம் வச்சிருப்பாரு
காச வாங்கிட்டுத்தேன் ஐஸ் பெட்டியத் தெறப்பாப்ள
ஐஸ் வாங்கும்போது கை வழுக்கி கீழ விழுந்திருச்சுன்னா இன்னொரு ஐஸ் எடுத்து குடுத்துட்டு அதுக்கு காசு வாங்கமாட்டாப்ள
"ஒரே ஒரு ஐஸ் குடுண்ணே, நாளைக்கு காசு தாரேன்"டு யாராச்சும் கேட்டா "அப்ப நாளைக்கு வந்து ஐஸ் வாங்கிக்க"ன்னு கராறா பேசுவாப்ள.
ஆனா அந்த மொறப்பு அஞ்சு நிமிசந்தேன். ஐஸ் கேட்ட பய அங்கனையே நின்னு வெறிச்சுப் பாத்துக்கிட்டிருந்தான்னா
"இங்கியார்ரா.. நாளைக்கு ஒழுங்கு மரியாதையா காசக் கொண்டாந்து குடுத்துறணும் சரியா? ... எந்த ஐஸ் வேணும்?" ம்பாரு ஐஸ் பெட்டிக்குள்ள மண்டைய விட்ட மேனிக்கு
ஜவ் மிட்டாய் விக்கிற வசந்தி அக்கா இத பாத்துட்டு "இப்படி இருந்தா எப்புட்றா சூச கட்டுப்படியாகும்" னு கேக்குறப்ப எல்லாம்
"விடுக்கா, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்டா படிக்கிற பிள்ளைகளுக்கு பொசுக்குன்னு போயிறும்ல" அப்படீம்பாப்ள!
யாராச்சும் கை வாயெல்லாம் ஒழுகவிட்டு ஐஸ் திங்கிறத பாத்தா "சட்ட டவுசருல ஒழுக விட்றாதீங்கடா" ன்டு அக்கறையா சொல்லுவாப்ள
மூக்கு ஒழிகிக்கிட்டு இல்லன்னா மூக்க உறிஞ்சிக்கிட்டு யாராச்சும் வந்து ஐஸ் கேட்டா தரவே மாட்டாப்ள
"நாளைக்கு ஒனக்கு காச்ச வந்தா என்னையத்தேன் வைவாக ஒங்க வீட்ல" ன்னு சொல்லி கராறா மாட்டேன்டுறுவாப்ள
அன்னைக்கு அப்படித்தேன் பென்சில் வாங்க வச்சிருந்த காசுல சூசையண்ணங்கிட்ட ஐஸ் வாங்கி திங்க ஆரம்பிச்சிருச்சு நாகலட்சுமி!
வேடிக்க பாக்க வந்த புள்ளதேன்...
மத்தவக ஐஸ் வாங்கித் திங்கிறதப் பாத்து எச்சி ஊறவும் பென்சில் வாங்க வீட்ல குடுத்த காச எடுத்து நீட்டிறிச்சு.
செல்வி பிள்ள வந்து "என்ன கழுத இப்பிடி செஞ்சுபுட்ட"ன்னு கேக்கவுந்தேன் சூசையண்ணனுக்கு வெவரம் தெரிய வருது. படக்கிண்டு காச திருப்பிக் குடுத்துருச்சு அண்ணன்.
பள்ளிக்கூட மணி அடிச்ச பொறவும் ஐச தின்டுக்கிட்டு அங்கனையே நிக்கிற பயலுகள "வெரசா தின்டுபுட்டு பள்ளியோடம் போங்கடா" ன்டு அமட்டுவாப்ள!
அதுக்கேத்த மாதிரி பீட்டி வாத்தியாரும் விசில ஊதுனமேனிக்கு வெளிய நிக்கிற பய புள்ளைகள உள்ள பத்திவட வந்துருவாரு பெரம்போட!
ஐஸ் வண்டியப் பாத்துட்டாருன்னா "ஏல சூச, இப்ப நீ கெளம்புரியா என்னாடே" ம்பாரு
தெனமும் பள்ளிக்கூடத்துப் பக்கம் ஐஸ் வண்டியோட சுத்துற மனுசன காப்பரீச்ச, அரப்பரீச்ச, முழுப்பரீச்ச டயத்துல அங்குட்டு பாக்கவே முடியாது.
கேட்டா "பரிச்ச நேரத்துல சளி காச்சன்னு படுத்துக்கிட்டீங்கன்னா ஏம் மேல பழிய போடுறதுக்கா"? அப்படீன்னு கோளாறா கேப்பாப்ள.
"ஏண்ணே.. பெட்டி நெறைய ஐஸ் வச்சிருக்க, ஆனா ஒருநா கூட நீ ஐஸ் தின்டு நாங்க பாத்ததில்லேயே" அப்படீன்னு கேட்டா, "நமக்கு ஐசெல்லாம் பிடிக்காதுறா, காப்பித்தண்ணிதேன் நமக்கு உசுரு" ம்பாப்ள.
அதுக்கு ஏத்தமாதிரி பயலுக பள்ளிக்கூடத்துக்குள்ள போன மறு நிமுசம் டீக்கட வாசல்லதேன் போயி நிப்பாப்ள.
இப்பிடி எல்லாம் நல்லாத்தேன் போய்க்கிருந்துச்சு. எங்கிருந்துதேன் வந்தாய்ங்களோ தெரியாது பள்ளிக்கூடத்துக்கு நேர் எதுத்தாப்ல புதுசா கோன் ஐஸ் கட ஒன்னு வந்து திடீர்னு மொளச்சிச்சு.
கோன் ஐஸ், கப் ஐஸ், அப்புறம் புதுசு புதுசா ஏதேதோ பேருல வித விதமா வச்சு விக்க ஆரம்பிச்சாய்ங்க
மெல்ல கூட்டமெல்லாம் அந்தப் பக்கம் நகர ஆரம்பிச்சிச்சு. சூசையண்ணன் ஐஸ் ஐஸ்னு என்னதான் கரடியா கத்துனாலும் ஒன்னு ரெண்டு பேரத் தவர வேற யாரும் அண்ணன் பக்கம் போகல.
ஒரு கட்டத்துல சூசையண்ணன் பள்ளிக்கூடம் பக்கம் வாரதே வாரத்துக்கு ஒருநா இல்லன்னா ரெண்டு நாளுன்னு ஆயிப்போச்சு!
அப்படி வர்ற ஒன்னு ரெண்டு நாள்ளையும் அவருகிட்டையே போயி "கோன் ஐஸ் இல்லையாண்ணே" ன்டு கேட்டு ஒரண்ட இழுக்க ஆரம்பிச்சாய்ங்க சில கிருத்தரம் புடிச்ச பயபுள்ளைக..
அப்பறம் செத்த நாள்ள பள்ளிக்கூடம் பக்கமே பாக்க முடியல சூசையண்ணன!
இங்கிட்டு சோன் பப்புடி, பஞ்சு முட்டாய் கடையெல்லாம் வரவும், அண்ணன ஏறக்கொறைய மறந்தே போயிட்டாய்ங்க பயலுக...
எடையில் ஒருவாட்டி நெனப்பு வந்து வசந்தியக்காட்ட கேட்டப்ப "அவன நாம்பாத்தே கொள்ள நா ஆச்சு, நீங்கதேன் அவன்ட ஐஸ் வாங்கித் திங்க மாட்டேன்டீகள்ள..? அதேன் பேப்பர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டியான்"னாக.
அதுக்கப்புறம் பள்ளிக்கூடம் காலேஜெல்லாம் முடிச்சு நடுவுல ஊர்பக்கம் வரும்போது பயலுகட்ட பேசையில எப்பயாச்சும் சூசையண்ணன பத்திப் பேசிக்கிறுவோம்.
இப்ப கல்யாணம் புள்ள குட்டின்டு ஆனபிறகு இங்கன டவுன்ல புதுசு புதுசா ஏகப்பட்ட ஐஸ் க்ரீம் கடைகளப் பாக்க முடியுது. எந்தக் கடையில வாங்கித் தின்னாலும் அன்னைக்கு சூசையண்ணங்கிட்ட குச்சி ஐஸ் வாங்கித்தின்ன திருப்தி கெடைக்கிறதில்ல..
எல்லாத்துக்கும் மேல சூசையண்ணன் காட்டுன அக்கறய இன்னைக்கு நெனைக்கும்போதும் தொண்டைக்கு கீழ சில்லுன்னு இனிக்கும்.
இந்த பால் ஐச தின்னு முடிச்ச பொறவு அந்த குச்சியில லேசா ஒரு இனிப்பு ஒட்டியிருக்குமே... அந்த மாதிரி!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome