Saturday, November 08, 2025

பயம்

 


பணம் தேடிப் பயணிக்கும்
அதிவேக வாழ்வில்
பயம் ஒன்று தினம் கண்டு
மனம் வீழும் சோர்வில்!
பழம் ஒன்று கனியாகும்
சிலபல நாளில்!
பயம் வந்து குடியேறும்
நொடியில் நம் தோளில்!
நிகழ்கால நிமிடங்கள்
இனிதானபோதும்
வருங்கால பயமொன்று
வலியேற்றிப் போகும்!
நிலையற்ற வாழ்வென்று
நினைக்கின்ற நேரம்
அலைபாயும் கடல்போல
அடிநெஞ்சு மாறும்!
உணர்வுகள் பலம் பெற
உயர் நூல்கள் கற்றும்
உதறல்கள் சில வந்து
உள்நெஞ்சைச் சுற்றும்!
குருதிக்குள் குடியேறும்
குழப்பங்கள் மொத்தம்
குடுவைக்குள் அடைபட்ட
குரங்கைப்போல் கத்தும்!
எதனாலே என்றுணர
இயலாதபோதும்
எதிர்கால பயம் வந்து
இதயத்தில் மோதும்!
எளிதாகப் புறந்தள்ள
இயலாமல் நாளும்
நெளிகின்ற பாம்பாக
நெஞ்சோரம் வாழும்!
விண் நோக்கி முன்னேறும்
விலைவாசி கண்டு
கண் முன்னே கலக்கங்கள்
கதைபேசி நிற்கும்!
என்னாகும் எதிர்காலம்
என்றெண்ணும்போது
தன்னாலே ஒரு பாரம்
தலையேறும் நித்தம்!
தயவின்றி தடுமாறும்
முதியோர்கள் கண்டு
வயதானால் வரும் துன்பம்
பயமேற்றும் இன்று!
பயமின்றி உயிர்வாழ
பரிகாரமொன்று
எவரேனும் உரைத்தாலும்
அதுபோதும் இங்கு!
மனிதாபிமானங்கள்
மரிக்கின்ற வேகம்
இனி போகப் போக
படுமோசமாகும்!
இதையெண்ணும்போதெல்லாம்
இதயத்தின் பாரம்
இருநூறு மடங்காக
எடையேறிப்போகும்!
இனபேத சண்டைகள்
அரங்கேறும் கோலம்
விழி காண முடியாத
படி நாளை மாறும்!
மதவாதம் மதுமோகம்
நடுவில் நம் தேசம்!
வருங்கால இளைஞர்கள்
நிலையென்னவாகும்?
பணவீக்கம் நம் நாட்டை
பலவீனமாக்க
பணி நீக்கம் மறு பக்கம்
பயம் காட்டி நிற்க
பல கூறாய் நம் நாட்டை
பங்கிட்டு விற்க
முயல்வோரை முடமாக்கி
யார் நாட்டை காக்க?
இல்லாத வியாதிகளை
இருமடங்காய் காட்ட
பரிசோதனை பலவற்றை
பரிந்துரைத்து நீட்ட
மண்டை வலியென்றாலும்
மரண பயமூட்ட
மருத்துவர்கள் சிலருண்டு
யாரிவரை மாற்ற?
தொற்று நோய்கள் தோன்றி நமைப்
பற்றும்படி நெருங்க!
சுற்றம் நட்பு சொந்தமெல்லாம்
சுனங்கி வீட்டில் அடங்க!
ஒட்டு மொத்த உலகமுமே
அச்சப்பட்டு நடுங்க!
பட்ட பாடு நீங்கி என்று
பழைய வாழ்வைத் தொடங்க?
விபத்தென்றால் படபடக்கும்
காலமது போக
விபத்துகளைப் படமெடுக்கும்
காலம் உருவாக
அபத்தங்களின் உருவாக
அனைவருமே மாற
அச்சப்படும் ஆழ்மனதின்
அவலம் என்று தீர?
உணவு தரும் உழவுத் தொழில்
உருக்குலைந்து கிடக்க
உனக்கும் எனக்கும் பொருப்பிருந்தும்
ஊமைகளாய் கடக்க
அடுத்து வரும் தலைமுறைக்கு
அன்னமேது கொடுக்க?
அச்சம் நெஞ்சில் அறைகிறதே
அனைத்தையும் நாம் நினைக்க!
பெருவணிகப் பேய்கள் சில
கடை விரிப்பதாலே
சிறு வணிகத் தொழில்களெல்லாம்
சிதைந்து விழும் கீழே!
மறுபடி ஒரு தொழில் தொடங்க
துணிவு வருவதெங்கே?
வரும்படிக்கு வழியில்லாமல்
வாழ்வு நகர்வதெங்கே?
கலாச்சார சீரழிவில்
கற்பு கரைந்து போக
கால மாற்றக் கருமங்களை
எண்ணி உள்ளம் நோக
நாளை என்ற நிஜத்தை சிறிய
நடுக்கத்தோடு நோக்க
கோழைகளின் வரிசையிலா
நம் பெயரைச் சேரக்க?
வணிகமயமாகிவரும்
புனிதமான கல்வி!
வாழக் கற்றுத் தருகிறதா
என்பதுதான் கேள்வி!
தற்கொலையில் முடிகிறதே
இளைஞர்களின் தோல்வி!
பெற்றோரின் நிலை நினைத்தால்
பயம் கொள்ளுதே ஆவி!
புவி வெவெப்பமயமாகும்
நிலை பற்றி எண்ண
எவருக்கும் பொருப்பில்லை
வேறென்ன சொல்ல?
வளர்கின்ற தலைமுறைக்கு
நாம் செய்வதென்ன?
அச்சம் மட்டும் கொள்வதனால்
ஆகப்போவதென்ன?
எதிர்கால பயங்களெல்லாம்
எரிந்து போக வேண்டும்!
புது இரத்தத் துளிகள் உடலில்
புகுந்து ஓட வேண்டும்!
வருங்காலம் வசந்தமாக
வழிகள் பிறக்க வேண்டும்!
இரும்பாக இதயம் மாற
இயற்கை அருள வேண்டும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome