Sunday, November 02, 2025

இனி மன்னித்து விடவேண்டியதுதான்

 


சற்றேறக்குறைய
அதே சாயல்!
அதே நிறம்!
நடு நெற்றியில்
அதே சந்தனக் கீற்று!
கன்னக் கதுப்பில்
அந்த கறுப்பு மச்சம்!
ஒளி வீசும் அதே
ஒற்றை மூக்குத்தி!
முன் நெற்றியில் விழும்
கூந்தல் கற்றையை
நடு விரலால் ஒதுக்கி விடும்
அதே லாவகம்!
புருவம் சுருக்கிப்
புன்னகைக்கும் அதே அழகு!
இது அவளாகத்தான்
இருக்கவேண்டும்!
உற்று நோக்கியபின்
உறுதியாகச் சொல்கிறேன்
ஆம் அவளேதான்!
அடிப்பாவி...
ஏழாண்டுகளுக்கு முன்பு
ஏமாற்றிச் சென்றவள்!
இனிக்க இனிக்கப் பேசி
என்னை இளித்தவாயனாக்கியவள்
எத்தனை நாள்கள் ஏங்கியிருப்பேன்?
எத்தனை இரவுகள்
உறக்கம் தொலைத்திருப்பேன்?
காலம் இன்றவளை
என் கண் முன் நிறுத்தியிருக்கிறது!
கழுத்தில் புதிதாய் தாலிச்சரடு!
அருகிலிருப்பது
அவள் கணவனாகத்தான் இருக்கவேண்டும்
மோசக்காரி....
இதோ என்னைக் கவனித்துவிட்டாள்!
அவளது கூரிய விழிகளில்
குற்ற உணர்வு!
முன் நெற்றியில்
துளிர்க்கும் வியர்வையை
முந்தானை முனையால்
ஒற்றி எடுக்கிறாள்!
ஏனிப்படிச் செய்தாய்?
எதிரே போய் நின்று
எல்லேரும் பார்க்கும்படி
கேட்டுவிட வேண்டியதுதான்!
முடிவு செய்து
முன் நகர்வதற்குள்
தன் கணவன் காதில்
ஏதோ கிசுகிசுத்துவிட்டு
காணாமல் போகிறாள்!
எங்கு சென்றிருப்பாள்?
எங்கு சென்றாலும் இன்று
விடுவதாக இல்லை
என எண்ணிக்கொண்டிருந்த
அதே வேளையில்
பின்னிருந்து ஒலிக்கிறது
சன்னமாக ஒரு கொலுசொலி!
திரும்பியதும் திகைக்கிறேன்
அவளேதான்!
நான் வாய் திறப்பதற்குள்
என் கரம் பற்றுகிறாள்!
"தயவு செய்து என்னைத்
தவறாக எண்ணாதே,
என் சூழ்நிலை அப்படி"
கலங்கிய கண்களுடன்
இதைச் சொல்லிவிட்டு
காணாமல் போகிறாள் மீண்டும்!
அவள் பற்றிப் பிரிந்த கரங்களில்
சுற்றி மடித்த நிலையில்
நான்கு நூறு ரூபாய்த் தாள்கள்!
நாளை தருகிறேன்
என என்னை நம்பவைத்து
அன்று வாங்கிச் சென்ற
அதே நானூறு ரூபாய்!
எப்போது தருவாள் என
ஏழாண்டுகளாய்
தவிக்கவிட்டுச் சென்றவள்
இன்று
பட்ட கடன் அடைத்திருக்கிறாள்!
நான் பட்ட துயர்
துடைத்திருக்கிறாள்!
வேறு வழியில்லை!
இனி மன்னித்து விடவேண்டியதுதான்
அவளை!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome