Sunday, November 02, 2025

சுக்குநூறாய் உடையட்டும்


 

சமூக அவலத்தின்
சகிக்க இயலா உச்சமது
சம்பவித்துக் கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
சாதிச் சாயம் பூசிய
பேதப் பேயதன்
பெரு நகங்கள்
தேதிக்கொரு மரணத்தை
தேடியலைந்தபடியே
இருக்கின்றன
ஆதிக்க வெறி பிடித்த
ஆட்கொள்ளி மிருகங்களின்
அகோரப் பசிக்கு
அப்பாவிக் காதலர்கள்
ஆகாரமாவதை
ஆணவக்கொலை என்று
ஆவணப்படுத்தியதோடு
பொறுப்பு தீர்ந்ததென
ஒதுங்கிக்கொள்கிறது
இந்தப் பொதுச் சமூகம்
குற்ற உணர்வுகள்
அற்றுப்போன அவர்களுள்
கற்றோர் கல்லாதோர்
பேதங்களில்லை
தொற்று நோயாய்
தொடரும் இப்பாதகத்தால்
இங்கு மரணங்கள் நிகழாத
மாதங்களில்லை
சம்பூகன் வதங்கள்
சமகாலத்திலும் தொடர்வதில்
சங்கடமேதுமில்லை
சிலர்க்கு
சாதி கடந்து
காதல் புரிவோரை
சவக்குழிக்குள் அனுப்புவதே
அவர்களின் இலக்கு
ஆத்திரம் கண் மறைக்க
ஆயுதம் எடுப்பவனுக்கு
சூத்திரன்தானே நாமென்ற
சுய அறிவு இருப்பதில்லை
கோத்திரம் குலம் பார்த்து
கோயில் குளம் மதம் பார்த்து
கோச்சார பலன் பார்த்து
காதல் எங்கும் பிறப்பதில்லை
நீங்கள் வெட்டிச் சாய்த்த
பிணங்கள்
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன
நீங்கள் வெட்டியாய் வாழும்
பிணங்களென்பதை!
ஆக மொத்தம் இங்கு
அவன் வேறு
நான் வேறு
என்பதல்ல சிக்கல்
அவன் கீழே
நான் மேலே
என்பதுதான்!
நாகரீக சமூகத்தில்
நாளையும் இது
தொடராதிருக்க
முற்றிப்போன சாதி வெறி
முற்றிலுமாய் உதிரட்டும்!
அல்லது...
சுற்றும் இந்த பூமிப்பந்து
சுக்குநூறாய் உடையட்டும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome