Tuesday, May 28, 2019

சூழல் காப்பது சுகம்



காசு தேடியே களைத்த மனிதா 
காடு செய்வோம் வா!
மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம் 
மாற்றியமைப்போம் வா!

தூசு நிறைந்த காற்றினைச் சலித்து 
தூய்மை செய்வோம் வா! - நாம் 
தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம் 
துளிர்த்திடச் செய்வோம் வா!

வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம் 
வளமாய் மாற்றிட வா! 
இரண்டு மரங்களை இழந்தோமென்றால் 
இருபதை நடுவோம் வா!

தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்க 
தூண்டில்கள் செய்வோம் வா!
மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து 
மீட்போம் இயற்கையை வா!

வன உயிர்களின் வாழ்விடம் காக்க 
வகை செய்வோம் வா! 
வணிக நோக்கில் வனம் அழிக்கும் 
வஞ்சகம் எதிர்ப்போம் வா!

சூழல் காப்பதே சுகமென அறிய
தோழனே நீயும் வா!
சூரியச் சூட்டின் வீரியம் குறைக்க
சூத்திரம் செய்வோம் வா!

இருகரம் கூப்பி இயற்கையைத் தொழுவோம்
இளைஞனே நீயும் வா!
இறப்புக்கு முன்பே இயன்றதைச் செய்து 
இலக்கினைத் தொடுவோம் வா!

சுற்றுச் சூழலின் சுத்தம் காத்திட
யுத்தம் செய்வோம் வா!
தொற்று நோய்களைத் தோற்கச் செய்ய
சற்று முயல்வோம் வா!

மரங்களைக் காக்க கரங்களைக் கோர்ப்போம்!
மனிதா நீயும் வா!
உறக்கங்கள் இனியும் உள்ளத்தில் எதற்கு
உழைத்திட நீயும் வா!

வறட்சியைக் கொன்று வளங்களைக் காக்க
வாலிபனே நீ வா!
வருங்காலத்தை வசந்தங்கள் தழுவ
வழிவகை செய்வோம் வா!

பாரதத் தாய்க்கு பசுமை உடுத்தி
பரவசம் கொள்வோம் வா!
வேறெது நமக்கு இதைவிட பெருமை
வேர்களில் நீர்விட வா!

தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை 
அணிசேர்ந்திட நீ வா!
இனிவரும் தலைமுறை நமையே பழிக்கும் 
இருப்பதைக் காப்போம் வா!

- நிலவை பாா்த்திபன்

ஈகைத் திருநாள்

துவங்கியது ரமலான் எனும்
புனிதமிகு மாதம்! - இதில்
துளிர்க்கட்டும் ஈகை குணம்
இதயங்கள் தோறும்!

பள்ளிவாசல் எங்கும்
பக்திமணம் கமழும்! - இது
பட்டினியாய் இருந்து நமது
பாவம் தீர்க்கும் தருணம்!

ஐம்பெரும் கடமைகளில்
மூன்றாவது இந்நோன்பு! - அதில்
ஐம்புலனும் அடக்குதல்
மனிதர்க்கு மான்பு!

சஹர், இப்தார் இரண்டிற்கும்
இடைப்பட்ட நேரம் - இதில்
பசி, தாகம் நம்மோடு
போரிட்டுத் தோற்க்கும்!

திருமறை ஓதல்கள்
தினந்தோறும் தொடரும்!
ஐம்முறைத் தொழுகையால்
ஆனந்தம் படரும்!

உண்ணாமை, பருகாமை,
புணராமை தவிர
பகைமையை மறப்பதும்
நோன்பென்று அறிக!

மறை போற்றும் மாதமிதில்
இறையோனைத் தொழுவோம்!
பிறை காணும் நாள்வரையில்
நோன்பதனைத் தொடர்வோம்!

நபிமார்கள் நல்வாக்கை
நம் நெஞ்சில் ஏற்போம்!
நல்லிணக்கம் தழைத்தோங்க
நம் கரங்கள் கோர்ப்போம்!

ஈகைத் திருநாளதனை
வரவேற்று மகிழ்வோம்!
இதமான வாழ்த்துகளை
எல்லோர்க்கும் பகிர்வோம்!

- நிலவை பார்த்திபன்

Tuesday, April 30, 2019

மே தினம்

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி 
உருவெடுத்த நாள் மே தினம்! - இது
முதலாளித்துவ மூர்க்கத்தை எதிர்த்து
முழக்கங்கள் எழுப்பிய ஓர் தினம்!

தொழிலாளர்களின் தோள் சுமை குறைய
வழி காட்டிய நாள் மே தினம்! - இது
விழிகளில் சிவப்பை ஏந்திய கூட்டம்
விதிகளை மாற்றிய ஓர் தினம்!

பாட்டாளிகளின் பலத்தை இந்த
பார் உணர்ந்த நாள் மே தினம்! - இது
காட்டாறுகளின் கரங்கள் இணைந்து
கடலாய் மாறிய ஓர் தினம்!

விறைப்பு ஏறிய விரல்கள் சேர்ந்து
விடியல் கண்ட நாள் மே தினம்! - இது
வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை
விழி முன் காட்டிய ஓர் தினம்!

எழுச்சியின் பொருளை எட்டு திசைக்கும்
எடுத்துச் சொன்ன நாள் மே தினம்! - இது
கிளர்ச்சியைக் கண்டு கிரீடங்கள் நடுங்கிய
நிகழ்ச்சியை உணர்த்தும் ஓர் தினம்!

சுரண்டல்வாதிகள் சூடுபட்டதை
சுருங்கச் சொல்லும் நாள் மே தினம்! - இது
சுரக்கும் வியர்வையின் சூட்டில் உலகம்
சுழல்வதை விளக்கும் ஓர் தினம்!

எட்டு மணி நேர உழைப்பெனும் எல்லையை
எட்டிய நாள் அது மே தினம்! - இங்கு
ஒட்டுத் துணியோடு பட்டு நெய்பவனின்
ஒடுங்கிய நிலை என்று மேம்படும்?

 - நிலவை பார்த்திபன்

Wednesday, April 24, 2019

திமிர்பிடித்த தீவிரவாதமே

தேவாலயச் சுவர்களில்
தெறித்துச் சிதறி வழிகிறது
ஏதுமறியா அப்பாவிகளின் உதிரத் துளிகள்!

சாமானியரின் சடலங்கள்
சதை பெயர்ந்து கிடப்பது கண்டு
சத்தமின்றி அழுகின்றன சமூகத்தின் விழிகள்!

இறந்து கிடப்பவர்கள்
இழைத்த பாவமென்ன?
இலங்கைத் தீவின்மேல்
இறைவனுக்குக் கோபமென்ன?

மூர்க்கமாய் பல உயிர்கள் குடித்த
முகமறியா மூடர்களே!
தீர்ந்ததா உங்கள் தீவிரவாத வெறி?
வேறெங்கு நீளக் காத்திருக்கிறது 
உங்கள் வெடிகுண்டின் திரி?

வெடிச் சிதைவுகளில் சிக்கி
துடித்தடங்கிப்போன உயிர்களினூடே
நீங்கள் அடைந்திட்ட ஆதாயமென்ன?

நொடிப்பொழுதும் நிச்சயமற்ற
இப்புவி வாழ்வில் பூசல் கிளப்பும்
உங்கள் அகங்காரத்தினால் ஆவது என்ன?

அகலக் கண் திறந்து
அருகே சென்று பார்
உன் ஆயுதத்தினால் விளைந்த
அலங்கோலங்கள் அவை!

சகலமும் அடங்கிக் கிடக்கும்
சவங்களைப் பார்
சற்றுமுன் உயிர்ப்புடன் இருந்த
சதைக்கூளங்கள் இவை!

எத்தனை கதறல்கள்?
எத்தனை ஓலங்கள்?
அத்தனை திசைகளிலும்
அழுகையின் ஓசைகள்!

வெடித்த குண்டுகளுக்காக
வெட்கப்படுங்கள் மிருகங்களே
அப்பாவிகளைக் கொல்லும் நீங்கள்
எப்போதும் கோழைகள் என்பதற்காக!

அங்கு கேவியழுவோரின் கேள்விகளுக்கு
விடையென்ன விலங்குகளே?
காலம் உங்களைக் காவுகொள்ளும்
காத்திருப்போம் அதைக் காண்பதற்காக!

திமிர்பிடித்த தீவிரவாதமே  - உன்
வெறிபிடித்த வேட்டையை நிறுத்து!
பகை வளர்க்கும் பயங்கரவாதமே
வெல்வோம் உனது வேர்களை அறுத்து!

 - நிலவை பார்த்திபன்

நல்லவங்க ஆளனும்

தெருக்குத் தெரு கட்சிக்கொடி பேனரு!
ஒரு வழியா வந்துருச்சு தேர்தலு!
கர வேட்டி கூட்டம் நம்ம தேடுது!
காசக் காட்டி கண்ணாமூச்சி ஆடுது!

சௌக்கிதார் மோடின்னா யாரது?
வைக்கோலுக்கு மாடுதானா காவலு?
போனவாட்டி புழுகுனதே ஓவரு!
நீங்க போட்டுவிட்ட நாமம்கூட கோணலு!

மோடி ஜெயிக்க ஓட்டு போட்ட அண்ணாச்சி!
போன தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
நம்ப வச்சு கழுத்தறுத்து கொன்னாச்சு! - இப்போ
நாத்தம் புடிச்ச கட்சி ரெண்டும் ஒண்ணாச்சு!

திட்டம் போட்டு திருடி திருடி தின்னாச்சு! - நீங்க
புழுகியத நம்பி மனம் புண்ணாச்சு!
மதவெறியால் மனித நேயம் மண்ணாச்சு! - இப்போ
நாடு மொத்தம் நடுத்தெருவில் நின்னாச்சு!

ஒங்களோட ஆட்சி தானா நல்லாட்சி?
ஓட்டுனது போதும் ரீலு அந்தாச்சு!
கத்திரிக்கா முத்தி கடைக்கு வந்தாச்சு! 
சத்தியமா சனங்க எல்லாம் நொந்தாச்சு!

பழைய நோட்டு செல்லாதுன்னு சொன்னீங்க!
வரிசையில நிக்க வச்சு கொன்னீங்க!
கண்டு புடிச்ச கருப்பு பணம் எங்கீங்க?
பதினஞ்சு லட்சம் எப்போ தந்தீங்க?

மாட்டுக்காக மனுசங்கள கொன்னீங்க!
மக்களுக்கு நல்லதென்ன பன்னீங்க?
கார்பரேட்டுகாரன் பக்கம் நின்னீங்க!
ரஃபேல் காச பங்குபோட்டு தின்னீங்க!

புயல் வந்த நேரம் எங்க போனீங்க? - இப்ப
புடுங்குறது வேண்டாத ஆணிங்க!
கரச்சு வச்சு காத்திருக்கோம் சாணிங்க!
ஊத்திவிட்டா  பளபளக்கும் மேனிங்க!

போராட்டம் பன்னவன சுட்டீங்க!
வகுப்புவாத நெருப்ப வளத்து விட்டீங்க!
பெட்ரோல பேய் வெலைக்கு வித்தீங்க!
புதுசு புதுசா இந்தியாவ பெத்தீங்க!

இந்தியனே இப்பவாச்சும் முழிச்சுக்க!
ஓட்டு கேக்க மோடி வந்தா ஒளிஞ்சுக்க!
பட்டதெல்லாம் மனசுக்குள்ள நெனச்சுக்க!
பாழும் கிணத்தில் விழுந்துடாம பொழச்சுக்க!

காசுக்காக ஓட்ட வித்தா கேவலம்! 
களவாணி ஆகலாமா  நாமளும்?
கண்ணியமா நாம இனி வாழனும்! - அதுக்கு 
கண்டிப்பா நல்லவங்க ஆளனும்!

 - நிலவை பார்த்திபன்

Thursday, March 21, 2019

நெகிழி எனும் எதிரி

உற்றுப்பார் உனைச் சுற்றி!
உன் உடமையில் பாதி நெகிழி!
விட்டுப்பார் அதை உதறி!
உனை வாழ்த்திடும் இந்த பூமி!

எங்கும் நெகிழிப் பொருள்கள்!
அதில் எத்தனை எத்தனை விதங்கள்!
தோழா சற்றே பொறுங்கள்!
தொடலாமா அதை விரல்கள்?

மண்ணின் மீதென்ன கோபம்?
நெகிழிகள் பூமியின் சாபம்!
நிலமகள் அவளது சோகம்! - நாம் 
நினைத்தால் இல்லாது போகும்!

எளிதில் மக்காத நெகிழி - நம் 
எல்லோர்க்குமான எதிரி!
இப்பூமி உயிர்களின் விடுதி!
அது நெகிழியால் கெடாது தடுநீ!

விஞ்ஞானம் போகாது தோற்று!
நெகிழிக்கு உண்டு மாற்று!
நெஞ்சினில் அதனை ஏற்று 
புண்ணான பூமியைத் தேற்று!

நெகிழிப் பைகள் தவிர்ப்போம்!
யாரதைத் தந்தாலும் மறுப்போம்!
துணிப்பை கைகளில் எடுப்போம்!
பிறருக்கும் சொல்லிக் கொடுப்போம்!

Wednesday, March 13, 2019

மூர்க்கங்கள்

பலர் முன்னிலையில் தூக்கிலிடுங்கள் எனப்
பரவலான பரிந்துரைகள்!

அரபு நாட்டுத் தண்டனைச் சட்டங்களை
அவசரமாய் அமல்படுத்தச் சொல்லும்
ஆத்திரக் குரல்கள்!

கவலை கலந்த வரிகளுடன்
கணக்கற்ற கண்டனக் கவிதைகள்!

பெண்களையும் சேர்த்தே பழிகூறும்
பெரும்புத்திசாலிகளின் பிதற்றல்கள்!

பெண்களுக்கெனவே பிரத்தியேகமாய்
எண்ணிலடங்கா அறிவுரைகள்!

ஆண்பிள்ளை வளர்ப்பு பற்றிய
ஆயிரம் அலசல்கள்!

என எதிலும் மனம் லயிக்காதபடி
அடிமனதில் பேரிரைச்சலாய் எதிரொலிக்கிறது

"பெல்டால அடிக்காதீங்கண்ணா.."
என்ற பெருவலி சுமந்த கதறல்!

கதவு சாத்தி
காது பொத்தி
உடைந்து விழுந்து
உள்ளுக்குள் அழுது

கெட்ட வார்த்தைகளற்ற
ஒற்றைக் கவிதைக்காய்
எட்டு முறை முயன்று

என எது செய்தும் தணியாத
எரிநிலை மனதில்
மறுபடி மறுபடி வந்து
அமிலம் வீசிச் செல்கின்றன

"உன்ன நம்பித்தான வந்தேன்"
என்ற உயிர் கொல்லும் வார்த்தைகள்!

புழுங்கித் தவிக்கும் இதயத்தின்
புகைச்சலுக்கு நடுவே
கலங்கி நிற்கும் சகோதரிகளுக்கு
கடைசியாய் ஒன்று சொல்லி
கவிதையை முடிக்கிறேன்.

இங்கு முகமூடிகளுக்குப் பின்னே
முகங்கள் மட்டுமல்ல
சில மூர்க்கங்களும் உண்டு!

அதனால்தான்

மதிப்பிற்குரியவர்களாகத் தெரியும்
ஆண்களில் சிலர்
மனிதர்களாகக்கூட இருப்பதில்லை!


- நிலவை பார்த்திபன்

Thursday, February 28, 2019

பூக்காத கிளைகள்

திருத்த இயலா இறைவனின் பிழையாய்
இருபாலர்க்கும் இடைப்பட்ட நிலையாய்
குருஞ்சிச் செடியின் பூக்காத கிளையாய்
வருத்தக் கடலில் வற்றாத அலையாய்
இழந்து வாழ்கிறோம் 
எமக்கான பங்கை!
இத்திருநாட்டில் எமது பெயர் 
"திருநங்கை"!

கங்கையாய் பிறந்திருந்தால்
முக்கண்ணன் முடி சேர்ந்திருப்போம்! 
மங்கையாய் பிறந்திருந்தால் 
மானத்தோடு வாழ்ந்திருப்போம்!
திருநங்கையாய் பிறந்ததனால்
தினந்தோறும் மனம் வருந்துகிறோம்!

வலி, இரணத்தோடு 
வாழ்வைக் கடத்தும் எமக்கு 
அலி, அரவாணி என
ஆயிரம் பெயர்கள்!

இழி குணத்தோடு 
இழிவு செய்யும் பலரால்
இடைவிடாது எமை 
துரத்தும் துயர்கள்!

அரைவேக்காட்டு ஹார்மோன்களா?
குழம்பிப்போன குரோமோசோம்களா?
குற்றமென்று எதைச் சொல்ல?
புழுக்களா நாங்கள் புறந்தள்ள?

கொச்சையாய் விளிப்பீர்கள்!
துச்சமாய் மதிப்பீர்கள்!
இச்சைக்கு அழைப்பீர்கள்!
பிச்சைகேட்டால் வெறுப்பீர்கள்!

அழிந்து வரும் உயிரினங்கள் 
ஆயிரம் உண்டு காட்டினுள்ளே!
வதைந்து சாகும் உயிரினங்கள் 
எமைப்போலே நாட்டிலில்லை!

கழிப்பிடங்கள் கூட 
எமக்கென்று ஏதுமில்லை! 
மதிப்புடனே வாழும்படி 
வேலைதர யாருமில்லை!
அன்னை தந்தை இருந்தபோதும் 
ஆதரிக்க எவருமில்லை!
பெண்ணாய் எமை ஏற்பதற்கு 
பெண்களுக்கே மனது இல்லை!

கேலியாக எமை நோக்கும்படி 
கேவலங்கள் எம்மில் ஏது?
தோழியாக எமைப் பார்ப்பீர்களெனில்
பாலியல் தொழில் எமக்கெதற்கு?

சபிக்கப்பட்ட வர்கம் நாங்கள் 
சம உரிமை தாருங்கள்! - எமை 
தவிக்கவிட்ட கடவுளைக் கண்டால் 
சரியா இது எனக் கேளுங்கள்!

- நிலவை பார்த்திபன்

தேர்தல் மேடையில் தேசபக்தி நாடகம்

அடுத்தமுறையும் ஆட்சியமைக்க
அபிநந்தன்களை அடகுவையுங்கள்! - உங்கள்
அட்டூழியம் கண்டு ஆத்திரம் கொண்டால் 
'ஆண்டி இன்டியன்' என அடக்கி வையுங்கள்!

வழியும் குருதி
வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
வர்ணாசிரம தர்மம்
வரண்டிடாமல் காத்துக்கொள்ளுங்கள்!

எரியும் நெருப்பை
எப்போதும் அணையவிடாதீர்கள்!
எல்லைப் பதற்றங்களை
எள்ளளவும் தணியவிடாதீர்கள்!

வெடிமருந்து வாசம் பரப்பி
வெகுஜனங்களை வெறியேற்றுங்கள்!
வேற்றுமை கோஷம் எழுப்பி
வேண்டாதவர்களை வெளியேற்றுங்கள்!

பாவப்பட்ட பாரதமாதாவை
'ஜே' சொல்லி வெறுப்பேற்றுங்கள்!
ஓட்டுக்காக மக்களைப் பிரித்து - எங்கள்
ஒற்றுமையின் மீதே நெருப்பேற்றுங்கள்!

ரஃபேல் கறைகளை
இரத்தக் கறைகளால் மறையுங்கள்!
படேல் சிலைகளை
பாரதமெங்கும் நிறுவுங்கள்!

தேர்தல் வருகிறது
தேசபக்தியைத் தேடியெடுங்கள்!
தெருவோரத் தொழிலாளர்களின்
கால்பிடித்துக் கழுவிவிடுங்கள்!

படுதோல்வி பயம் வந்தால்
படைவீரர்களை பலி கொடுங்கள்!
பாகிஸ்தானுடன் பகைமை வளர்த்து
இந்தியர்களின் இதயம் தொடுங்கள்!

காஷ்மீரத்துப் பாவக்கணக்கை
காசி கங்கையில் கழுவிக்கொள்ளுங்கள்!
கார்ப்பரேட் கனவான்களை மட்டும்
காசுக்காகத் தழுவிக்கொள்ளுங்கள்!

ஒருபுறம் ஈவிரக்கத்திற்கு
ஈமக்கடன் செய்துகொண்டே
மறுபுறம் தீவிரவாதத்தை
திட்டித் தீருங்கள்!
பொருளாதாரத்தை பொசுக்கிய கையோடு
வருங்கால இந்தியாவிற்கு
வாய்க்கரிசி போடுங்கள்!

மதவெறி இரத்தம் பாய்ந்து
மலரட்டும் தாமரை!
மறுமுறையும் நீங்கள் வென்றால்
தேசத்திற்கே இனி தேய்பிறை!

- நிலவை பார்த்திபன்

Sunday, February 17, 2019

இறந்த வேங்கைகளுக்கோர் இரங்கற்பா

அங்கே சீருடைகளுடன் சிதறிக்கிடப்பவை
உயிரற்ற உடல்கள் மட்டுமல்ல!
உடைந்துபோன ஒவ்வொரு
இந்தியனின் உள்ளங்களும்தான்!

அங்கு இரணப்பட்டுக் கிடப்பது
இராணுவ முகாம்கள் மட்டுமல்ல!
மனம் நொந்த இந்தியர்களின்
பலகோடி இல்லங்களும்தான்!

தீராப் பசிகொண்ட தீவிரவாதம்
எங்கள் தீரர்கள் சிலரைத்
தின்று விழுங்கியிருக்கிறது!

குண்டு  வெடித்தது
புல்வாமாவில் என்றபோதும்
குமரிவரை இன்று குலுங்கியிருக்கிறது!

ஒருபுறம்
நேசமிகு உறவுகளைத்
தேசத்திற்காய் இழந்துவிட்டு
பேசவும் இயலாது
பெருந்துயரில் சில குடும்பங்கள்!

மறுபுறம் இது
மோசமிகு அலட்சியமா அல்லது
கூசவைக்கும் அரசியலா
என ஊசலாடும் ஊகங்களால்
உள்நாட்டில் சில குழப்பங்கள்!

கலவர இரத்தத்துளிகள்
காலங்காலமாய் சிதறித் தெறிப்பதால்
எந்நிறப் பூக்களாயினும்
செந்நிறத்திலேயே பூக்கின்றன
கண்ணீர் பிரதேசமான காஷ்மீரில்!

கனரக ஆயுதங்கள்
காலங்காலமாய் மோதிக்கொள்வதால்
வெடியோசையற்ற அமைதிக்காக
வெகுநாட்களாய் காத்திருக்கின்றன
காஷ்மீரத்து உயிர்களின் காதுகள்!

எங்கள் எல்லைச் சாமிகளை
எதிர்நோக்கத் துணிவின்றி
கொல்லைப்புற வழியாக
கொன்றுபோட்ட கோழைகளே!

அடிக்கோடிட்டு எழுதிக்கொள்ளுங்கள்
அழிவுகாலம் இது உங்களுக்கென்று!
அமைதிகொள்ளும் இனி எமது ஆயுதங்கள்
அசுரப் பிறவிகள் உங்களைக் கொன்று!

நீங்கள் தீவைத்து விளையாடும்
தீவிரவாதத் திரிமுனைகளை
உங்கள் குருதி கொண்டே இனி
குளிர்விப்போம்!

குண்டு வெடிப்பால் உண்டான
பள்ளங்கள் அனைத்தையும்
உங்கள் சவங்களால் நிரப்பி
சமன் செய்வோம்!

இனி வெள்ளைக் கொடிகள்
தன் வேலை மறந்து உறங்கட்டும்!
வெற்றிக் கொடிகள் நம்
மண்ணில் ஆழ இறங்கட்டும்!

- நிலவை பார்த்திபன்

Saturday, January 26, 2019

குடிமகனே எழு!

குடியரசு தினமின்று
குடிமகனே எழு!
குருதியை நாட்டிற்கு
கொடுத்தவனைத் தொழு!

தரிசான தேசத்தை உன்
அறிவாலே உழு!
பல கரங்கள் ஒன்றினைந்தால்
ஏதிங்கு பழு!

நம்பிக்கை நூல் கட்டி
இமயத்தை இழு!
இனியாள வேண்டும் நமை
இளைஞர்கள் குழு!

புது இரத்தம் பாய்ந்தால்தான்
புலியாகும் புழு!
தோல்வியையும் தோற்கடிக்கும்
உன் தோளின் வலு!

நடு நடுவே வீழ்ந்தாலும்
நயாக்ராவாய் விழு!
நாடுன்னைப் போற்றும் இனி
தயக்கங்கள் விடு!

எடுத்தால் இனி அகிம்சையெனும்
ஆயுதத்தை எடு!
தேசத்தின் வளர்ச்சியது
தேங்காமல் தடு!

விஞ்ஞான வில்லெடுத்து
அம்புகளைத் தொடு!
தேசத்தின் வளர்ச்சிக்கு
உன் பங்கைக் கொடு!

- நிலவை பார்த்திபன்

Monday, January 21, 2019

உறவுகளே கேளுங்கள்!


எம் எளிமை கண்டு எட்டி நிற்கும் 
உறவுகளே கேளுங்கள்!
எமக்கென்றும் உகந்ததல்ல 
பகட்டுக் குப்பைக் கூளங்கள்!

வெறுத்து எமை ஒதுக்குவதால் 
எமக்கில்லை இழப்புகள்!
எவரின் பொருட்டும் மாறாது 
எமக்கான இயல்புகள்!

உறவு என்ற சொல்லின் பொருளை 
முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்!
உதாசீனப்படுத்துவதால் 
கிடைப்பதென்ன சொல்லுங்கள்!

உறவுகளை வாழ்த்தும்போதும் 
உள்ளத்தினுள் பேதங்கள்!
சிலரை வாழ்த்தி சிலரைத் தவிர்க்கும் 
வேற்றுமை விநோதங்கள்! 

வாழ்த்துவோர்க்கு நன்றி கூட 
சொல்ல மறுக்கும் மடமைகள் !
காழ்ப்புணர்ச்சி கர்வம்தானா 
உங்களது உடமைகள்?

உயர்வு தாழ்வு பேதத்தோடு 
உறவை அணுகும் சிறுமைகள்!
உள்ளமதில் கள்ளம் கொண்டு 
உதட்டில் சிரிக்கும் கயமைகள்!

வசதி பார்த்து வருவதில்லை 
மனதில் பாச நேசங்கள்!
பணத்தைப் பார்த்து பாசம் வந்தால் 
அவையனைத்தும் வேஷங்கள்!

இரத்த சொந்தம் என்பதெல்லாம் 
வெற்று வார்த்தை ஜாலங்கள்!
சுத்தமான அன்பு ஒன்றே 
உறவின் இரத்த நாளங்கள்!

தரமற்ற சொந்தமெல்லாம் 
தள்ளி கொஞ்சம் நில்லுங்கள்! - உங்கள் 
தயவு எமக்குத் தேவையில்லை 
வழியைப் பார்த்துச் செல்லுங்கள்!

 - நிலவை பார்த்திபன் 
























Sunday, January 20, 2019

எவனடா இங்கு ஏழை?


தாக்கலானது மக்களவையில்
தரம்கெட்ட ஒரு மசோதா! - இது
சாக்கடை நீரில் மனுதர்மத்தை
சரியாய் சேர்த்த மசாலா!

இது ஜனாதிபதியின் ஒப்புதலோடு
ஜனங்களை ஏய்க்கும் சட்டம்!
இது சமூக நீதியை சாகடிக்க
சில சதிகாரர்களின் திட்டம்!

பொருளாதாரத்தின் பொருள் தெரியாதவர்
மோடி என்னுமொரு ஜென்மம்! - இன்று
பொருளாதாரத்தின் அடிப்படையில் - இட
ஒதுக்கீடென்பது வன்மம்!

எட்டு லட்சங்கள் ஈட்டுபவரெல்லாம்
எதுவுமில்லாத ஏழை!
ஒட்டுத் துணிகூட இல்லா இவருக்கு - இட
ஒதுக்கீட்டில்தான் இனி வேலை!

ஒடுக்கப்பட்டவனின் இட ஒதுக்கீட்டை
முடக்க நினைப்பது முறையா?
இதுவரை அதனை பிச்சையென்றவன்
இன்றதைப் பெறுவது சரியா?

ஆதிக்க சாதி ஏழைகளே - மாதம்
அறுபதாயிரம் போதாதா?
ஆண்டாண்டு காலம் அடங்கி கிடந்தவர்கள் 
ஆறுதல் பெறுவது பொருக்காதா?

உயர்சாதியினரின் ஓட்டுக்காக
முயற்சிகள் பல செய்யும் அரசே!
உலகம் உங்கள் முகத்தில் உமிழ்ந்திடும்
தருணம் வருகுது அருகே!

Tuesday, January 15, 2019

தைமகளே வருக

தைமகளே வருக


கைநிறைய களிப்பு கொண்டு 
தை மகளே வருக! 
வையமெங்கும் தமிழ் செழிக்க 
வரங்கள் கொண்டு தருக! 

பைந்தமிழின் பெருமைதனை 
பறைசாற்றி வருக! 
உழவர் வாழ்வு உயரும் பொருட்டு 
உன்னதங்கள் தருக! 

நைந்துபோன தமிழர் வாழ்வு 
நலம் பெறவே வருக! 
தமிழருக்காய்ப் போராடும் 
தைரியங்கள் தருக! 

பொங்கலிட்டு அழைக்கின்றோம் 
பொன்மகளே வருக! 
பொய்க்காமல் பருவமழை 
பொழியும் நிலை தருக! 

கரும்பு, மஞ்சள், வண்ணக்கோலம் 
காண நீயும் வருக! 
ஜல்லிக்கட்டைக் கண்ணில் காணும் 
நல்ல வரம் தருக! 

புயல் வெள்ளம் ஏதுமில்லா 
புத்தாண்டே வருக! 
புதிய புத்தன் காந்திகளை 
பூமிக்குத் தருக!

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து


பொலிவுடனே பொங்கட்டும் 
இவ்வாண்டுப் பொங்கல்! 
நிரந்தரமாய் தங்கட்டும் 
நிம்மதி நம் வீட்டில்! 

பொல்லாத குணத்தை எல்லாம் 
போகியிலே தீ வைப்போம்! 
இல்லாத நற்குணங்கள் 
இரவல் வாங்கி சேமிப்போம்! 

உழவு இன்றி 
உலகம் இல்லை 
என்ற உண்மை 
உணருவோம்! 
உழவர் வாழ்வு 
உயர்ந்திடவே 
உறுதியேற்று 
உதவுவோம்! 

கதிரவனின் கருணைக்கு 
நன்றி கூறும் நாளிது! 
கரும்பு மென்று 
கவலை துப்பும் 
களிப்புமிகு நாளிது! 

வெல்லம் அரிசி 
ஒன்றாய் சேர்ந்து 
சொல்லும் செய்தி 
ஒன்றுதான்! 
கள்ளம் இல்லா 
உள்ளமிருந்தால் 
எல்லா நாளும் 
பொங்கல்தான்! 

தைமகளின் பிறந்தநாளை 
தமிழ் மணக்க போற்றுவோம்! 
பகலவனை வணங்கும் நாளில் 
பகைவரையும் வாழ்த்துவோம்! 

Sunday, January 13, 2019

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

போற்றிக் கொண்டாடிடுவோம்
பொங்கல் திருநாளை!
பொலிவுடன் வரவேற்றிடுவோம்
போகியின் மறுநாளை!

புலரட்டும் பூமிதனில்
புதியதொரு காலை!
புதுப்பானை பொங்கலிட்டு
துவங்குவோம் இந்நாளை!

வேற்றுமைகள் களைந்தெரிய
இது நல்ல வேளை!
இன்னல் துன்பம் அனைத்திற்கும்
இனியில்லை வேலை!

அனைவரையும் இனைத்திடுமினி
அன்பு எனும் சாலை!
ஏற்றமிகு வாழ்வமைந்தால்
எவருமில்லை ஏழை!

தை பிறந்தால் பிறப்பதிங்கே
வழி மட்டுமில்லை!
நம் தோள் வந்து சேருமினி
மகிழ்ச்சியெனும் மாலை!

வறண்ட நிலம் இனியாகும்
வளமான சோலை!
பாலை நிலம் உடுத்தட்டும்
பச்சை வண்ணச் சேலை!

புத்தாண்டென புரிந்துகொள்வோம்
தையின் முதல் நாளை!
புரியாதவர் படித்திடட்டும்
புரட்சிக் கவிஞர் நூலை!

- நிலவை பார்த்திபன்

Thursday, January 10, 2019

ஆறறிவு தேவையில்ல

ஆறறிவு தேவையில்ல

ஒறங்கிப்போன சாமிக்கிங்க
எறங்கி வர நேரமில்ல!
கொரங்கு ஒன்ன விட்டா என்
கொறையச் சொல்ல யாருமில்ல!

ஓஞ்சு போன வயசுலயும்
ஒழைக்காம சோறு இல்ல!
சீக்கு வந்து கெடந்தாலும்
சீந்த ஒரு நாதியில்ல!

எழவெடுத்த ஒலகத்துல
எனக்குன்னு ஏதுமில்ல!
விதி முடியும் நேரம்பாத்து
விழுந்து கெடக்கேன் வீதியில!

ஒத்த வாயி சோறுபோடும்
ஒறவு இல்ல ஊருக்குள்ள!
சோந்துபோன மனசுல நான்
சொமக்காத பாரமில்ல!

நெறைய சொந்தம் இருந்துங்கூட
நெஞ்சுக்குள்ள ஈரமில்ல!
இவிங்க வந்து கொள்ளி வச்சா
வேகாது ஈரக்கொல!

பொதிமாடாப் பொழச்சதெல்லாம்
போதும் இந்த பூமியில!
கூட்டி என்ன போகச்சொல்லி
கும்புடாத சாமியில்ல!

அஞ்சறிவா ஒன்னப் பாத்த
எவனுக்குமே மூளையில்ல!
ஆறுதல காமிக்க
ஆறறிவு தேவையில்ல!

எறங்கி என்ன தேத்துற நீ
எனக்கு இனி மகன் போல!
கொரங்குன்னு ஒன்ன சொன்னா
கோவம் வரும் இனிமேல!

- நிலவை பார்த்திபன்

Tuesday, January 01, 2019

புத்தாண்டு வாழ்த்து


ஆங்கிலப் புத்தாண்டு
அழகாய்ப் பிறந்தது!
ஆனந்த வாழ்வின்
வாசல்கள் திறந்தது!
நெஞ்சின் பாரமெல்லாம்
நேற்றோடு இறந்தது!
நேர்மறை எண்ணங்கள்
நெஞ்சோடு இணைந்தது!
நம்பிக்கை மழைத்துளி
நம்மை நனைத்தது! - இனி
நன்மைகள் மட்டுமே
நமக்காய் விதித்தது!
புதிய சூரியன்
கிழக்கே உதித்தது! - அது
எதிர்மறை எண்ணங்கள்
எல்லாம் எரித்தது!
மகிழ்ச்சி என்னும் மயில்
தோகை விரித்தது!
மனதில் நம்பிக்கைகள்
மலர்ந்து சிரித்தது!
மடமை எண்ணங்கள்
மங்கி மரித்தது!
திடமான உள்ளம் - அதை
தின்று செரித்தது!
வளமான வாழ்வின்
வழிகள் தெரிந்தது!
பிணிகள் எல்லாம் நம்மை
விட்டுப் பிரிந்தது!
நேற்றோடு போதும்
கண்ணீர் வடித்தது! - இனி
நமை வந்து சேரும்
நமக்குப் பிடித்தது!