Sunday, December 30, 2018

இருட்டானது கிழக்கு

இது அஸ்தமன நேரம்
ஆதவனே அமைதி கொள்!

சுறுசுறுப்பின் சூத்திரத்தை
சூரியனுக்குச் சொல்லித்தந்த சிங்கமே
உருமிக் களைத்தது போதும்
இது உறக்கம் கொள்ளும் நேரம்!

கங்கை ஒன்றின் பயணம்
காவேரியில் முடிந்திருக்கிறது!
கலைஞர் என்னும் கடலை
காலம் அள்ளிக் குடித்திருக்கிறது!

திருக்குறளிற்கு உரை தந்த
திருக்குவளைத் தங்கமே!
இலக்கியத்தில் கரை கண்ட
இன்னொரு தமிழ்ச் சங்கமே!

அகிலம் இனி காண்பதெங்கே
அறிவாலய நிலவை? - நீ
அண்ணா மற்றும் பெரியாரின்
அழகான கலவை!

இதுவரை சக்கர நாற்காலி
உனைச் சுமந்தது!
இனி சரித்திர நாற்காலி
உனைச் சுமக்கும்!

எதிரிகளிடமும் துரோகிகளிடமும்
எத்தனை முறை வீழ்ந்தாலும்
உன் எழுதுகோல் ஊன்றியே
எழுந்து நின்றது திமுக!

உன் எழுதுகோலே
என் போன்றவர்களின்
தமிழுணர்விற்குத் திறவுகோல்!

நெஞ்சுக்கு நீதி தந்தது
நேற்றைய உன் பேனா!
நீ எழுதுகோலில் நிரப்பியது
மையா இல்லை தேனா?

மஞ்சள் துண்டைத் தோளில் சுமந்தாய்!
மக்கள் தொண்டால்
பலர் மனதில் அமர்ந்தாய்!
மாநிலத்தில் பலருக்கும் நீ
மற்றுமொரு தாய்!

ஆண்டவன் இல்லையென்று
அன்று நீ உரைத்ததை
ஆம் என ஏற்கிறோம்
ஐந்து முறை எமை
ஆண்டவன் நீ
இன்றில்லாத காரணத்தால்!

நீ சட்டசபை சென்றவரை
சவக்குழியில் விழாமல்
காப்பாற்றப்பட்டது சமூக நீதி!
நீ விட்டுச்சென்ற வெற்றிடத்தை
இட்டு நிரப்ப இனியேது
இன்னொரு கருணாநிதி?

கருப்புக் கண்ணாடியணிந்து
நெருப்பைத் தன்னோடு சுமந்து
சிறப்பாய் நடைபோட்ட
களப்போர் வீரனே
இறப்பேது உனக்கு? - எனினும்
இருட்டானது இன்று கிழக்கு!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome