Sunday, November 02, 2025

மொட்டை மாடி


 

முன்பொரு நாள்
முதல் சூர்யோதயம்
இரசித்தது இங்குதான்!
பின்பு சில இரவுகளில்
பிறை நிலவு இரசித்ததும்
இங்குதான்!
முற்பகல் நேரமொன்றில்
முதல் கவிதை
எழுதியது இங்குதான்!
திறந்தவெளி அமர்ந்து
தீக்கதிர் படித்ததும்
இங்குதான்!
வண்ணதாசனையும்
ஜெயகாந்தனையும்
வாசிக்கத் தொடங்கியது
இங்குதான்!
கண்திறந்தபடி
கனவுகள் பல கண்டதும்
இங்குதான்!
மின்தடை இரவில்
நிலாச்சோறு உண்டது
இங்குதான்!
நண்பர்களோடும்
நட்சத்திரங்களோடும்
நட்பை வளர்த்தது
இங்குதான்!
உறக்கம் தொலைத்த
இரவுகளில்
உலவித் திரிந்ததும்
இங்குதான்!
பறக்கும் பறவைக்
கூட்டம் கண்டு
பரவசமடைந்ததும்
இங்குதான்!
வாய் பிளந்து
வானவில் இரசித்ததும்
இங்குதான்!
பாய் விரித்து
வானொலி இரசித்ததும்
இங்குதான்!
காயப் போட்ட
வடகத்திற்காக
காவல் நின்றதும்
இங்குதான்!
தாயக்கட்டை உருட்டி
பரமபதம் ஆடியதும்
இங்குதான்!
பழைய செய்தித்தாள்
கிழித்து
பட்டம் விட்டது
இங்குதான்!
அலைவரிசையின்
திசை நோக்கி
ஆன்டனா திருப்பியதும்
இங்குதான்!
தனிமை விரும்பிய நேரங்களில்
தஞ்சமடைந்தது
இங்குதான்!
தவழும் தென்றல் காற்றில்
தன்னை மறந்ததும்
இங்குதான்!
அடுத்த வீட்டு அகிலா
அழகென்று உணர்ந்தது
இங்குதான்!
அவள் சிரித்த
ஒரு நாளில்
சிறகு முளைத்ததும்
இங்குதான்!
துவைத்துலர்த்திய
துணி எடுக்க
தூரலை முந்தி
ஓடியது இங்குதான்!
இதமான வெயிலில்
ஈரக்கூந்தல் உலர்த்தியவர்களை
இறுதியாகக் கண்டதும்
இங்குதான்!
தொட்டிச் செடியில்
குட்டி குட்டியாய்
ரோஜா வளர்த்தது
இங்குதான்!
எட்டிப்பார்க்கும்போதெல்லாம்
எல்லா சாதியினரும்
ஒரே உயரமாகத்
தெரிந்ததும் இங்குதான்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome