Monday, December 12, 2022

கிழக்கு வானமே இலக்கு

 

பாதையெங்கிலும்
பாகுபாடுகள்!
பந்தயக் களமெங்கும்
பள்ளம் மேடுகள்!
எட்டா உயரத்தில்
எல்லைக் கோடுகள்!
எல்லையின் குறுக்கே
எலும்புக் கூடுகள்!
மகுடத்தின் பாதையில்
மண்டை ஓடுகள்!
முன்னேற்றப் பாதையில்
முள்வெளிக் காடுகள்!
கழுத்தை இறுக்கும்
கட்டுப்பாடுகள்!
கால் பிடித்திழுக்கும்
கறுப்பு ஆடுகள்!
எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகள்!
தடுத்து நமை தரையில் வீழ்த்த
அடுத்தடுத்து எழும் அலைகள்!
இனி இலகுவாக இருக்கப்போவதில்லை இலக்குகள் எதுவும்!
இனி சுலபமாக இருக்கப்போவதில்லை வெற்றிகள் எதுவும்!
வழுக்குப் பாறைகளே
வாழ்க்கையின் பாதைகள் என்றானபின்
அழுந்தக் காலுன்ற வேண்டியதன் அவசியத்தை
விழுந்து கிடப்பவனிடம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!
கிழக்கு வானமே இலக்கு என்றானபின்
நம் முயற்சியின் வேகத்தை மும்மடங்காக்க வேண்டியிருக்கிறது!
சோர்ந்து நிற்கும் ஒவ்வொரு நொடியும்
நமைச் சூழ்ந்து கொள்கிறது சூனியம்!
ஊர்ந்து செல்லும் வரையில் இங்கு
உயர்வு என்பது எப்படி சாத்தியம்?
வேங்கைகளின் பாதையில்
வேகத்தடைகள் பொருட்டல்ல!
வெற்றியோ தோல்வியோ
வேறொருவர் இங்கு பொருப்பல்ல!
பீனிக்சுகளின் அகராதியில்
பின்வாங்கலுக்கு இடமில்லை!
பிரபஞ்சத்தின் உயரங்களில்
பிற்பகல் தாண்டியும் இரவில்லை!
தாமதிக்கும் ஒவ்வோர் நொடியிலும்
தாழிடப்படுகின்றன சில கதவுகள்!
காத்திருப்புகளின் இடைவெளியில்தான்
கலைந்துபோகின்றன பல கனவுகள்!

- நிலவை பாா்த்திபன்

முட்டா பய மவனுங்களா

 

"அடுத்த புள்ள ஆம்பளப் புள்ளதேன்"
அடிச்சு சத்தியம் பண்ணாக
அரசபட்டி சோசியரும்
கோடாங்கித் தாத்தாவும்
இப்ப மகளுக்கு
பொம்பளப் புள்ள பொறந்தும்
அடுத்த மக கல்யாணத்துக்காக
அங்கனதான் போயி நிக்குறாக
சாதகத்தத் தூக்கிட்டு
பாண்டியம்மாளும் அவ பட்டாளத்து புருசனும்!
சகுனஞ் சரியில்லன்னு
நல்ல காரியத்துக்கு புறப்பட்ட
நாகராசு மாமாவ
மக்யா நாளு போகச் சொன்னாரு
மாரியாத்தா கோயில் பூசாரி!
மக்யா நாளு மதியான பஸ்ஸு
மரத்துல மோதுனதுல
மண்டை பொளந்துருச்சு மாமாவுக்கு!
அடுத்து எந்த திசையில
வைத்தியத்துக்கு போறதுன்னு
புருவம் வரைக்கு கட்டோட
பூசாரிட்ட போயி நிக்குறாரு மாமா!
வாஸ்துகாரவக ஒன்னுக்கு ரெண்டு பேர கேட்டு பாத்து பாத்து கட்டுன
புது வீட்ல
பத்து மாசமா பயங்கர சண்ட!
வடக்குப் பக்கம் வாசல மாத்துனா
எடக்கு எதுவும் வராதுன்னு
வாஸ்துக் காரன் சொன்னத நம்பி
மறுபடியும் வாசல பேக்குறாரு
மலேசியாவுல இருந்து வந்த மருதமுத்து!
பெருசா நாலு ஹோமம் வளத்தா
பெரிய ஆளா ஆயிராலாம்னு
பெருமாள் கோயில் அய்யரு அவக
பங்காளிகளோட வந்து
புகையடிச்சிட்டு போன
நாலே வாரத்துல
ஹோமம் வளத்த இடத்துக்கு நேர்மேல
தூக்கு மாட்டிச் செத்துப் போச்சு
தமிழ் வாத்தியாரோட
தங்கச்சி மக!
இப்ப தீட்டுக் கழிக்க
திரும்பவும் ஒரு ஹோமம் வளக்க
தயாராகிட்டு இருக்காரு
தமிழ் வாத்தியாரு!
"சாங்கியம் சடங்க எல்லாம்
செத்த நாளைக்கு கெடப்புல போட்டுட்டு
மனசுக்கு சரின்னு படறத மட்டும்
செஞ்சு பாருங்கடா
முட்டா பய மவனுங்களா"ன்னு
தண்ணியப் போட்டு வந்து
பஞ்சாயத்துக்கு நடுவுல சலம்புன
கீழத்தெரு மணிகண்டன் மேல
இப்ப பிராது குடுத்துருக்கு
முக்காவாசி ஊருசனம்!
நாளைக்கு சாஸ்தா கோயில்
சாமியாடி சொல்றபடி
தண்டன குடுக்கப் போறாக
அந்தத் தறுதலப் பயலுக்கு!

- நிலவை பாா்த்திபன்

கவலைகள்

 

அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனையின்
அவசரச் சிகிச்சைப் பிரிவு!
அங்கு அச்சமும் கவலையும்
அப்பிக் கிடக்கும் முகங்கள்!
நிரம்பி வழியும் ஒரு நீதிமன்ற வளாகம்!
அங்கு விரக்தி, விசும்பலுடன்
விதவிதமான முகங்கள்!
பரபரப்பானதொரு ஒரு காவல் நிலையம்!
அங்கு பயம் பதற்றம் படிந்த
பலப்பல முகங்கள்!
இறுதிச் சடங்கு நடைபெறுமொரு மயானவெளி!
அங்கு இழப்பின் வலியால்
இதயம் வெம்பி அழுதபடி சில முகங்கள்!
இவையனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கடந்து வந்தபின்
இப்போது சொல்லுங்கள்!
இன்னுமா பெரிதாய்த் தெரிகிறது
இன்றளவிலான உங்கள் கவலைகள்?

- நிலவை பாாத்திபன்

புத்தகம்

 

அச்சடித்த காகிதங்களின்
அழகான தொகுப்பு!
மிச்சமுள்ள அறியாமைகளைச்
சுட்டெரிக்கும் நெருப்பு!
வையகத்தின் கையடக்கப் பிரதி!
ஐயமகற்ற கையிலெடுத்துப் படி!
புரட்டப்படாத புத்தகம் ஒவ்வொன்றும்
திறக்கப்படாத பெட்டகம்!
புத்தகங்களைப் புரட்டு
புத்திக்குள் ஏதினி இருட்டு?
வாழ்க்கையை வசந்தமாக்க
வாசிப்பை வழக்கமாக்கு!
புத்தகங்களைக் கையிலெடு
பூமியிலிருந்தே வானம் தொடு!
புத்தகம் உன்னைப் புத்தனாக்கும்!
சித்தத்தின் பித்தம் நீக்கி
உன்னைச் சுத்தமாக்கும்!
புத்தியை புத்தகங்களால் நிரப்பு!
சத்தியமாய் உனக்கில்லை இறப்பு!
பூசையறையின் தேவைகளை
புத்தக அறைகள் நிரப்பட்டும்!
புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கி
பூமியில் வாசம் பரப்பட்டும்!

- நிலவை பாா்த்திபன்

விளையும் பயிர்

 

பள்ளிக்கூட வகுப்பறையில்
சல்லித்தனம் நடக்குது!
சொல்லித்தரும் வாத்தியார
சுள்ளானெல்லாம் அடக்குது!
வீணைன்னு நெனச்சதெல்லாம்
விசிலடிச்சுத் திரியிது!
தூணுன்னு நெனச்சதெல்லாம்
துருப்பிடிச்சு உரியுது!
முத்தலாக விளையும் பயிர்
முளையிலயே தெரியுது!
பெத்தவங்க அடிவயிறு
பெட்ரோலா எரியுது!
குத்து விளக்கெல்லாம்
கூட்டம் சேர்ந்து குடிக்குது!
கத்துத் தரும் வாத்தியார
சுத்தி கும்மி அடிக்குது!
முடி வெட்ட சொன்னதுக்கே
முறுக்கிக்கிட்டு மொறைக்குது!
அடிபட்ட நாயப்போல
ஆத்திரத்தில் குறைக்குது!
தேர்வெழுத போகும் கையில்
பீர் பாட்டில் நுரைக்குது!
போற பாத தெரியாம
போத கண்ண மறைக்குது!
வால் இல்லா வானரங்க
வகுப்பறைய கெடுக்குது!
மேல்நிலைப் பள்ளி மேசைகள
மேல ஏறி ஒடைக்குது!
பாடம் வகுப்பில் நடக்கும்போதே
பாட்டுப்பாடி ஆடுது!
தோரணையா படுத்துத் தூங்க
தோழி மடியத் தேடுது!
படிக்கச் சொன்ன வாத்தியார
அடிக்க கைய ஓங்குது!
மாணவ சமுதாயத்தோட
மானத்தையே வாங்குது!
சமுத்திரமா நினைச்சதிப்போ
சாக்கடையா தேங்குது!
சமுதாய நலன்களுக்கு
மிகப்பெரிய தீங்கிது!
வருங்காலத் தூண்களெல்லாம்
வளஞ்சு போயி கெடக்குது!
பெரம்பெடுத்து திருத்தலாம்னா
சட்டம் வந்து தடுக்குது!

- நிலவை பாா்த்திபன்

விரும்பியதைச் சுமக்கட்டும் அவர்கள்


 விட்டுவிடுங்கள் எதிர்ப்பாளர்களே

விரும்பியதைச் சுமக்கட்டும் அவர்கள்!
பாரம்பரியச் சுமைகள் எதுவும்
பாரமாகத் தெரியாதவரை
பல்லக்குகள் இன்னும் பல சுமந்து
பரவசமடையட்டும் அவர்கள்!
சம்பிரதாயம் என்கிற பெயரில்
சக மனிதனைச் சுமக்கும்போது
சவத்தின் நினைவு வராதவரை
சங்கடமின்றி சுமந்து வந்து
சந்தோசப்படட்டும் அவர்கள்!
விட்டுவிடுங்கள் எதிர்ப்பாளர்களே
விரும்பியதைச் சுமக்கட்டும் அவர்கள்!
மரபுகளைக் காப்பதற்காய்
மதியிழப்பதே மகிழ்ச்சியெனில்
மனதார சுமந்து சுமந்து
மகத்துவம் பெறட்டும் அவர்கள்!
சுயமரியாதை அழுக்கு தீர
சுத்தமாகக் குளித்த அந்த
சூத்திரத் தோள் சுமையால்
சுபீட்சம் அடையட்டும் அவர்கள்!
விட்டுவிடுங்கள் எதிர்ப்பாளர்களே
விரும்பியதைச் சுமக்கட்டும் அவர்கள்!
குற்ற உணர்வு ஏதுமில்லா
குரு மகா சந்நிதானங்களை
உப்பு மூட்டை தூக்கியாவது
உவகையடையட்டும் அவர்கள்!
ஆறாம் அறிவையே
அதிகச் சுமையென தவிர்த்தவர்கள்
ஆதீனப் பல்லக்கு சுமந்தாவது
ஆனந்தம் அடையட்டும் பாவம்!
விட்டுவிடுங்கள் எதிர்ப்பாளர்களே
விரும்பியதைச் சுமக்கட்டும் அவர்கள்!

- நிலவை பாா்த்திபன்

இங்குதான்... இம்முகநூலில்தான்...


 முன்பின் அறியா சிலர்

நண்பர்களாவதும் இங்குதான்!
ஆருயிர் நண்பர் சிலர்
அரசியல் எதிரியாவதும் இங்குதான்!
விருப்பக் குறியீடுகளுக்காக
விழிகள் ஏங்குவதும் இங்குதான்!
கருப்பு வளையமிரண்டை
கண்கள் வாங்குவதும் இங்குதான்!
உள்ளிருந்த சில திறமைகள்
உயிர் பெறுவதும் இங்குதான்!
கல்லெறிந்து சிலர் மனதை
காயம் செய்வதும் இங்குதான்!
பொன்னான பொழுதுகள் பல
பொசுங்கிப் போவதும் இங்குதான்!
புண்ணான மனம் சில கணம்
புத்துணர்வடைவதும் இங்குதான்!
பள்ளிப் பருவக் காதலியை
கள்ளத்தனமாய் தேடுவதும் இங்குதான்!
இல்லை இங்கவள் என்றறிந்து
இதயம் வெம்புவதும் இங்குதான்!
கைபேசி திரை தேய்த்து
கட்டைவிரல் களைப்பதும் இங்குதான்!
பொய்பேசித் திரிபவர்கள்
போற்றப்படுவதும் இங்குதான்!
புழுதிக் கறை படியாமல்
புரட்சி செய்வதும் இங்குதான்!
புரளி, பொய் வதந்திகள்
புகுந்து விளையாடுவதும் இங்குதான்!
குடும்பத்திற்கான நேரத்தை
விரும்பி தொலைப்பதும் இங்குதான்!
குழம்பு ரசம் வைத்தாலும்
கூவிப் பிதற்றுவதும் இங்குதான்!
முகமறியா சிலர்
முகவரி பெறுவதும் இங்குதான்!
முக்காடு போட்டு சில
முதலைகள் உலவுவதும் இங்குதான்!
காலை எழுந்தவுடன் பலர்
கண் விழிப்பதும் இங்குதான்!
இதன் ஆழம் தெரியாத சிலர்
அடிமையாவதும் இங்குதான்!

- நிலவை பாா்த்திபன்

கழற்றப்பட்ட கைவிலங்குகள்


 "விசாரித்துவிட்டு

விடிந்ததும் அனுப்புகிறோம்"!
பத்தொன்பது வயது அறிவு
முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு
இழுத்துச் செல்லப்பட்டது இப்படித்தான்!
பதினோராயிரம் விடியல்களை
எதிர்கொள்ள வேண்டியிருந்தது
பாவப்பட்ட அந்த மனிதன்
தன் தாயிடம் வந்து சேர!
பலநூறு கொடுமைகளின்
வலிதாங்க வேண்டியிருந்தது
பரிதாபத்திற்குறிய அவனின்
பாரங்கள் அனைத்தும் தீர!
மின்கலம் இரண்டை
அதன் பின்புலம் அறியாது
வாங்கித் தந்த ஒரு வழக்கு
அதன்பின்னே இருட்டானது அவன் கிழக்கு!
திருத்தப்பட்ட வாக்குமூலங்களாலும்
தீவிரமான சில திரிபு வாதங்களாலும்
துளியும் தொடர்பிலாத ஒரு கொலைக்கு!
தூக்குக் கயிறே தூண்டிலானது
அவன் தலைக்கு!
தூக்கு ஆயுளானது!
துணைக்கு நோயும் சேர்ந்தது!
சிதைந்து போனது இளமை
சிறைக் கம்பிகளின் பின்னே!
புதைந்து கிடந்தது நீதி
இப்புதிய தீர்ப்பிற்கு முன்னே!
இவன் கைவிலங்குகள் கழற்றப்பட்டதில்
சில மனித விலங்குகளுக்கு மகிழ்ச்சியில்லை!
இவன் சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதில்
சில திமிங்கலங்களுக்கு திருப்தியில்லை!
முப்பத்தோராண்டுகள் சிறைவாசம்!
முடிவில் ஜெயித்தது தாய்ப்பாசம்!
சத்தியம் வென்றதில் சந்தோசம்!
சில சகுனிகள் வயிற்றில் புகை வாசம்!
ஆறேழு நாட்களுக்கினி
பேரறிவாளனே இங்கு பேசுபொருள்!
அற்புதம்மாள்கள் இருக்கும்வரை
பேரறிவாளன்களுக்கு ஏது இருள்?

- நிலவை பாா்த்திபன்

ஜெய் ஜக்கம்மா!

நட்ட நடுச் சாமம்!
ரெண்டு ரெண்டர மணி இருக்கும்!
அமைதிய கிழிச்செறிஞ்சு
அடிவயித்தக் கலக்குது அந்த சத்தம்!
அரகுறையா முழிச்சுக் கெடந்தவகள
அரட்டியெடுக்குது அந்த சத்தம்!
ஊள விட்டு கொலச்சுத் தள்ளுது
ஊரு நாயெல்லாம் கூட சேந்து!
கிடுகிடுன்னு கெளம்பி
கெழக்கு மேற்கா நகருது அந்த
குடுகுடுப்ப சத்தம்!
சத்தம் நெருங்க நெருங்க
சஞ்சலம் வருது சனங்க மனசுல!
சாமக் கோடாங்கி வாக்க நெனச்சு
சங்கடப்படுதுக சாமத்து இருட்டுல!
சாவடி தாண்டி ஊரு நொழஞ்சு
சந்து சந்தா புகுந்து வருது
சாமக் கோடாங்கியோட
குடுகுடுப்ப சத்தம்!
நம்ம வீட்டு வாசல்ல நின்னு
என்ன வாக்கு சொல்லப் போறானோன்னு
ஏகத்துக்கும் பயப்படுதுக
சாகக் கெடக்குற பெருசுக சில!
கெட்ட வாக்கு எதுவும் வந்துரக்கூடாதுன்னு
குட்ட முனிய வேண்டிக்குது
வட்டிக்கட பால்ராசு பொண்டாட்டி!
கண்டதையும் சொல்லீருவானோன்னு
காது பொத்திப் படுத்துக் கெடக்கு
காலு வெளங்காத
காத்தாயி கெழவி!
தப்பா கிப்பா
ஒளரி வச்சுறப்போறான்னு
தனக்குள்ள பொலம்பித் தவிக்கிது
தலப் பிரசவத்துக்கு
ஊருக்கு வந்துருக்குற
தலையாரி செல்லப்பாண்டி மக!
கோளாரா எதுவும் சொல்லலன்னா
கோயிலுக்கு வந்து வெளக்கேத்துறேன்னு
மனசுக்குள்ள நேந்துக்குது
மச்சு வீட்டு பெரியாத்தா!
அபச குணமா எதுவுஞ்
சொல்லீரக்கூடாதுன்னு
அவகவுக கொல சாமிய வேண்டிக்கிறாக
அச்சப்படுற அம்புட்டு சனமும்!
அங்குட்டு
தெலுங்கு பாதி
தமிழ் பாதின்னு
கலந்து பேசி வாக்குச் சொல்லி
கடந்து வாராரு கோடாங்கி
கதவு வாசல் ஒன்னு விடாம!
சீல ரவிக்க பொஞ்சாதிக்கு!
சீப்பு சோப்பு சின்ன மகளுக்கு!
காலேஜு பீசு பெரியவளுக்கு!
நாளைக்கு வசூல நெனச்சு
நடுங்கிக்கிட்டே நடந்து வாராரு
நடுப்பட்டி சாமக் கோடாங்கி
நடு நடுவுல ஜக்கம்மாவ கும்புட்டபடி!

- நிலவை பாா்த்திபன்

 

ஊன்றுகோல்


 பலமுறை பார்க்க நேர்கிறது

அந்தப் பார்வையற்ற இளைஞனை!
பெரும்பாலும் பேருந்து நிறுத்தத்தில்
அல்லது சாலையோரம் அவன் நடந்து செல்லும் தருணங்களில்!
மெலிந்த தேகம்!
சராசரிக்கும் சற்றதிகமான உயரம்!
கழுத்துப் பட்டை மற்றும்
கை முனைகளில் பொத்தானிட்டுப்
பூட்டிய முழுக்கை சட்டை!
ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி!
படபடத்து இடவலமாக அலையும்
பார்வையற்ற விழிகள்!
பட்டும் படாமல் தரைதட்டியபடி
கையில் ஒரு பிரத்தியேகக் கைத்தடி!
சுற்றியெழும் ஒலிகளைத்
துள்ளியமாக உள்வாங்க வேண்டி
சற்றே தலை திருப்பியபடியான நடை!
மேடு பள்ளம் திருப்பங்களை
மிகச் சரியாக அவதானித்துக் கடக்கும் நேர்த்தியான
அவனது வேகம்
பழக்கப்பட்ட சாலை இது அவனுக்கு
என்பதை பறைசாற்றுகிறது!
பணி நிமித்தமாகவே இந்த
தினசரிப் பேருந்துப் பயணம்
எனப் புரிந்துகொள்ள முடிகிறது!
பெரிய இலக்குகளோ அல்லது
பொருளாதாரத் தேவைகளோ அவனை
யாசகம் பெறுவதையும்
போக்குவரத்து சந்திப்புகளில்
பொருட்கள் விற்பதையும் தாண்டி
பயணப்பட வைத்திருக்கிறது!
அவன்மீது கொண்ட மதிப்பிற்கு
அதுவே காரணமாகவும் இருந்தது!
பார்வைக்கு புலப்படாத இவ்வுலகம்
பழகிப் போயிருக்கக் கூடும் அவனுக்கு!
பார்வையற்ற இவ்வாழ்க்கை
பரீட்சயமாகியிருக்கக் கூடும்
அவனுக்கு!
ஆயினும் அவனைக்
காண நேரும் அனைத்து தருணங்களிலும்
கனமேறித்தான் போகின்றன
கண்களும் மனதும்!
ஏதேனுமோர் வழியில்
என்னாலான உதவியை
அவனுக்குச் செய்யவேண்டுமென
எனக்குள் சொல்லிக்கொள்வேன்!
அவன் சாலை கடக்க எத்தனித்த
சமயமொன்றில்
உதவி செய்ய முயன்ற எனக்கு
உறுதியாக பதில் வந்தது அவனிடமிருந்து
"இல்லை விட்டுவிடுங்கள்
நானே கடந்துவிடுவேன்"
அவன் உறுதியில் தடுமாறிய எனக்கு
உடனடியாகத் தேவைப்பட்டது ஒரு ஊன்றுகோல்!

- நிலவை பாா்த்திபன்

பாசிசக் கறை


 அராஜக அரசியலின்
அடுத்த கட்டம் இது!
மதவெறி அரசியலால்
மக்கள் அடையும் நஷ்டம் இது!
சொந்த மாநில மக்களின் மீது
எந்த அரசும் செய்யத் துணியாத
பாதகம் இது!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை
வேடிக்கை பார்க்கும்
பாரதம் இது!
அங்கு இடிந்து கிடப்பவை
இஸ்லாமிய வீடுகள் மட்டுமல்ல!
நல்ல குடிகள் நாட்டின்மீது
கொண்டிருந்த நம்பிக்கையும்தான்!
அங்கு பெயர்ந்து கிடப்பவை
சிறுபான்மையினரின் இல்லச் சுவர்கள் மட்டுமல்ல!
மிச்சம் மீதியிருந்த மனித நேயமும் மத நல்லிணக்கமும்தான்!
ஒருபுறம் கோசாலைகள் எழுப்பிக் கொண்டாடப்படுகின்றன மாடுகள்!
மறுபுரம் கொடூரமாக இடிபடுகின்றன
ஒரு சாராரின் வீடுகள்!
சாய்க்கப்படும் கட்டிடங்களின் பின்னே
சத்தமின்றி எழுப்பப்படுகின்றன
சமத்துவத்திற்கான சமாதிகள்!
சர்வதேசம் உற்றுநோக்கும்
சரித்திரப் பிழையாகின்றன
சாமானியர்களின் மீதான சவாரிகள்!
நேற்றுவரைக் கூடிக் களித்துக் குடியிருந்த வீடுகள்
இன்று வெறும் குப்பை மேடுகள்!
நேற்றுவரை குடும்பங்கள் கூடி வாழ்ந்த கட்டிடங்கள்!
இன்று கற்குவியலாய்ப் போன வெற்றிடங்கள்!
பெயர்ந்து கிடக்கும் ஒவ்வொரு செங்கலிலும்
பெரும்பான்மைச் சமூகத்தை நோக்கிய ஓராயிரம் கேள்விகள்!
அயர்ந்துறங்கும் சிலரின் மனசாட்சியால்
அறம் சாரந்த முன்னெடுப்புகளில்
ஆயிரம் தோல்விகள்!
நூபுர் சர்மாக்கள் நூலிழையில் தப்பிப்பதும்
அஃப்ரீன் பாத்திமாக்கள் மீது
அவதூறுகள் கற்பிப்பதும்
ஆட்சியாளர்களின்
அயோக்கியத்தனத்திற்கான சான்று!
இதைச் சத்தமின்றி ரசிக்கும் யாவரும்
சனாதனச் சாத்தான்களைப் போன்று!
பரிதவிக்கும் மக்களைக் கண்டு
பரிகாசித்துச் சிரிக்கும் சிலரின்
பற்களெங்கும் பாசிசக் கறை!
மதக்கலவரமாக இவை மாறாததே
மரண வியாபாரிகளின் ஒரே குறை!
புல்டோசர்களுக்கென புத்தி எதுவுமில்லை!
முடிவெடுக்கும் அதிகாரம் அதை முடுக்குபவனுக்கும் இல்லை!
இயன்ற விரைவில் அவை
இடம் பெயரலாம்
இந்துக்களின் ஒரு பகுதியினரை நோக்கி!

- நிலவை பாா்த்திபன்