Monday, December 31, 2018

நிகழ்வாண்டே நித்திரை கொள்!

புத்தாண்டை வரவேற்க 
எத்தனையோ ஏற்பாடு! 
வழியனுப்ப எவருமின்றி 
வருத்தத்தில் நிகழ்வாண்டு! 

வரும்போதுனை வரவேற்றோம் 
வாஞ்சையோடு எதிர்கொண்டு! 
பிரியும் நேரம் வந்ததின்று 
நிரந்தரமாய் விழிமூடு! 

எத்தனையோ இன்ப துன்பம் 
எமக்களித்தாய் இவ்வாண்டு! 
எல்லாமே முடிகிறது 
இனிதாய் இன்றிரவோடு! 

கனவுகள் பல கொண்டிருந்தோம் 
நீ பிறக்கையிலே நெஞ்சோடு! 
இன்று வரை நிறைவேறா 
கனவுகளும் அதிலுண்டு! 

இரண்டறவே கலந்திருந்தோம் 
இதுவரையில் உன்னோடு! 
வரலாற்றில் உனக்கெனவே 
வலுவாய் ஓர் இடமுண்டு! 

பன்னிரெண்டு மாதங்கள் 
பயணித்தாய் எம்மோடு! 
பயணங்கள் முடியட்டும் 
போய்வா நீ நலமோடு! 

பன்னிரெண்டு மணிக்குப்பின்பு 
பளபளப்பாய் புத்தாண்டு! 
பழையதாகிப்போனாலும் 
மறப்பதுனை எளிதன்று! 

- நிலவை.பார்த்திபன்

Sunday, December 30, 2018

தீக்குச்சிக் கவிதைகள்

திருப்தியின்றியே மரணிக்கின்றன
தினந்தோறும் சில தீக்குச்சிகள்!
சிகரெட்டுக்கு உயிர்கொடுத்துவிட்ட
சிறியதொரு குற்ற உணர்வினால்!
---------------------------------------------------------------------
நமத்துப்போன தீக்குச்சிகள்
நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளன
தங்களை நனைத்துச் சென்ற மழைத்துளிகளுக்கு!
---------------------------------------------------------------------
தீர்ந்துபோன தீப்பெட்டியில்
மீந்திருக்கும் ஒற்றைக் குச்சியில்
ஒட்டியிருக்கிறது கொஞ்சம் மருந்தும்
நிறைய மரண பயமும்!
---------------------------------------------------------------------
தீப்பெட்டிச் சிறையில்
தீர்ப்பெழுதப்பட்ட மரண தண்டனைக் கைதிகளாய் தீக்குச்சிகள்!
தவறேதும் செய்யாதபோதும்
தலை கருகி உயிர் விடுகின்றன
தண்டனை என்ற பெயரில்!
---------------------------------------------------------------------
பொத்திப் பாதுகாத்த
வத்திப்பெட்டியே
"போ வெளியே" எனத் துரத்துவதால்
அதன் பக்கவாட்டில் மோதியே
தற்கொலை செய்துகொள்கின்றன
தீக்குச்சிகள்!
---------------------------------------------------------------------
விதி முடியும் நேரத்திலும்
சில விளக்குகளுக்கு ஒளியேற்றிவிட்டே
விடைபெறுகின்றன தீக்குச்சிகள்!

இந்திப் பாடலுக்கு என் தமிழ் வரிகள்

https://youtu.be/PriYgiqUOlE

மேற்கண்ட youtube linkல் உள்ள ஹிந்தி பாடலுக்கு பதிலாக நான் எழுதிய தமிழ் வார்த்தைகள்...

பல்லவி

பெண்: நித்தம் நித்தம் கண்ணில் ஒரு கனா!
என் நெஞ்சுக்குள்ளே உன்னால் ஒரு வினா!

ஆண்: கண்ணே உன் கனவில் நானா?
நான் காண்பதிங்கே பெண்ணா இல்லை மானா?

பெண்: ஐயோ நீதான் யாரடா!
மையல் கொண்டேன் நானடா!

ஆண்: பெண்ணே என் பேர் சொல்லவா?
கன்னம் தொட்டுனைக் கிள்ளவா?

சரணம் 1

பெண்: வெல்லம் என்று சொல்லி விட்டால் இனிக்குமா?
உன் வெற்று வார்த்தை என்தன் ஆசை தணிக்குமா?

ஆண்: எட்டி நிற்க எனக்கென்ன விருப்பமா?
பெட்டைக் கோழி கண்டால் சேவல் வெறுக்குமா?

பெண்: அன்பே என்னை அள்ளியெடு!
உன் ஆண்மை என்னை வெல்ல விடு!

ஆண்: அழகே உன்னை அள்ளிக் கொடு!
நான் பழகும் வரை சொல்லிக் கொடு!

பெண்: வாடா என்தன் வேடா!
என் வெக்கத்தினை வேட்டையாட!

சரணம் 2

ஆண்: நெஞ்சுக்குள்ளே நீயிருந்து என்னைக் கொல்ல!
நேற்றுவரை பட்ட பாடு என்ன சொல்ல?

பெண்: காதல் தீ சுட்டதுன்னை மட்டுமல்ல!
கன்னி என்தன் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல!

ஆண்: போதும் இந்த இடைவெளி!
உன்னில் பொதிய ஒரு இடமளி!

பெண்: இதயம் எங்கும் இன்ப வலி!
என் மூச்சில் நீயும் முத்துக்குளி!

தேனே உன்னை நானே
தினம் தேடித்தேடி வாடினேனே!

- நிலவை.பார்த்திபன்

கிறிஸ்து ஜெயந்தி

தேவாலயத் தெருக்களெங்கும்
தெள்ளமுத இசைத்துளிகள்!

வீதிகளின் சுவர்களெங்கும்
விவிலியத்தின் பொன்மொழிகள்!

நடு நடுவே வீடுகளில்
நட்சத்திர மின்னொளிகள்!

கிறங்க வைக்கும் அழகுடனே
கிறிஸ்துமஸ் மரக்கிளைகள்!

டிசம்பரில் ஒரு பொன்னாள்!
கிறிஸ்துமஸ் எனும் திருநாள்!
இல்லத்திலும் இதயத்திலும்
இன்பமேற்றும் பெருநாள்!

ஈராறு மாதங்களில்
இதுவுமொரு சிறந்தநாள்!
இறைதூதர் இயேசுபிரான்
இவ்வுலகில் பிறந்தநாள்!

நன்னாளாம் இந்நாளில்
நாடு செழிக்க வேண்டிடுவோம்!
நல்லிணக்கம் தழைத்திடவே
வல்லோனை வணங்கிடுவோம்!

விவிலியத்தின் பாதைதனில்
விலகாமல் நடந்திடுவோம்!
இடையில் வரும் தடையனைத்தும்
இறையருளால் கடந்திடுவோம்!

 - நிலவை.பார்த்திபன்

மரிக்கொழுந்தே

செக்கச் செவந்தவளே!
செவ்வந்திப் பூமகளே!
சேலையில மனசக் கட்டி
சேர்த்திழுத்துப் போனவளே!

சொக்கி விழ வச்சவளே!
சொக்கத் தங்க பேரழகே!
சோறு தண்ணி நான் மறக்க
காரணமா ஆனவளே!

நெனப்ப கெடுத்தவளே!
நேர் உச்சி எடுத்தவளே!
நேரம் காலம் பாக்காம
நெஞ்சுக்குள்ள புகுந்தவளே!

மனசுக்குள்ள நீ நொழஞ்சு
மாசம் நாலு ஆயிருச்சு!
மயிலு உன்னச் சேராம
மண்ட காஞ்சு போயிருச்சு!

காதல நான் சொல்லாம
காச்ச வந்து ஏறிடுச்சு!
காத்து கருப்பு அடிச்ச கணக்கா
கண்ணு ரெண்டும் மாறிடுச்சு!

இப்படியே போச்சுன்னா
இதயம் இத தாங்காது!
இழுத்துக் கட்டும் வேட்டி கூட
இடுப்புல இனி தங்காது!

சனிக்கிழம உனக்காக
சந்த பக்கம் காத்து நிப்பேன்!
சந்தனப் பொட்டு வச்சு வந்தா
சம்மதமுன்னு தெரிஞ்சுக்குவேன்!

மறக்காம வந்துருடி
மணக்குற என் மரிக்கொழுந்தே!
உனக்கும் என்ன புடிச்சிருந்தா
இந்த ஊருக்கெல்லாம் கறி விருந்தே!

   - நிலவை.பார்த்திபன்

விழி திறந்தால் விடியல்

முன்பு உடன்கட்டை என்ற பெயரில்
உயிரோடு எரித்தீர்கள்!
கருகி மடிந்தோம்!

முடியை மழித்து முக்காடு போட்டு
மூலையில் கிடத்தினீர்கள்!
முடங்கிச் சரிந்தோம்!

வெள்ளையுடை தவிர
வேறு வேண்டாம் என்றீர்கள்!
வெந்து தணிந்தோம்!

பூ நகை பொட்டெல்லாம்
புறக்கனிக்கச் செய்தீர்கள்!
புழுங்கித் துடித்தோம்!

மங்கள நிகழ்ச்சிகளில்
மறந்தும் தலை காட்டாதே என்றீர்கள்!
மனம் வதைந்தோம்!

பெரியார் என்ற
பெருநெருப்பின் கதகதப்பில்
உங்கள் சாத்திரக் குளிர்
சற்றேனும் விலகியது!

இதோ இன்று அடுத்த சாதி
ஆண்களை மணந்தால்
ஆணவக் கொலை செய்கிறீர்கள்!

எங்களை மூளியாக்குவதிலும்
மூலையில் கிடத்துவதிலும்தான்
தங்களுக்கு எவ்வளவு ஆர்வம்!

உங்கள் வக்கிரப் பசியடங்க
வருங்காலத் திட்டங்கள்
வேறென்ன வைத்திருக்கிறீர்கள்?

கன்றுக்குட்டிகளாய் உங்கள்
கால்சுற்றிக் கிடக்கவேண்டும்
என்பதுதான் உங்கள்
கடைசி இலக்கா?

ஆதிக்க வெறியர்களே,
அடிக்கோடிட்டு இதை
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

எங்களை நசுக்க வேண்டி
நீங்கள் எடுக்கும்
நகர்வுகள் அனைத்தும்
நங்கூரங்கள் சிலவற்றை
நட்டுக்கொண்டுதான் இருக்கின்றன
எங்கள் நடுநெஞ்சில்!

முன்னிலும் உறுதியாய்
முளைத்து நின்று
உங்கள் முயற்சிகளின் மூக்கறுப்போம்!
தோசை சுடுவதே எங்கள் தொழில்
என்கிற தோற்றத்தைத் தோற்கடிப்போம்!

மேலும் பல மேரி கோம்களாய்
மேற்குலகம் வியக்கும் மேதாவிகளாய்
எங்கள் இருப்புகளை இருமாப்புடன்
பதிவு செய்யக் காத்திருக்கிறோம்!

வக்கிரச் சிந்தனைகளுக்கு நடுவே
வயிற்றெரிச்சலுக்கும் கொஞ்சம்
மருந்து தயார்செய்துகொள்ளுங்கள்!

ஆணவக் கொலையாளிகள்
உங்கள் ஆணவம் கொல்ல
கூர்தீட்டப்பட்ட எங்கள் ஆயுதங்கள்
குறிபார்த்துக் காத்திருக்கின்றன!

நாங்கள் விழி திறந்தாலே
இனி விடியல்தான்!
நாளைய உலகம் இனி
எங்கள் பிடியில்தான்!

- நிலவை.பார்த்திபன்

இரண்டில் ஒன்று

நாளையோடு நிறுத்திக்கொள்வோம்
நமக்குள்ளான இந்த விளையாட்டை!

நீ மனம் திறப்பாயென நானும்
நான் மௌனம் கலைப்பேனென நீயும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இன்றுவரை பரிமாறிக்கொண்டது
ஏமாற்றங்களை மட்டுமே!

எதிர்வீட்டு காமாட்சி அக்காவிடம்
என்னை காதலிப்பதாக நீ சொல்லி
ஏப்ரல் வந்தால் ஏழு வருடங்கள்
ஆகப்போகிறது!

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
அண்ணாச்சி கடையில்
அரிசி வாங்கும்போதும்
பிள்ளையார் கோவிலில்
பிரசாதம் வாங்கும்போதும்
கண்களால் மட்டும்
பேசிக்கொண்டிருப்பது?

பேருந்து நிறுத்தத்தில் பேசிவிடலாம்
என்ற எனது பெருமுயற்சிகள்
உன் தோழிகள் உடனிருப்பதால் தோற்றுப்போகின்றன!

மாரியம்மன் கோவில் திருவிழாவில்
மடக்கி உன்னிடம் பேச முயன்றபோது
மாவிளக்குப் போட்டு வருகிறேன்
என்று சொல்லிச் சென்று மாயமானாய்!

அடுத்த திருவிழாவும் வரப்போகிறது!
அதே மாவிளக்கை இன்னும்
போட்டுக் கொண்டிருந்தால்
அம்மனுக்கே ஆத்திரம் வராதா?

நமக்குப் பின்
காதலிக்கத் தொடங்கிய சிலருக்கு
தற்போது நான்கைந்து வயதில்
பிள்ளைகள் இருப்பது
தெரியும்தானே உனக்கும்?

குசும்பு பிடித்த
அதில் சிலர்
குழந்தையிடம் எனைக்காட்டி
அங்கிளுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு
என நாசுக்கான நக்கலடிப்புகள் வேறு!

ஒன்று...நான் காதல் சொல்ல
தயங்காமல் காதுகொடு!
நாணப்பட்டால் உன்
தங்கையையாவது தூது விடு!

இரண்டில் ஒன்று இன்றே வேண்டும்!
காலம் போனால் வராது மீண்டும்!

- நிலவை.பார்த்திபன்

கண்டதும் காதல்

காணும்போதெல்லாம் புன்னகைத்தாய்!
காந்தப் பார்வையால் கவர்ந்திழுத்தாய்!
காதல் விலங்கிட்டு எனை சிறையெடுத்தாய்!
கனவில் வந்து தினம் போர் தொடுத்தாய்!

சிரித்துப் பேசி என்னுள் சிறகடித்தாய்!
மனதின் கவலைகளை மறக்கடித்தாய்!
கீச்சுக் குரலால் எனை கிறங்கடித்தாய்!
இவ்வாழ்க்கை வரமென்று வகுப்பெடுத்தாய்!

காதல் சொன்னபோது மறுதலித்தாய்!
மரண வலிதனை மனதிலிட்டாய்!
மாதக்கணக்கில் எனை மருகவிட்டாய்!
உள்ளம் நொந்து எனை உருகவிட்டாய்!

உண்மை சிலவற்றை உணரவைத்தாய்!
உள்ள மயக்கத்தை தெளியவைத்தாய்!
வெறும் பார்வை காதலில்லை புரியவைத்தாய்!
பாதை தெளிந்து எனை நடக்கவைத்தாய்!

காதல் பருவத்து இளைஞர்களே!
கனவில் வாழ்கின்ற இதயங்களே!
கற்பனை என்பவை பிம்பங்களே!
கண்மூடிக் கிடந்தால் துன்பங்களே!

கண்டதும் காதல் வருவதில்லை!
வந்தால் அதன் பெயர் காதலில்லை!
உணர்ந்தவர் சறுக்கி விழுவதில்லை!
விழுந்தவர் எளிதில் எழுவதில்லை!

- நிலவை.பார்த்திபன்

வேளாண்மை வேண்டும்

"நீரற்ற குடமும் நிழலற்ற தடமும்" என்கிற தலைப்பில் "எரியும் ஏடு" என்ற இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் பரிசு வென்ற எனது கவிதை....

நீரற்ற குடமும்
நிழலற்ற தடமும்
நிகழ்கால உலகின்
நீங்காத அவலம்!

ஆறற்ற ஊரும்
அழிவுற்ற உழவும்
அடித்தட்டு நிலைக்கு
அகிலத்தை நகர்த்தும்!

கூரற்ற மதியும்
குறுகிவிட்ட நதியும்
குறிப்பிட்ட எதற்கும்
உதவாமல் சிதையும்!

சீரற்ற மழையும்
சிரிப்பற்ற மனையும்
சிறப்பான எதையும்
சேராமல் விலக்கும்!

கேடுற்ற காற்றும்
காடற்ற நாடும்
மேகத்தின் வரவை
மெதுவாக இழக்கும்!

ஓய்வற்ற உழைப்பும்
நோயற்ற உடலும்
ஒப்பற்ற வாழ்வை
உனக்காக வழங்கும்!

ஊரோரக் குளமும்
உழுகின்ற நிலமும்
உயிருள்ள வரைக்கும்
உனைக்காக்கும் நிதமும்!

ஏரோட்டும் கூட்டம்
இருக்கின்ற வரைக்கும்
ஏமாற்றமில்லா
எதிர்காலம் இருக்கும்!

நேரற்ற வழியும்
நெறியற்ற தொழிலும்
நேற்றோடு போதும் - இனி
வேளாண்மை வேண்டும்!


- நிலவை.பார்த்திபன்

தேவதை

நீ தண்ணீர் குடித்துச்
சிந்திய நீரில் மொய்க்கும்
ஈக்கள்!

நீ தேனீர் குடித்த
கோப்பையைச் சுற்றும்
தேனீக்கள்!

நீ வெட்டியெறிந்த
நகத்தினைச் சூழும்
கட்டெறும்புகள்!

உன் கூந்தல் உதிர்த்த
பூவில் கூடும்
பொன்வண்டுகள்!

நீ தேவதை என்பதற்கு
தேவையா இனியும்
வேறு சான்றுகள்?

    - நிலவை.பார்த்திபன்

மீண்டும் நீ வேண்டும்

மீண்டும் நீ வேண்டும்!
மிதமாய் உன் இதம் வேண்டும்!

சீண்டும் உன் விரல் வேண்டும்!
சிணுங்கும் உன் குரல் வேண்டும்!

சிரிக்கும் உன் இதழ் வேண்டும்!
எனை நிரப்ப உன் நிழல் வேண்டும்!

உனைத் தீண்டும் ஒரு வரம் வேண்டும்!
எனைத் திருட நீ வர வேண்டும்!

வருடும் உன் கரம் வேண்டும்!
உன் வளையல் ஒலி தினம் வேண்டும்!

வழியும் உன் எழில் வேண்டும்!
என் விழியில் உன் விழி வேண்டும்!

அலையும் உன் குழல் வேண்டும்!
அதனுள்ளே நான் விழ வேண்டும்!

குழையும் உன் மொழி வேண்டும்!
நீ குளித்த ஒரு துளி வேண்டும்!

உன் இதயம் அதில் இடம் வேண்டும்!
நான் இறக்க உன் மடி வேண்டும்!

 - நிலவை.பார்த்திபன்

ஈரோட்டுக் கூரீட்டி

நேற்றைய தமிழர்க்கு
நேர்ந்த அவலங்கள்
இன்றைய இளைஞர்கள் அறியார்!
வேற்றுமைகளை ஒரு
வேங்கை எதிர்த்தது
அவர்தான் எங்கள் பெரியார்!

பகுத்தறிவதனை புகுத்திட சுழன்ற
புதுப்புயல் என்றால் அது யார்?
பழமையை எதிர்த்த
பகலவன் இவனை
பாமரர் கூட அறிவார்!

பெரியார் கொள்கைகள் பெரிதுமுணர்ந்தவர்
சாதியைச் சதியென புரிவார்!
சுயமரியாதையை விரும்பும் மனங்களில்
சுடராய் இவரென்றும் எரிவார்!

ஆணாதிக்கச் சிரங்கு கண்டவர்
அற்ப சுகத்திற்கதை சொறிவார்!
பெண் விடுதலையை எதிர்க்கும் எவருக்கும்
பெரியார் பேயாய்த் தெரிவார்!

மாதவிலக்கையும் மடையர் சிலரிங்கு
தீட்டெனப் பிதற்றித் திரிவார்!
பெரியார் பாதையில் சரியாய் நடப்பவர்
சாத்திரம் பொய்யெனத் தெளிவார்!

ஆச்சாரத்தைக் கட்டி அழுபவர்
அதனுள் மூழ்கியே அழிவார்!
அன்றே பெரியார் எழுப்பிய கேள்விக்கு
இன்றும் பதிலின்றி நெளிவார்!

மூடத்தனங்களை விதைப்பதில் சிலரிங்கு
மூளையைக் கசக்கிப் பிழிவார்!
பெரியார் என்ற பெயரைக் கேட்டால்
தெறித்து ஓடி அவர் ஒளிவார்!

தீராத வெறியுடன் திராவிடம் வீழ்த்த
திருடர்கள் சிலரிங்கு நுழைவார்!
ஈரோட்டுக் கிழவன் வேர்விட்ட மண்ணில்
இடுப்பொடிந்து அவர் விழுவார்!


 - நிலவை.பார்த்திபன்

ஓரப்பார்வை

நித்தம் எனை நிராகரி!

வேண்டாப் பொருளாய்
என்னில் வெறுப்பு கொள்!

நெருப்புப் பார்வையை
நேரெதிரே வீசு!

அளவிலாது எனை
அலட்சியம் செய்!

எனைத் தொல்லையென்று
தோழிக்குச் சொல்!

கல் நெஞ்சோடு எனை
கடந்து செல்!

வசவுகளை எனை நோக்கி
வழியனுப்பு!

எப்போதும்போல் ஏளனம் செய்!

ஆனால்...

தூரம் சென்று சற்றே திரும்பி
ஓரமாய் எனை உற்று நோக்கும்
அந்தக் கள்ளப் பார்வையை மட்டும்
கடைசிவரை நிறுத்திவிடாதே!

அந்த ஓரப் பார்வையில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
என் காத்திருப்புகளின் மிச்சமும்
என் கடைசித்துளி நம்பிக்கையும்!

- நிலவை.பார்த்திபன்

பொழுது இன்னும் விடியல

பெட்ரோலு டீசல் வெல
பேய்த்தனமா ஏறுது!
ஏழைத்தாயின் மகனோட
நிர்வாகம் நாறுது!

கஷ்டப்பட்டு ஒழச்ச காசு
பெட்ரோல் போட்டே தீருது!
கவர்மெண்டு ரெண்டும் நம்ம
கால நல்லா வாருது!

வீனாப்போன நாடெல்லாம்
ஈன வெலைக்கு விக்குது!
மோடி பெத்த புது இந்தியா
அம்மணமா இங்க நிக்குது!

சமையல் வாயு வெலயுங்கூட
சகட்டு மேனிக்கு எகிறுது!
அடுப்பவிட அதிகமா எங்க
அடிவயிறு எரியுது!

மாத்தி மாத்தி வரிய போட்டு
மண்டையெல்லாம் காயுது!
மலரும் இங்க தாமரைன்னு
உளருன அந்த வாயெது?

எடப்பாடி அரசு இங்க
எதுக்கு இன்னும் இருக்குது?
வரியக் கொறைக்க சொன்னதுக்கு
வக்கணையா மறுக்குது!

ஜிஎஸ்டி வரி வந்து
சிறு வணிகத்த கெடுக்குது!
டீசலையும் ஜிஎஸ்டிகுள்
கொண்டுவர எது தடுக்குது?

கச்சா எண்ண வெல கொறஞ்சும்
பெட்ரோல் வெல கூடுது!
மரத்துப்போன மனசு இப்ப
மாட்டு வண்டிய தேடுது!

பொய்ய நம்பி ஓட்டு போட்டு
பொழுது இன்னும் விடியல!
தேர்தலுன்னு வந்தா நமக்கு
தேர்ந்தெடுக்க தெரியல!

- நிலவை.பார்த்திபன்

ஆசிரியர் தின வாழ்த்துகள்

பிரம்பு சுமந்த பிரம்மாக்களே! - எங்கள்
குறும்பு பொறுத்த குருமார்களே!
துரும்பையும் தூணாக்கும் துரோணர்களே!
துதிக்கிறோம் உங்களை இந்நாளிலே!

மாணவ மாலுமிகள் எங்களுக்காக
கரும்பலகையை கலங்கரை விளக்கமாக்கினீர்கள்!
சுண்ணக் கோல் கொண்டு
எங்கள் சூனிய அறிவிலும்
சுடரேற்றினீர்கள்!

காட்டாற்றில் எமை
கரை சேர்த்த தெப்பங்கள் நீங்கள்!
உங்கள் உளி பட்டதால்
உயிர்பெற்ற சிற்பங்கள் நாங்கள்!

அறிவியலையும் ஆங்கிலத்தையும்
அறிமுகம் செய்ததும் நீங்கள்தான்!
அறியாமையை எங்களிடமிருந்து
பறிமுதல் செய்ததும் நீங்கள்தான்!

இயற்பியலும் இலக்கணமும்
இலகுவானது உங்களால்தான்!
கசப்பான கணிதம் கூட
கற்கண்டானது உங்களால்தான்!

நீங்கள் திட்ட திட்ட
திசைகள் தெளிந்தோம்!
குட்ட குட்ட
குன்றுகளாய் உயர்ந்தோம்!

தங்களது வியர்வை
எங்களது உயர்வை
உறுதி செய்தது!
தங்களின் உழைப்பே
இந்த உலகை நாங்கள்
உணரச் செய்தது!

ஆசிரியர்கள் உங்களால்தான்
சில புற்கள் புல்லாங்குழல்களாகின்றன!
பலகைகள் பல்லாங்குழிகளாகின்றன!

ஆசிரியர்கள்...
அறிவு நிழல் தரும்
ஆலமரங்கள்!
அகத்தை அழகாக்கும்
ஆபரணங்கள்!

ஆளாக்கிய ஆசான்களுக்கு
அடிமனதின் ஆழத்திலிருந்து
அன்பு நிறைந்த நன்றிகள்!
மற்றும்
ஆசிரியர் தின வாழ்த்துகள்!


- நிலவை.பார்த்திபன்

இருட்டானது கிழக்கு

இது அஸ்தமன நேரம்
ஆதவனே அமைதி கொள்!

சுறுசுறுப்பின் சூத்திரத்தை
சூரியனுக்குச் சொல்லித்தந்த சிங்கமே
உருமிக் களைத்தது போதும்
இது உறக்கம் கொள்ளும் நேரம்!

கங்கை ஒன்றின் பயணம்
காவேரியில் முடிந்திருக்கிறது!
கலைஞர் என்னும் கடலை
காலம் அள்ளிக் குடித்திருக்கிறது!

திருக்குறளிற்கு உரை தந்த
திருக்குவளைத் தங்கமே!
இலக்கியத்தில் கரை கண்ட
இன்னொரு தமிழ்ச் சங்கமே!

அகிலம் இனி காண்பதெங்கே
அறிவாலய நிலவை? - நீ
அண்ணா மற்றும் பெரியாரின்
அழகான கலவை!

இதுவரை சக்கர நாற்காலி
உனைச் சுமந்தது!
இனி சரித்திர நாற்காலி
உனைச் சுமக்கும்!

எதிரிகளிடமும் துரோகிகளிடமும்
எத்தனை முறை வீழ்ந்தாலும்
உன் எழுதுகோல் ஊன்றியே
எழுந்து நின்றது திமுக!

உன் எழுதுகோலே
என் போன்றவர்களின்
தமிழுணர்விற்குத் திறவுகோல்!

நெஞ்சுக்கு நீதி தந்தது
நேற்றைய உன் பேனா!
நீ எழுதுகோலில் நிரப்பியது
மையா இல்லை தேனா?

மஞ்சள் துண்டைத் தோளில் சுமந்தாய்!
மக்கள் தொண்டால்
பலர் மனதில் அமர்ந்தாய்!
மாநிலத்தில் பலருக்கும் நீ
மற்றுமொரு தாய்!

ஆண்டவன் இல்லையென்று
அன்று நீ உரைத்ததை
ஆம் என ஏற்கிறோம்
ஐந்து முறை எமை
ஆண்டவன் நீ
இன்றில்லாத காரணத்தால்!

நீ சட்டசபை சென்றவரை
சவக்குழியில் விழாமல்
காப்பாற்றப்பட்டது சமூக நீதி!
நீ விட்டுச்சென்ற வெற்றிடத்தை
இட்டு நிரப்ப இனியேது
இன்னொரு கருணாநிதி?

கருப்புக் கண்ணாடியணிந்து
நெருப்பைத் தன்னோடு சுமந்து
சிறப்பாய் நடைபோட்ட
களப்போர் வீரனே
இறப்பேது உனக்கு? - எனினும்
இருட்டானது இன்று கிழக்கு!

- நிலவை.பார்த்திபன்

சாதிகள் உள்ளதடி பாப்பா


பாப்பம்மா என்ற அரசு பள்ளி சத்துணவு சமையல் பணியாளர் தலித் என்கிற காரணத்தால் சமையல் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து ஆதிக்க சாதியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது நான் எழுதிய கவிதை....

பாம்பு பல்லி விழுந்தாலும்
பயமில்லாமல் உண்பார்களாம்!
பாப்பம்மா சமையலென்றால்
பள்ளியை பூட்டு என்பார்களாம்!

பாப்பம்மா இனி
பாயாசமும் சமைப்பார்
பள்ளிக்கூடம் அனுப்பாமல்
பத்திரமாய் பூட்டிவைத்துக்கொள்ளுங்கள்
பாவப்பட்ட உங்கள் பிள்ளைகளை!

சாத்திய கதவிற்குப்பின்
சத்தமில்லாமல் சொல்லிக்கொடுங்கள்
சத்தியத்தைவிட சாதியம் பெரிதென்று!

இரட்டைக்கிளவியெல்லாம்
கிடப்பில் கிடக்கட்டும்!
இரட்டைக் குவளை முறை பற்றி
இப்போதே சொல்லிக்கொடுத்துவிடுங்கள்!

மூதுரைப் பாடல்களெல்லாம்
மூலையில் இருக்கட்டும்!
முலைவரிச் சாதனையை
முக்கியமாகச் சொல்லிக்கொடுங்கள்!

கீழ்க்கணக்கு பாடல்களிருந்தால்
கீழே எறிந்துவிட்டு,
கீழ்வெண்மணி சாதனைகளை
கீதா உபதேசமாகக்  கற்றுக்கொடுங்கள்!

பால்வெளியைப் பற்றிய
பாடங்கள் இருக்கட்டும்,
கீழ்சாதி கூட்டத்திற்கு
மேல்துண்டு மறுத்த கதையை
மேலோட்டமாய்ச் சொல்லிக்கொடுங்கள்!

செய்யுள் பாடமெல்லாம்
பையிலேயே இருக்கட்டும்!
சேரி மக்கள்
செருப்பு போட
மறுப்புச் சொன்ன மகத்துவத்தை
மகிழ்ச்சியோடு சொல்லிக்கொடுங்கள்!

தாவரவியல் பாடமெல்லாம்
தற்கூறிகள் நமக்கெதற்கு?
தாகத்திற்கு பொதுக்கிணற்றில்
தண்ணீரெடுத்த தலித்துகளை
சாகும்வரை அடித்த கதையை
சந்தோசமாய் சொல்லிக்கொடுங்கள்!

அத்தனையும் தவறில்லையா என
அப்பாவியாய் அவர்கள் கேட்டால்
மொத்தி எடுத்திடுங்கள்  -  இல்லையேல்
தத்துக் கொடுத்திடுங்கள்!

                      - நிலவை.பார்த்திபன்

நாக்கு எனும் நச்சுப்பாம்பு

பற்களுக்குப் பின்னே
பாதுகாப்பாய்
சிறை வைத்தும்
முற்களாய் கீறும்
சொற்களை வீசி
முன்னிருப்பவர் மனதை
முடமாக்கி விடுகின்றன
சில முன்கோபிகளின்
முரட்டு நாக்குகள்!

ஈர நாக்குகள் உதிர்க்கும்
ஈரமற்ற வார்த்தைகளால்
பாரமேறித் தவிக்கின்றன
பாதிக்கப்படும் இதயங்கள்!

தேக்கு உள்ளங்களையும்
தேங்காயாய் உடைத்துவிடுகிறது
நாக்கு எனும்
நச்சு ஆயுதம்!

கோபம் கொண்ட நாக்குகள்
கோடறியாய் மாறும்போது
பாவப்பட்ட சில நெஞ்சங்கள்
காயப்பட்டு சிதைகின்றன்!

எலும்பில்லா நாக்கில் எழும்
வரம்பில்லா வார்த்தைகளால்
வலுவான பந்தங்களும்
பழுதாகி உடைகின்றன!

ஈனச் சொற்களை
இறைத்த பின்னர் சில
தீ நாக்குகள்
திருப்தி கொள்ளலாம்!
ஆனபோதும்
அடுத்து ஒரு நாள்
அதே வார்த்தைகள்
உன்னைக் கொல்லலாம்!

நடுங்கவைக்கும் நாகத்திற்கும்
நஞ்சு என்பது
நாவில் இல்லை!
மனித நாக்குகள்
வடிக்கும் விஷத்தில்
பாதியும் கூட
பாம்பில் இல்லை!

நாக்கின் நீளம்
வளரும் போது
நாகரீகமும்
வளர்தல் வேண்டும்!

நாக்கு என்பது
நாய்க்கும் உண்டு
நமக்கும் அதற்கும்
வேற்றுமை வேண்டும்!

- நிலவை.பார்த்திபன்

உறக்கம்

மருத்துவமனைக் காத்திருப்புகளில் 
நமக்கான முறை வர
நான்கைந்து நிமிடங்களிருக்கும்போதும்,

ஜன்னலோரப் பேருந்துப் பயணங்களில்
சற்று நேரத்தில்
இறங்க வேண்டிய
சமயங்களிலும்,

தேநீர் கடையின்
தேய்ந்த இருக்கையில் அமர்ந்து
நாளிதழ் புரட்டும்
நண்பகல் வேளையிலும்,

திரைப்படங்களில் வரும்
தீய கதாபாத்திரங்கள்
திடீரெனத் திருந்தும்
காட்சிகளின்போதும்,

முடி திருத்தும் கடையில்
முகச்சவரத்திற்கு முந்தைய
காதோர கத்தரி விசாரிப்புகளின்போதும்,

பிறந்தவீட்டுப் பெருமையை
பிற்பகல் நேரத்தில்
மனைவி சொல்லக் கேட்கும்போதும்,

தவறாமல் வந்துவிடுகிறது....

இரவெல்லாம் புரண்டு கிடந்தபோது
இம்மியளவும் வராத உறக்கம்!


   - நிலவை.பார்த்திபன்

எட்டு வழிச் சாலை

எதுக்கு இப்ப அவசரமா
எட்டு வழிச் சால?
எடத்தையெல்லாம் புடுங்கிக்கிட்டா
எங்க போயி சாக?

அடி வயித்த கலக்குது உங்க
அரசாங்க ஆண!
நல்லவங்க தேவ
இந்த நாட்ட இனி ஆள!

ஏற்கனவே இருக்கும்போது
எதுக்குப் புது பாத?
சீக்கிரமா சென்னை போனா
நெறஞ்சுருமா பான?

எட்டு வழிச் சாலையில
என்ன செய்வான் ஏழ?
எடப்பாடி கூட்டத்துக்கு
எங்க போச்சு மூள?

எத்தனையோ கிராமத்துக்கு
இல்ல நல்ல சால! - இப்ப
சேலம் பக்கம் போடுறது
வேண்டாத வேல!

ஏற்கனவே விவசாயம்
விழுந்து கெடக்கு கீழ!
இனி கூலி வேல செஞ்சாதான்
குடிக்கமுடியும் கூழ!

காடு கரைய  காலி பண்ணி
போடணுமா சால?
நாக்கு வறண்டு செத்தாத்தான்
திருந்துவீங்க போல!

கேள்வி கேட்டா போடுறீங்க
கேச எங்க மேல!
வளர்ச்சியெல்லாம் கெடக்கட்டும்
விடுங்க எங்கள வாழ!

கவர்மென்டே வாரிடிச்சு
கடசில நம்ம கால!
எங்களுக்கும் காலம் வரும்
எண்ணிக்குங்க நாள!

மேல எடுத்து விட்டுக்கிட்டோம்
தேடிப்பிடிச்சு தேள! - இப்ப
வேண்டாமுன்னு கெஞ்சினாக்க
விட்டுருமா ஆள?


     - நிலவை.பார்த்திபன்

தற்கொலை என்னும் பெரும்பிழை

தவறுதலாக நாவு கிழித்தால்
தண்டிப்பதில்லை நம் பற்களை!
தவறும் நமது முயற்சிக்காக
தகுமா இந்தத் தற்கொலை?

கல்லறைச் சுவராய் மாற்றுவதா நம்
கனவுக் கோட்டையின் கற்களை?
கல்விச் சாலையில் கற்றதில்லையா
தன்னம்பிக்கைச் சொற்களை?

தற்கொலை முயற்சி தகர்த்திடுமா
நமைத் தழுவியிருக்கும் சிக்கலை?
முடங்கிச் சரிந்தால் முறிப்பதெங்கே 
நம் முயற்சிப் பாதையின் முட்களை?

வசந்தம் வருத்தம் இவற்றின் நடுவே
வாழ்தல் என்பது ஓர் கலை!
உணர்ச்சியின் வேகம்
உயிரைக் குடித்தால்
உலகில் அதுவே பெரும்பிழை!

கரைமேல் கொண்ட
காதலில் தோற்றும்
களைத்துப் போவதில்லை கடலலை!
கயிறோ விஷமோ
மீட்டுத்தருவதில்லை
கருகிப்போன நம் கனவினை!

நாளைய உலகம் திருடிவிடாது
நமக்கான சில நாள்களை!
வாழாதுபோனால் நெய்வதெங்கே
நம் வெற்றிக் கொடிக்கான நூல்களை?

இறப்போம் என்று
முடிவெடுக்க இங்கு
இரண்டு நொடிக்குமேல் தேவையில்லை!
இழந்து தவிக்கும்
இதயங்கள் அழுவதை
இறந்தவர் செவிகள் கேட்பதில்லை!

தோல்வி தொடாத
மனிதர் எவருமே
தொன்று தொட்டு
இந்த உலகிலில்லை!
தோல்வியும் ஒருநாள்
தோற்கும் என்கிற
உண்மையை சிலரிங்கு
உணர்வதில்லை!

ஏற்றத்தாழ்வுகள் எல்லோர்க்கும் பொதுவே
எதுவுமில்லை இங்கு கீழ்நிலை!
இறக்கும் எண்ணம்
இனியும் வேண்டாம்
இனிதே மாறும் சூழ்நிலை!


    - நிலவை.பார்த்திபன்

தோற்றுப்போன தோட்டாக்கள்

யாரைப் பாதுகாக்க
ஆயுதம் தரப்பட்டதோ
அவர்களையே துளைத்திருக்கின்றன
அத்தனை தோட்டாக்களும்!

யாரின் காவலுக்காக
காவல் துறை கட்டமைக்கப்பட்டதோ
அவர்களையே சுட்டழித்திருக்கின்றன
துப்புக்கெட்டவர்களின் துப்பாக்கி முனைகள்!

ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும்
எங்களுக்கான சவக்குழிகள்
உங்கள் துப்பாக்கிகளால் தூர்வாரப்படுகின்றன!

எங்கள் குருதி ருசிக்கக் காத்திருக்கும்
உங்களின் குத்தீட்டிகள்
எங்கள் குரல்வளை எலும்பிலேயே
கூர்தீட்டப்படுகின்றன!

எங்கள் போர்க்குணத்தை
போராட்டத்தின்மூலம் வெளிப்படுத்தினோம்!
நீங்களோ, தோல்வி பயத்தை உங்கள்
தோட்டாக்களின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

தடியடி நடத்தினீர்கள்
தடுத்து முன்னேறினோம்!

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை
காலடியில் வீசினீர்கள்!
கண்ணீர் புதிதில்லையென்பதால்
கடந்தோம் அதனையும்!

தப்பென்ன  செய்தோம் நீங்கள்
துப்பாக்கி தூக்கும்படி?
ஆணையிட்ட அரக்கனெவன் எங்களை
உயிர்போகத் தாக்கும்படி?

வாகனங்களை நீங்களே கொளுத்தி
வன்முறை செய்தோம் என்றீர்கள்!
வாழ்வதற்கு வழி கேட்டவர்களின்
வாயில் சுட்டுக் கொன்றீர்கள்!

குண்டு துளைத்தது
சிலரது உடல்களில்  - ஆனால்
குருதி வழிந்தது
கோடி உள்ளங்களில்!

ஏற்கனவே புற்றுநோயால்
ஏகப்பட்ட இறப்புகள்!
எஞ்சியவரையும் கொல்லும் நீங்கள்
எச்சிலில் பிறந்த பிறப்புகள்!

அகர்வால் வீசும் எலும்பிற்காக
அகல வாய் திறக்கும் அரசே!
அகங்காரத்தின் எல்லை கடந்தால்
அடுத்தது நிச்சயம் அழிவே!

   - நிலவை.பார்த்திபன்

பாரத் மாதாகீ ஜே!

மூக்குத்திதானே என்று விட்டுவிடாதீர்கள்!
முப்பது மதிப்பெண்களுக்கான விடைகள்
முடங்கியிருக்கலாம் அதனுள்!
முழுதாகக் கழற்றிவிடுங்கள்
முடிந்தால் மூக்கையும் சேர்த்து!

காதில் என்ன கம்மல்தானே?
கண்டிப்பாக கழற்றிவிடுங்கள்!
கடைசியிரண்டு கேள்விகளுக்கான
விடைகள் கட்டிவைக்கப்பட்டிருக்கலாம்
அதனுள்!

என்ன அக்கிரமம் இது?
முழுக்கைச் சட்டையுடன்
முன்னால் ஒருவன்...
முழங்கையே போனாலும் சரி
முடிந்தவரை வெட்டி எறியுங்கள்!

பின்னால் யாரது
பின்னல் ஜடையுடன்?
பிரித்துத் தேடுங்கள்!
இல்லையேல் பிடுங்கி வீசுங்கள்!

உலகமே பார்த்தாலும் சரி
உள்ளாடைகளை உதறிப் பாருங்கள்!
உயிரியல் வினாக்களுக்கு
உள்ளுக்குள் விடைகளிருக்கலாம்!

இது என்ன நீட்டிற்கு வந்த சோதனை?
நீட்டச் சொல்லுங்கள் கரங்களை!
கத்தரித்து வீசுங்கள்
கட்டியிருக்கும் கயிறுகளை!
கணித விடைகள்
கயிற்றினுள் ஒளிந்திருக்கலாம்!

புல்லரிக்க வைக்கிறது உங்களின்
புலனாய்வு அறிவு!
கென்ய இராணுவமும் மிரள்கிறது உங்கள் கெடுபிடிகள் கண்டு!

பயங்கரமாய்த் தேடியும்
பாராட்ட வார்த்தைகள் இல்லை!
பார்க்கும்போதே நினைவில் வருகிறது பாக்கிஸ்தான் எல்லை!

பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
பதறியபடி கேட்டார்!
இவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தானே?
இல்லை மாணவர்கள் என்றேன்!

இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளா? என்றார்!
இல்லை தேர்வெழுத வந்தவர்கள் என்றேன்!

இது வெடிகுண்டு சோதனைதானே? என்றார்
சிலருக்கு வெறி பிடித்திருப்பதால் வந்த சோதனை என்றேன்!

மதக்கலவரம் செய்தவர்களா? என்றார்!
அவர்களையெல்லாம் மந்திரிகளாக்கிவிட்டோம்,
இவர்கள் மருத்துவம் படிக்க
ஆசைப்பட்டவர்கள் என்றேன்!

ஆட்சியா இது என்று
அசிங்கமாகத் திட்டினார்!
'ஆன்டி இந்தியன்' என்ற சத்தத்தோடு
ஆறேழு கற்கள் வந்து விழுந்தன!

கலங்கிப்போன  மனிதர்
காப்பாற்றுங்கள் என்றார்!
பாரத் மாதாகீ ஜே! சொல்லுங்கள்
பத்திரமாய் வீடு போய்ச் சேரலாம் என்றேன்!

எங்கே சொல்லுங்கள்....
பாரத் மாதாகீ ஜே!


              - நிலவை.பார்த்திபன்

அழுகிறோம் ஆசிஃபா


காஷ்மீர் அருகே சில ஆறறிவு மிருகங்களால் ஆசிஃபா எனும் அரும்பு அழிக்கப்பட்டபோது அழுது சிவந்த கண்களோடு எழுதிய கவிதை...

இது முதல்முறையல்ல என்றபோதும் 
முழுவதுமாக அடக்க இயலவில்லை 
முட்டிக்கொண்டு வரும் 
அழுகையையும் ஆத்திரத்தையும்! 

கண்ணீர் ஊரிக் கனத்துப்போன இக்கவிதையை 
கள்ளமில்லா அக்குழந்தையின் 
கல்லறைக்கு காணிக்கையாக்குகிறேன்! 

மதவெறியின் காம இச்சைக்கு 
மயிலொன்று இறையாகியிருக்கிறது! 

கால் பிடித்துக் கேட்கிறேன் 
இனி காந்தி தேசம் என்று 
அழைக்க வேண்டாம் 
இக்களங்கப்பட்ட பூமியை! 

அப்படி அழைக்கப்படும் 
அத்தனை முறையும் 
ஆடையின்றி நிற்பதாக எண்ணி 
அவமானம் கொள்ளும் இனி 
அத்தனை காந்தி சிலைகளும்! 

மிருகங்கள் என்று சிலரைக் குறிப்பதுகூட 
மிருதுவான ஒப்பீடாகிவிடுகிறது 
சில நேரங்களில்! 

காட்டு விலங்குகள்கூட 
காமத்தின்பொருட்டு 
குட்டிகளைக் குறிவைப்பதில்லை! 
அதெப்படி முடிகிறது 
ஆசனவாய் வழி பிறந்த 
அரக்கர் சிலரால்? 

மழலை மாறாத வாயில் 
மயக்க மருந்து திணித்து, 
பிஞ்சுக் கால்களை 
பின்புறமாக முறித்து, 
குயில் குஞ்சொன்றை 
கூட்டு பலாத்காரம் செய்து 
கழுத்து நெரித்து 
கல்லால் சிதைத்து..... 

இதயத்தின் நாளமெல்லாம் 
இருமடங்காய்த் துடிக்கிறது! 
கவிதை மேல் விழுந்து எந்தன் 
கண்ணீர்த்துளி தெறிக்கிறது! 

குதிரை மேய்த்துத் திரிந்த 
குறும்பாட்டுக்குட்டியை 
குதறித் தீர்த்திருக்கின்றன 
சில குரூரப் பேய்கள்! 

அத்தனையும் நடந்து முடிந்திருக்கிறது 
ஆண்டவன் அயர்ந்துறங்கிப்போன 
ஆலயம் ஒன்றில்! 

கன்றுக்குட்டியைக் கண்டும் 
காமம் வருமா? 
பட்டாம்பூச்சியைப் பார்த்தும் 
பலாத்கார எண்ணமா? 

காக்கிச் சட்டையும் 
காவி வேட்டியும் இணைந்து 
காலத்தால் அழியாக் கறையை 
காஷ்மீரத்து வரலாற்றில் 
கலந்துவிட்டிருக்கின்றன! 

எதைநோக்கிச் செல்கிறது இந்நாடு 
என எப்போதும்போல் கேட்டுவிட்டு 
கடந்து போகக்கூடியதல்ல 
இக்காட்டுமிராண்டித்தன நிகழ்வு! 

உருப்பறுப்பு தண்டனை கூட 
உதவாது இவர்களுக்கு! 
உருப்பெரித்துப் பின் 
உடல் பிளந்து 
ஊளையிடும் நரிகளுக்கு 
உணவாக்க வேண்டும்! 

ஆனால் முகர்ந்து பார்த்துப் பின் 
முகத்தில் காரி உமிழும் அந்நரிகள்! 

உளவியல் நோயின் உச்சத்தில் 
சீழ்பிடித்த சிந்தனையோடு 
பாரதமெங்கும் பரவிக்கிடக்கும் 
இது போன்ற கொடூரர்களை 
இனம் காணவேண்டியது 
இன்றைய இன்றியமையாத இலக்கு! 

மரபணு மாற்றம் செய்தேனும் 
மதவெறி இல்லா 
புவியமைப்போம்! 
வரைமுறை தாண்டிய வக்கிரங்கள் 
வளராதிருக்க இனி 
வழி சமைப்போம்! 

-நிலவை.பார்த்திபன்

காயப்பட்ட தமிழினமே

 
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்த சமயத்தில் தீயாய் எறிந்த மனதிற்கு தீனி போட்ட என் கவிதை....

என்ன பாவம் செய்ததெங்கள் தமிழினம்? 
எதற்கு இந்த அவல நிலை அனுதினம்? 

தாமிர உருக்காலையாலே ஒரு புறம் 
தர மறுக்கும் காவிரியால் மறுபுறம்! 
தத்தளித்து தவிக்கின்றோம் தினம் தினம்! - இது 
தரம்கெட்ட அரசுகளால் வந்த தரித்திரம்! 

ஸ்டெர்லைட்டினால் செத்து செத்து பிழைக்கிறோம்! - அது 
செயல்படவே கூடாதென்று எதிர்க்கிறோம்! 
செவிடன் காதில் சங்கெனவே இருந்திடும் 
செயல்படாத அரசதனை வெறுக்கிறோம்! 

இரசாயனக் கழிவுகளால் சிதைகிறோம்! 
இரவு பகல் இருமி இருமி வதைகிறோம்! 
இதய நோயை இலவசமாய்ப் பெறுகிறோம்! 
இறுதியிலே புற்று நோயால் இறக்கிறோம்! 

ஆலையினை மூடச் சொல்லி அழுகிறோம்! 
அச்சத்தோடு உறங்கச்சென்று எழுகிறோம்! 
நிலத்தடி நீர் நஞ்சாகக் காண்கிறோம்! 
நிலைகுலைந்து நிர்கதியாய் நிற்கிறோம்! 

உரிமையிருந்தும் காவிரியை இழக்கிறோம்! 
உபரி நீரை மட்டும்தானே பெறுகிறோம்? 
உச்சநீதி மன்றத்தினை அணுகியும் 
உள்ளம் நொந்து ஊமைக்கண்ணீர் வடிக்கிறோம்! 

வருடம்தோறும் வஞ்சிக்கப்படுகிறோம்! 
வறண்ட நிலத்தில் வாழ்வைத் தொலைத்துவிடுகிறோம்! 
வாய்கிழிய பேசும் சிலரை நம்பியே  
வளமனைத்தும் இழந்து வருத்தப்படுகிறோம்! 

மேலாண்மை வாரியத்தில் மெத்தனம்! 
மேட்டூர் அணை நிரம்புவது எக்கணம்? 
மேகதாதில் புதிய அணை வருமெனில் -இனி 
மேகம் கருணை கொண்டால் மட்டுமே நீர் வரும்! 

இனி ஒன்றுபட்ட எழுச்சியொன்றே வெல்லும்! - நாம் 
ஓய்ந்துவிட்டால் விடியல் விலகிச் செல்லும்! - நம் 
ஒட்டுமொத்த கரங்கள் ஒன்று சேர்ந்தால் 
ஓட்டுப் பொறுக்கிக் கூட்டம் ஒளிந்துகொள்ளும்! 

காயப்பட்ட தமிழினமே புறப்படு! 
காவிரிக்கும் ஸ்டெர்லைட்டிற்கும் குரல் கொடு! 
கண்ணீரால் இனி பலனில்லை உணர்ந்திடு! 
கதவு திறக்கக் காத்திராதே உடைத்திடு! 

    - நிலவை.பார்த்திபன்

வெறுமை




அடைமழை காலத்து 
அட்டைப்பூச்சியாய் 
சட்டென வந்து சமயங்களில் 
ஒட்டிக்கொள்கிறது 
ஒரு வெறுமை. 

காரணம் கண்டுதெளியும்முன் 
கற்பாறையாய் 
கனத்துவிடுகிறது மனது! 

வழமை மாறாத 
வறட்டு வாழக்கையோ 
அல்லது 
வருங்காலம் பற்றிய 
வலுவிழந்த நம்பிக்கைகளோ 

ஏதோவொரு காரணி 
எடுத்து வந்து 
சேர்த்துவிடுகிறது 
இந்த வெறுமையை! 

எதனுடனும் ஒப்பிட்டுவிட 
முடிவதில்லை எளிதில் 
இந்த வெறுமையை! 

சிதிலமடைந்த சிலந்தி வலையை 
சில நொடிகள் 
உற்று நோக்கும்போதும் 
புத்தகங்களால் நிரம்பியிருந்தும் 
புரட்ட ஆளில்லாத 
நூலகத்தைக் கடக்கும்போதும் 
இவ்வெறுமையின் சாயலை 
வேறு நிறத்தில் 
உணர முடிகிறது! 

புறந்தள்ளிக் கடந்து செல்வதும் 
மறந்துவிட்டு மற்ற பணி செய்வதும் 
கடினமான ஒன்றாகவே 
அமைந்துவிடுகிறது 
அடுத்த சில நிமிடங்களுக்கு! 

ஒரு குழந்தையின் 
குறும்புச் சிரிப்போ 
அல்லது 
குளிர்கால முகிற்கூட்டமோ 
என சிலிர்ப்பிற்குரிய 
ஏதோவொன்று 
மீட்டெடுத்துவிடத்தான் செய்கின்றன 
வெறுமையின் பிடியிலிருந்து 
வெகு நேர்த்தியாய் நமை! 

ஆனாலும் ஒரு 
குறுகிய இடைவெளியே 
போதுமானதாக இருக்கிறது 
அடுத்ததொரு வெறுமையை 
அவசரமாக நம் மனம் 
உடுத்திக்கொள்ள! 

மெல்லியதொரு வலியை 
மென்று விழுங்கிவிட்டே 
மேற்சொன்ன வெறுமையை 
மெதுவாகக் கடக்க முடிகிறது! 

உள்ளத்தின் சிறு 
உறுத்தலுக்கு நடுவே 
உணரத்தகுந்ததொரு உண்மை 
யாதெனில்.... 

வசித்தேயாகவேண்டிய வாழ்க்கையின் கட்டாயத்தால் 
இரசித்தேயாகவேண்டிய ஓன்றாகிப்போகிறது 
வேறு வழியின்றி 
இவ்வெறுமையும் அது சார்ந்த 
வெற்றிடமும்! 

- நிலவை.பார்த்திபன்

சிரியா

சிரியா


சிறியப் போர் உச்சத்தில் இருந்தபோது சீறிய என் பேனாவிலிருந்து சிதறிய சில கவித்துளிகள்...

இருப்பதாகக் நம்பப்படும் இறைவா
உன் இரக்கத்தின்
இலட்சணம்தான் இதுவா?
சிரிய தேசம் சீரழிவது கண்டும்
சிலையெனவே இருப்பது
உன் இயல்பா?

மரண ஓலம் ஒன்றே
உனக்கு இசைவா?
மனித உயிர்கள் மட்டும்
அங்கு மலிவா?
இறைவனுக்கும் இரக்கத்திற்கும்
இலட்சம் மைல்கள் தொலைவா?

ஆண்டவனை அணுகுதல்
இனி அறிவா?
உனை ஆராதனை செய்தமைக்கு
பலன் இந்த அழிவா?
ஈழப் போரில் உறங்கிய நீ
எப்பொழுது இனி எழுவாய்?

இது அதிகாரப் போட்டிகளின் விளைவு
ஆனால் அப்பாவிக் கூட்டத்திற்கே அழிவு!
பிஞ்சுகளும் பொசுக்கப்பட்ட பிறகு
நெஞ்சில் எதற்கு இன்னும் பக்தி உணர்வு?

கண்ணீரின்றி வாழ்வதே
அங்கு கனவா?
அந்தக் கதறலுக்கு
விடிவு காலம் வருமா?
சர்வாதிக்க சதிகளுக்கு
சாட்சி இவர்கள் பிணமா?

என்று கிட்டும்
இந்நிலைக்கு தீர்வு?
கிடைப்பதெங்கே போரில்
தொலைத்த வாழ்வு?
உருக்குலைந்து உயிர் விடுவது
சபிக்கப்பட்ட சாவு!

சர்வதேசம் சடுதியில்
இதை மறக்கும்!
இனி எண்ணெய்க் கிணற்றில்
கண்ணீர் அங்கு சுரக்கும்!
சில நரித்தனம்
கொண்ட நாடுகள் இதை
தனக்குள்ளே எண்ணி இரசிக்கும்!


- நிலவை.பார்த்திபன்

மன்னித்துவிடு மது


கேரளாவில் மது என்கிற மன நலமற்ற இளைஞன் அரிசி திருடிய குற்றத்திற்காக அடித்துக் கொல்லப்பட்டபோது அழுகைக்கும் ஆத்திரத்திற்கும் மத்தியில் நான் எழுதிய கவிதை....

மரத்துப்போன மனதோடு
மறுபடியொருமுறை
வெட்கித் தலைகுனிகிறது
மானுடம்!

அகிம்சை தேசம் தன்
அங்கமெங்கிலும்
அவமானமள்ளிப்
பூசிக்கொண்டிருக்கிறது!

நாகரீகச் சமூகத்தின் நாற்றம்
நரகலையும் விஞ்சி நிற்பதை
மறுபடியும் நிரூபித்திருக்கிறது
மதுவின் மரணம்!

மண்டியிட்டுக் கேட்கிறோம்
மன்னித்துவிடு மது!

எங்கள் கருணையைப்
புதைத்த இடத்தை நோக்கி
கல் எறிந்திருக்கிறது
உன் மரணம்!

சித்தம் கலங்கியது
யாருக்கென்பதை
நீ சிந்திய இரத்தம்
விளக்கிவிட்டது !

மன்னித்துவிடு மது....

கம்யூனிச மற்றும்
காந்திய இரைச்சலில்
காது செவிடான எங்களுக்கு
நீ கதறிய ஓசைகள்
கடைசிவரை கேட்கவேயில்லை!

மன்னித்துவிடு மது....

உன் பரிதாபத்திற்குரிய சாவு
எங்கள் பரிணாம வளர்ச்சியை
படுதோல்வியடையச் செய்திருக்கிறது!

உன் குருதிக்கு பொறுப்பேற்று
குரங்கிலிருந்து மனிதரானதை
குற்றமென ஒப்புக்கொள்கிறோம்!

மன்னித்துவிடு மது...

அரசியல் திருடர்கள்
அரசாளும் வரையில்
அரிசித் திருடர்களுக்கு
மட்டுமே இங்கு
அதிகபட்ச தண்டனை!

அதிலும்

மூட்டைக் கணக்கில்
திருடும் கூட்டத்தை
கோட்டைக்கு அனுப்பிவிட்டு
மூன்று படி அரிசிக்காக
மூச்சை நிறுத்தும்
முற்போக்குவாதிகள் நாங்கள்!

 மன்னித்துவிடு மது...

உனக்காக சிந்தப்படும்
ஒரு சில துளி கண்ணீரிலும்
முடை நாற்றம் மட்டுமே
முழுதாக எஞ்சியிருக்கிறது!

ஆனாலும் ஒரு உண்மையை
உன் ஆத்மா உணரட்டும்...
மது என்ற மனிதனும்
அவனோடு இறந்த மனிதமும்
ஸ்ரீதேவியின் மரணத்திலும்
சில நடிகர்களின் அரசியலிலும்
சீக்கிரமே கரைந்துபோகும்
சிற்சில நாளில் மறந்துபோகும்!

இன்றைய தேதியில்
இடுகாட்டு மண்ணில்
புதைபடக் காத்திருப்பவை
இரண்டு விடயங்கள்!

ஒன்று
மதுவின் பிரேதம்

மற்றொன்று
மனித நேயம்!


- நிலவை.பார்த்திபன்

பேருந்துக் கட்டண உயர்வு

பேருந்துக் கட்டண உயர்வு



பழைய இரும்பு தகரத்த
பஸ்ஸுன்னு ஓட்டுறான்
பயணம் பன்ற எங்களுக்கு
மரண பயத்த காட்டுறான்!

துருப்பிடிச்ச கம்பியத்தான்
கியருன்னு ஆட்டுறான்
டிக்கட்ட மட்டும் கலர் கலரா
அச்சடிச்சு நீட்டுறான்!

கழண்டுபோன படிக்கட்ட
கயிற போட்டு கட்டுறான்
ஓஞ்சுபோன பிரேக்க நம்பி
ஓரமா போய் முட்டுறான்!

சீட்டு ஜன்னல் எல்லாம் பிஞ்சு
எங்கள பாத்து இளிக்குது!
எழவெடுத்த இஞ்சின் சத்தம்
ரெண்டு காதையும் கிழிக்குது!

பத்து நிமிஷம் மழை பேஞ்சா
மொத்த பஸ்ஸும் ஒழுகுது
போதும் என்னை விட்டுடுன்னு
கெஞ்சி கேட்டு அழுகுது!

மாமாங்கத்துக்கு ஒருமுறதான்
ஒடஞ்சதெல்லாம் மாத்துறான்
சிக்கல் இத்தன இருக்கும்போது
டிக்கட் விலைய ஏத்துறான்!

ஏத்துனத கொறைக்கச் சொன்னா
எகத்தாளம் பேசுறான்
ஓட்டுப்போட்ட சனங்க முகத்தில்
கரிய அள்ளி பூசுறான்!

ஏதேதோ சாக்கு சொல்லி
ஏழை சனத்த ஏய்க்கிறான்
போராட்டம் பன்றவன
போலீஸ விட்டு தூக்குறான்!

அரசாங்கம் நடத்த சொன்னா
அராஜகம் நடக்குது
போக்குவரத்து துறை இப்ப
சீக்கு வந்து கெடக்குது!

அரசு பஸ்ஸில் பயனம் செய்ய
அடுத்த செலவக் கொறைக்கிறோம்
கஷ்டப்பட்டு சேர்த்த பணத்த உங்க
கட்ட வண்டியில் இறைக்கிறோம்!

காசு வாங்கி ஓட்டுப்போட்டு
நாசமாகி நிக்கிறோம்!
ஓட்ட வித்த பாவத்துக்கு இப்ப
ஒப்பாரி வக்கிறோம்!

நாடித் துடிப்பே...

குறிப்பு: கருப்பன் திரைப்படத்தில் வரும் "உசுரே உசுரே" பாடலை அதன் அசல் வரிகளுக்கு மாற்றாக ஒரு தாய் மகனுக்காக பாடுவது போல எழுதியது....
 



நாடித் துடிப்பே நீதானே 

நீ வாடிப்போனா தாங்காதே! 

  

உன் சிரிப்பே போதுமே 

சிறுக்கி இவளுக்கு! 

சீனிப் பாகா இனிக்கும்! 

  

கவலை உனக்குன்னா 

கலங்கும் எனக்குத்தான்  

தனலா  மனசு தவிக்கும்! 

  

உனக்கு ஈடா 

உலகம் பூரா 

உறவேதும் கிடையாது உயிரோட்டமா! 

  

நாடித் துடிப்பே நீதானே 

நீ வாடிப்போனா தாங்காதே! 

  

  

வெயிலுல நடந்தா 

மழையில நனைஞ்சா 

என் முந்தானை உனக்காக குடையாகுமே! 

  

படிச்சு நீ களைச்சு 

பட்டினியா படுத்தா 

பிடிசோறு உனக்கூட்ட மனசாறுமே! 

  

வேல கெடச்சு வெளியூரு போயி 

குரல அனுப்பி எனத் தேத்துன! 

ஏழை வீட்டு எலச்சோறு போல 

எப்பவாச்சும் முகங்காட்டுன! 

  

மறுஜென்மம் எடுத்தாலும் கூட 

மகனா நீ பொறக்கத்தான் போற! 

சாமிட்ட நான்கேட்க வேற இல்ல! 

  

  

நாடித் துடிப்பே நீதானே 

நீ வாடிப்போனா தாங்காதே! 

  

  

ஆத்திரம் உன்மேல் ஆயிரம் இருந்தும்  

அம்மான்னு நீ சொன்னா உருகிப்போறேன்! 

  

உசுரு போகும் நேரத்தில்கூட 

உன்னைப் பார்த்த பின்னதான் கண்மூடுவேன்! 

  

உனக்கு ஒண்ணுன்னா ஓடோடி வந்து 

உசுரக் குடுத்து காப்பாத்துவேன்! 

வாழ்நாள் முழுக்க உனக்காக வாழ்ந்து 

சாவுக்குப் பின்னாலும் காத்து நிப்பேன்! 

  

எம்பாசம் என்னன்னு சொல்ல 

எங்கேயும் வார்த்தையே இல்ல 

தாயன்புக்கீடாக ஏதுமில்ல! 

  

நாடித் துடிப்பே நீதானே 

நீ வாடிப்போனா தாங்காதே! 

  

உன் சிரிப்பே போதுமே 

சிறுக்கி இவளுக்கு! 

சீனிப் பாகா இனிக்கும்! 

  

கவலை உனக்குன்னா 

கலங்கும் எனக்குத்தான்  

தனலா  மனசு தவிக்கும்! 

  

உனக்கு ஈடா 

உலகம் பூரா 

உறவேதும் கிடையாது உயிரோட்டமா! 

  

  

நாடித் துடிப்பே.....