அத்தனை நேர்த்தியாகச்
செய்திருக்கத் தேவையில்லை
அடுத்த சில மணி நேரங்களில்
ஆழ்குழிக்குள் புதைபடப்போகும்
அந்த சவப்பெட்டியை!
சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்டாலும்
சுமப்பவர்களுக்கென்னவோ பாரம்தானே
அந்த சவப்பெட்டி?
சவப்பெட்டி செய்தவரிடமிருந்து
சம்மட்டி அடியாய் வந்தது பதில்...
கவனிக்கப்படாத கலைநயம் குறித்து
கவலையில்லை எனக்கு!
ஆனால் அவர்கள்
தோளில் சுமப்பது
என் தொழில் பக்தியை!
சொல்லி முடித்து
அடுத்த சவப்பெட்டிக்கான ஆணியை
அறையத் தொடங்கினார் அவர்!
ஆழமாக இறங்கியது
அடிமனதில் அந்த ஆணி!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome