வளந்த ஊர விட்டு வந்து
வருசம் ஆச்சு இருவது
இளமைக்கால ஞாபகங்கள்
இன்னும் உள்ள இருக்குது
உருட்டி ஊர சுத்தி வந்து
டயரு வண்டி கிழிச்சது
பளிங்கி போல தண்ணி கொட்டும்
பம்பு செட்டில் குளிச்சது
கடலை முட்டாய் வாங்கி தின்னே
காசையெல்லாம் அழிச்சது
கூட படிச்ச பிள்ளைகிட்ட
குறும்பு செஞ்சு இளிச்சது
மூணாங்கிளாசு மூர்த்தி மேல
பேனா மைய தெளிச்சது
டீச்சர் அதப் பாத்ததுமே
திருட்டு முழி முழிச்சது
சவ்வு முட்டாய் திருடி அத
சட்டப் பையில் ஒளிச்சது
ஐஸ் திங்க காசு வாங்கி
ப்ரைஸ் அட்ட கிழிச்சது
புளியமரம் தேடித் தேடி
புளியங்கா அடிச்சது
செதறு தேங்கா பொறுக்கி அத
செரட்டையோட கடிச்சது
டம்ளருல குச்சி ஐச
உருகவிட்டு குடிச்சது
அறுந்த வாலு சேட்ட செஞ்சும்
அப்பாவியா நடிச்சது
கணக்கு நோட்டு உள்ள வச்சு
கத புத்தகம் படிச்சது
பள்ளிக்கூடம் பக்கத்துல
பட்டாம்பூச்சி புடிச்சது
நெனக்க நெனக்க அத்தனையும்
நெஞ்சுக்குள்ள இனிக்கிது
மலையளவு சந்தோசத்த
மண்டைக்குள்ள திணிக்கிது
பரபரப்பு வாழ்க்கையில
பணிச்சமைகள் கனக்குது!
பழச நெனைக்கும்போது மட்டும்
மனசு காத்தில் மெதக்குது
செத்தப்புறம் சேரப்போகும்
சொர்கலோகம் எதுக்கது?
சொந்த ஊரப் போல ஒரு
சொர்கம் இங்க வேறெது?
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome