காணும் நேரமெல்லாம்
கண் சிமிட்டுகிறாள்!
அருகே சென்றால்
அழகாய் புன்னகைக்கிறாள்!
இருகரம் உயர்த்தி
"இப்போதே தூக்கு" என்கிறாள்!
சட்டைப்பையில் கை நுழைத்து
சாக்லேட் தேடுகிறாள்!
கைகளில் முத்தமிட்டால்
கன்னத்தில்
துடைத்துக்கொள்கிறாள்!
புரியாத மழலையில்
எதை எதையோ பேசுகிறாள்!
பொம்மைகளைக்
கையில் திணித்து
என்னையும்
குழந்தையாக்குகிறாள்!
கால்களுக்குப் பின்னே
ஒளிந்துகொண்டு
கண்டுபிடி என்கிறாள்!
வாகனத்தில் எனைக்
கண்டுவிட்டால்
தானும் வருவதாக
அடம் பிடிக்கிறாள்!
இரண்டு நாள்களாக
இவை எதுவுமில்லை!
எதிர் வீட்டுக் குழந்தை
ஊருக்குப் போயிருக்கிறாள்!
அவ்வப்போது கிடைக்கும்
இது போன்ற
சிறு இடைவெளிகளில்
ஒரு முறையாவது
எட்டிப் பார்த்துவிடுகிறது
மகள் இல்லாத ஏக்கம்
மனதின் ஒரு மூலையில்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome