விடாது கரையும் காகம் கண்டால்
விருந்தினர் வருகையென்பார்!
இடது கண் துடிப்பதைக் கண்டு
இன்னலுக்கான நேரம் என்பார்!
சகுனத் தடை பற்றிய விபரங்கள்
சகலத்தையும் அறிந்து வைத்திருந்தார்!
அத்தனைக்குப் பின்பும்
அறிவியல் இருப்பதாக
அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த தாத்தா
அடக்க இயலாத சிறுநீரை
அறுந்து கிடந்த
மின் கம்பியில் கழித்ததில்
அடுத்த நிமிடமே
செத்துப் போனார்!
துக்கம் விசாரிக்க வந்த
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்
தற்கால மேதையென
தாத்தாவைப் புகழ்வது கண்டு
தலையில் அடித்துக் கொள்கிறாள் பாட்டி!
புரியாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்
புகைப்படத்தில் தாத்தா!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome