Sunday, December 30, 2018

எனதருமைக் கவிதைத் திருடர்களே

எனதருமைக் கவிதைத் திருடர்களே

எனதருமைக் கவிதைத் திருடர்களே! 

எப்படிப் போகிறது உங்கள் 
எழுத்துத் திருட்டு? 

திருடியவரை எல்லாம் திருப்திதானே? 
கடைசியாகக் களவாடிய 
கவிதைகள் எத்தனை? 

எப்படி இசைகிறது 
உங்கள் மனம் 
இந்த எச்சில் பிழைப்பிற்கு? 
எப்போது உணர்வீர்கள் இது 
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை? 

அது எப்படியது? 
நகலெடுத்துப் பதிந்த கவிதையை 
நான்குபேர் பாராட்டும்போது 
நாணமே இல்லாமல் 
நன்றி சொல்ல 
முடிகிறது உங்களால்? 

எண்ணங்களை உருக்கி 
எழுதுகோலில் இறக்கி 
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு 
எப்படி வலிக்கும் என 
என்றாவது எண்ணியதுண்டா? 

வாசிக்கும் இதயங்களை 
வார்த்தைகளால் வருடுபவனே 
கவிஞன்! 
வாசித்த கையோடு தன் 
வலைப்பூவில் சேர்ப்பவன் 
கயவன்! 

எண்ணத்தில் உதிப்பதை 
எழுத்தாக மாற்றும்வரைதான் 
அது எழுதுகோல்! 
பிறரது படைப்புகளைப் 
பிரதியெடுத்து எழுதினால் 
அது கன்னக்கோல்! 

பிறர் கற்பைத் திருடுவதும் 
கற்பனையைத் திருடுவதும் 
வேறல்ல ஒன்றுதான்! 
கவிதையோடு சேர்த்து எங்கள் 
கட்டை விரலையும் 
திருடாதவரை நன்றுதான்! 

எங்கள் சிந்தனைகளைத்தானே 
உங்களால் திருட இயலும்? 
எங்கள் சிறகுகளை....? 
எங்கள் கற்பனைகளைத்தானே 
உங்களால் களவாட இயலும்? 
அவற்றின் கருவறையை....? 

முகநூலும் முகம் சுளிக்கிறது 
முக்காடு போட்டு 
நீங்கள் செய்யும் 
இந்த முட்டாள்தனத்தால்! 
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது 
வக்கற்று நீங்கள் 
புரியும் இவ்வஞ்சகத்தால்! 

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு 
நான் கடைசியாகச் சொல்ல 
விரும்புவது இதுதான்!... 

சொற்ப வரிகளாகினும் 
சொந்தமாய் எழுதுங்கள்! 
அமுதமேயானாலும் 
அடுத்தவர் படைப்பைத் 
திருடாதீர்கள்!

No comments:

Post a Comment

Comments are always welcome