Saturday, November 08, 2025

அடர் எச்சம்


 கடை வீதியில்
காலை மிதித்துவிட்டு
கண்டுகொள்ளாமல் செல்பவனைக்
கடிந்து கொள்ளாது
கடந்து செல்கிறேன்!
தலைபோகும் அவசரமென
கடன் வாங்கிச் சென்றுவிட்டு
தலைமறைவானவனை
தாயுள்ளத்தோடு மன்னிக்கிறேன்!
ஒரு வழிப்பாதையொன்றில்
எதிர் திசையில்
வந்து மோதியவனை
"சாரி" என்ற வார்த்தைக்காகச்
சகித்துக்கொள்கிறேன்!
நான்கு ரூபாய் சில்லறைக்காக
நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனரிடம்
அறச்சீற்றம் கொள்வதைவிட்டு
அடுத்த பேருந்தின் திசை பார்த்து
அமைதியாய் நிற்கிறேன்!
இரவுப் பயணத்தின்போது
உறக்கம் கெடும்படி
உரக்கக் கதை பேசுவோரை
நிறுத்தச் சொல்ல மனமின்றி
பொறுத்துக் கொள்கிறேன்!
மறுபுறம்
அலுவல் பணிகளுக்கும்
அடுக்களைக்கும் நடுவில்
அல்லாடித் திரிந்த அழுத்தத்தில்
எப்போதோ ஒருமுறை
மனைவி வெளிப்படுத்தும்
எரிச்சலுக்கெதிராய்
எரிமலையின் சீற்றத்துடன்
எதிர்வினையாற்றுகிறேன்!
என்ன செய்ய?
அகற்றப்பட்டதாய் நம்பியிருந்த
ஆணாதிக்க சிந்தனையின்
அடர் எச்சமொன்றை
மறைக்கும் வழி தெரியாமல்
மனம் பதைக்கிறேன்!
சாதி வெறியைத் தன்
சால்வைக்குள் ஒளிக்க எண்ணும்
சமகால அரசியல்வாதியைப்போல!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome