உளுந்துக்கு அரிசியே
உற்றதுணை என்றானபின்
பிறந்த இரு பிள்ளைகள்
பிரிதொரு நாளில் அழைக்கப்பட்டன
இட்லியென்றும் தோசையென்றும்!
பார்க்காத சட்னிக்கு
இன்றுவரைக் கடமைப்பட்டுள்ளன
இட்லியும் தோசையும்
இன்னபிற சிற்றுண்டிகளும்!
பின்னிரவு தாண்டியும்
பிடிவாதமாய் வர மறுக்கும்
உறக்கம்
நண்பகல் நேரத்தில்
கண்களை அசத்துமெனில்
பின்புலத்தில் இருப்பது
வெண்பொங்கல் தவிர
வேறில்லை என்றறிக!
பூரித்து உப்பி பூரியாவதையும்
சத்தமின்றி வெந்து சப்பாத்தியாவதையும்
புகுந்த இடமே தீர்மானிக்கின்றன
கோதுமைக்கும்
சில பெண்களுக்கும்!
முந்தாநாள்வரை
முட்டி மோதிக்கொண்டிருந்த
கந்தசாமி வீட்டுக் கிடாயும் சேவலும்
சந்தோசமாய் சந்தித்துக்கொண்டன
பந்திக்கு விரிக்கப்பட்ட இலையில்
வெந்து அடங்கிய நிலையில்!
நாட்காட்டி நரகாசுரனாகிவிடுகிறது
கறிக் குழம்பு கனவுகளுடன்
விடியும் ஞாயிற்றுக் கிழமைகளை
விரத நாள் எனக் காட்டிக் கொடுக்கும்
வில்லத்தனத்தின்போது!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome