கண்டதையும் எழுதி வைத்து
கவிதை என்கிறேன் - பலர்
கண்டு அதை புகழ வேண்டி
கனவு காண்கிறேன்!
குட்டிச் சுவற்றில் ஏறி அதை
குன்று என்கிறேன் - நான்
எட்டும் சிறு எல்லைகளை
எவரெஸ்ட் என்கிறேன்!
புகழுரைகள் கேட்கும்போது
புல்லரிக்கிறேன் - சிலர்
புத்தி சொல்லும்போது அதைப்
புறக்கணிக்கிறேன்!
அருமையென்று சிலருரைக்க
அகந்தை கொள்கிறேன்! - என்
இருமல்கூட இலக்கியமென
கருதிக்கொள்கிறேன்!
கரவொலிகள் காதில் விழ
கர்வம் கொள்கிறேன்! - எனை
கண்ணதாசன் கம்பன் சேர்ந்த
கலவை என்கிறேன்!
புகை மது தரும் போதைதனை
புகழில் உணர்கிறேன்!
புதுவித அந்த மயக்கத்தினில்
புகுந்து உழல்கிறேன்!
கொம்பிரண்டு முளைத்ததாக
கொக்கரிக்கிறேன் - நான்
அம்பைவிட கூர்மையென்று
நம்பிக்கொள்கிறேன்
என்னைப் போன்ற திறமையிங்கு
எவனுக்கென்கிறேன் - ஆனால்
உண்மை நிலை என்னவென்று
உணர மறுக்கிறேன்!
பொழுதுபோக எழுதுகோலை
பிடித்த கரங்களில்
விருது வந்து விரல் பிடிக்க
விருப்பம் கொள்கிறேன்!
விழுது விட்ட விருட்சங்களே
விழுந்து கிடக்கையில்
செடியளவு வளர்ந்ததற்கே
செருக்கு கொள்கிறேன்!
பழுதில்லாமல் எழுதிடவே
பயிலும் நிலையினில்
பாவலனாய் எண்ணிக்கொண்டு
பாடல் செய்கிறேன்!
எதையெதையோ எழுதினாலும்
எதுவும் புதிதில்லை!
நான் எழுதிக் கிழித்த சாதனைகள்
எதுவும் பெரிதில்லை!
திமிர் பிடித்த கலைஞனுக்கு
திருப்தியேயில்லை! - நான்
விளிம்புநிலை மாணவன்தான்
விகடகவியில்லை!
தரமான கவிஞன்
தலையில் கனமில்லாதவன்! - என்
சக கவிஞர்கள் நகத்திற்கும் நான்
சமமில்லாதவன்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome