கொஞ்ச நேரம் இரு சாமி
கஞ்சி செத்த குடிச்சிக்கிறேன்!
அஞ்சு நிமிசம் பொறு சாமி
அடப்ப வந்து எடுத்து தாரேன்!
பொஞ்சாதிய அனுப்பியிருக்கேன்!
செத்த நேரம் பொறுத்துக்குங்க
மொத்த அடப்பும் எடுத்துத் தாரேன்!
எதுக்கு சாமி மொறைக்குறீக?
வார்த்தையள்ளி எறைக்கிறீக?
என்ன இப்ப சொல்லிட்டேன்னு
எக்குத்தப்பா வசவுறீக?
கொஞ்ச நேரம் பொறுங்கன்னா
கொலக் குத்தம் ஆயிருச்சா?
பெஞ்சுல உக்கார சொன்னா
பெரிய தப்பா போயிருச்சா?
எதுக்கெதுக்கோ வரிசையில
மணிக்கணக்கா நிக்கிறீக!
வகுத்த நெப்ப நேரம் கேட்டா
வாய் வலிக்கத் திட்டுறீக!
கக்கூசு போனாலும் நீங்க
கால் செருப்பு போடுறீக! - அத
அடப்பெடுக்க செருப்புக்கு நான்
காத்திருந்தா சாடுறீக!
கூப்புட்ட கொரலுக்கு நாங்க குனிஞ்சதெல்லாம் போதுமுங்க!
செருப்பில்லாம நடந்ததெல்லாம்
செத்துப் போன காலமுங்க!
கோவிக்க எதுவுமில்ல
கொஞ்ச நேரம் இரு சாமி!
அம்புட்டு அவசரம்னா
அடப்ப நீயே எடு சாமி!
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome