அதிகாலை துயிலெழுந்து
அடுக்களையின் அனல் சுமந்து
சுற்றியோடி உழைத்து
சிற்றுண்டியோடு
மதியத்திற்கும் சமைத்து
பளபளப்பாக்கி
அழுக்கு துவைத்து
அவசரமாய் குளித்து
பிள்ளைகள் எழுப்பி
பின்தொடர்ந்து விரட்டி
புத்தகப்பை நிரப்பி
பள்ளிக்கு அனுப்பி
காப்பியுடன் கணவன் எழுப்பி
அவனையும் அலுவலகம் கிளப்பி
அகோரப் பசிக்கு
அரை வயிறு உண்டு
வியர்த்து விறுவிறுக்க
வேலைக்குச் சென்று திரும்பி
இரவு உணவுக்கென
இன்னொருமுறை அடுக்களை நுழைபவளின்
வியர்வை பூத்த கழுத்தில்
விழுந்து கிடக்கும் தாலிக்கு
தாம்புக் கயிற்றின் சாயல்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome