Saturday, November 08, 2025

சரவணன்களும் செந்தில்களும்


 

இதயத்திற்கு இதமான
இருபது நண்பர்களைப்
பட்டியலிடச் சொன்னால்
ஒரு செந்திலோ
சரவணனோ இன்றி
ஒருபோதும் அப்பட்டியல்கள்
முழுமை பெறுவதில்லை!
எழுபது எண்பதுகளில் பிறந்த
எல்லோரின் நட்பு வட்டத்திலும்
எப்படியும் இருந்துவிடுகிறார்கள்
சில செந்தில்களும் சரவணன்களும்!
சரவணன்களும் செந்தில்களும்
ஏதோவொரு வகையில்
சுவாரசியமானவர்களாகவே
இருப்பதாக என்னைப் போலவே
நீங்களும் உணர்ந்திருக்கக்கூடும்!
செந்தில் சரவணன்களில் பலர்
நெஞ்சில் பட்டவைகளை
நேராகச் சொல்பவராகவே
இருந்துவிடுகிறார்கள்!
சண்டை சச்சரவுகளையும்
அதன் பின்பான சமாதானங்களையும்
சகஜமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
விரக்தி நமை
விழுங்க முயலும் தருணங்களில்
"விட்றா பாத்துக்கலாம்" என்று
தோள் தட்டும் தோழர்களில்
ஒரு சரவணனோ செந்திலோ
இருக்கவே செய்கிறார்கள்!
நண்பனாய் செய்த உதவிக்கு
நன்றி சொல்லிக் கலங்கும்போது
நூற்றுக்கு எண்பது
செந்தில் சரவணன்கள்
மூக்கு நுனியில்
கோபம் கொள்கிறார்கள்
"நமக்குள்ள என்னடா?" என்ற
நயமான சலிப்புடன்!
வடிகட்டிய கஞ்சன்களாக
சில தருணங்களிலும்
வாரி வழங்கும் வள்ளல்களாக
பல தருணங்களிலும்
நமை ஆச்சரியப்படுத்தும்
அனேக நண்பர்களின் வரிசையில்
அவசியம் இருந்துவிடுகிறார்கள்
ஒரு செந்திலோ
அல்லது சரவணனோ!
பென்சில் திருடியவர்களாகவோ
அல்லது
உங்கள் பெஞ்சில் ஒருவராகவோ
என
ஏதோவொரு வகையில்
கவனிக்கத்தக்கவர்களாகவே
நம் வகுப்பறைகளில்
வலம் வந்திருக்கிறார்கள்
இந்த செந்தில்களும் சரவணன்களும்!
பழைய நட்புறவை
அதன் பசுமை மாறாமல்
பார்த்துக்கொள்வதை
சமரசமின்றிச் செய்கிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
கலகம் கலகலப்பு
அக்கறை அலப்பறையென
பலமுகம் காட்டுபவர்களாகவே
பலராலும் அறியப்படுகிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
இக்கவிதை வாசிக்கும்
கண்களுக்குச் சொந்தக்காரர்களாக
சில சரவணன்களும் செந்தில்களும்
இருப்பீர்களாயின் சந்தோசம் எனக்கு!
இக்கவிதை வாசிக்கையில்
சில செந்தில்களும் சரவணன்களும்
நினைவு கூறப்படுகிறார்களெனில்
இருமடங்கு மகிழ்ச்சி எனக்கு!
தொன்னூறுகளின் கடைசியிலும்
அதற்குப் பின்னரும்
பிறந்தவர்களுக்கு
சரவணன்களும் செந்தில்களும் நண்பர்களாய்
வாயத்திருக்க வாய்ப்புகள் குறைவு!
"பெயரில் என்ன இருக்கிறது?"
என்றுதானே கேட்கிறீர்கள்?
உண்மைதான்...
நம் துயரப் பொழுதுகளில்
துணைக்கு நிற்கும் நண்பர்களுக்கு
பெயர்கள் எதுவாக இருந்தால்தான் என்ன?

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome