Sunday, December 30, 2018

மன்னிக்க வேண்டுகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்



அரைக்கால் சட்டைப் பருவத்தில் 
ஐந்தாம் வகுப்புக் காலத்தில் 
அடியேன் செய்த தவறுக்கு 
அடுத்தவனை நான் கைகாட்ட 
அடிகள் எல்லாம் அவன்மீது 
அத்தனை பாவமும் என்மீது 
அன்றவன் வடித்த கண்ணீர் 
இன்றளவும் என் நினைவில்! 
என் மன்னிப்பதனைக் கோராது 
என்றும் மனது ஆறாது! 
மறுபடி அவனைக் காண 
எங்கு சென்று நான் தேட? 

நாசக்கார விபத்தொன்றால் 
பேசும்திறன் பெரிதும் இழந்த 
ஏழாம் வகுப்புத் தோழியவளை 
ஏளனம் செய்த நாளையெண்ணி 
இன்றளவும் கலங்குகிறேன் 
இதயத்தினுள் புழுங்குகிறேன்! 
எத்தனைமுறை துடித்தாளோ 
இதயம் வெம்பி வெடித்தாளோ? 
மன்னிக்கவேண்டி மனுசெய்ய 
நான் தவறுணர்ந்த கதை சொல்ல 
எங்கவளைத் தேடுவேன்? 
இனும் எத்தனைநாள் வாடுவேன்? 

கல்லூரிக் காலமதில் 
பேருந்துப் பயணமொன்றில் 
ஜன்னலோர இருக்கைபெற 
சட்டையணியா அப்பெரியவரிடம் 
சண்டையிட்ட நாளையெண்ணி 
இப்போதும் தவிக்கிறேன் 
என் இறுமாப்பைச் சபிக்கிறேன்! 
கலங்கி நின்ற அவர் நினைவு 
என் கனவில் இன்றும் வருவதுண்டு! 
எனை மன்னிக்கவேண்டிக் கோர 
எங்கே அவரைத் தேட? 

வாலிப வாசல் தொட்டபின்பு 
வார்த்தைஜாலம் வளர்ந்தபின்பு 
சிற்சில உதடுகள் சிரிப்பதற்காய் 
பற்பல இதயங்கள் உடைத்ததற்கு 
இன்றும் உள்ளம் மருகுகிறேன்! 
குற்ற உணர்வால் குருகுகிறேன்! 
வருந்திய நபர்களைச் சந்தித்து 
என் வருத்தம் சொல்வது எப்போது? 
அதுவரை நெஞ்சில் அமைதியில்லை 
அகத்தின் வெப்பம் அணைவதில்லை! 

பட்டியல் இன்னும் முடியவில்லை! 
எழுத முனைந்தால் முடிவில்லை! 
முற்பொழுதெல்லாம் முறைகெட்டு 
தற்போது அழுது பயனில்லை! 

இங்கு சொல்ல முடிந்தவை சொற்பம் 
ஆனால் இன்னுமுள்ளது மிச்சம்! 
அவையனைத்தும் தவறின் உச்சம் 
உயிருள்ளவரை எனை உறுத்தும்! 

தவறுகள் தரணியில் இயல்பு 
அதை உணர்தல் அவரவர் பொறுப்பு! 
தவறுகள் தவிர்த்தல் மாண்பு! 
மனிதர்க்கு அதுவே மதிப்பு! 

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome