Sunday, November 02, 2025

தயவுசெய்து தாழிட்டுக்கொள்ளுங்கள்


 என் வசதியளவு பார்த்தே

உங்கள் வாசல் கதவுகள் திறக்குமெனில்
தயவுசெய்து தாழிட்டுக்கொள்ளுங்கள்
தவறியும் தட்டப்போவதில்லை நான்!
என் வளர்ச்சியளவைப் பொறுத்தே
உங்களது வரவேற்புகள் இருக்குமெனில்
தெரிந்துகொள்ளுங்கள் ஒன்றை
மறந்தும் உங்களை
நெருங்கப்போவதில்லை நான்!
என் அந்தஸ்து ஒன்றே
உங்களது அன்பின் அளவுகோலெனில்
கரம்கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்
கடைசிவரை வேண்டாம் அந்த
களங்கப்பட்ட அன்பெனக்கு!
என் செல்வ செழிப்பைப் பொறுத்தே
உங்கள் உள்ளத்தில் இடம் கிடைக்குமெனில்
பிழைத்துக் கிடக்கும் இறுதி நொடிவரை
மழைக்கு அதில் ஒதுங்கவும்
மனமில்லை எனக்கு!
என் நிதிநிலை கொண்டே
எனை மதிப்பீடு செய்வீர்களாயின்
நினைவில் கொள்ளுங்கள் ஒன்றை
என் நிழலும் மதிக்காது உங்களை!
என் பொருளாதாரம் பொறுத்தே
எனக்கு மரியாதை செய்வீர்களாயின்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை
என் மயிருக்கும் சமானமில்லை அவை!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome