எங்கே ஏரிகள்?

சேரிகள் காணாமல் போனால்
சேர்ந்து போற்றலாம் சமத்துவத்தை!
ஏரிகள் காணாமல் போனால்
என்னவென்பது நம் மடத்தனத்தை?
இன்று சீரான மாரியுமில்லை
சிதையாத ஏரியுமில்லை!
ஏரிகள்மீது ஏறிநின்றபடி இங்கு
எட்டிப் பார்க்கின்றன பல கட்டிடங்கள்!
மூட்டை மூட்டையாய் பணமிருந்தும்
சிலர் மூளைக்குள்ளே வெற்றிடங்கள்!
ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின்மேல்
அடுக்குமாடிக் குடியிருப்புகள்!
அடைமழைக் காலங்களில்
அழுகை அச்சம் பரிதவிப்புகள்!
மழைநீர் தேங்க வேண்டிய ஏரிகள்
இன்று மனைகளைத் தாங்கியபடி!
இருப்பிடம் தொலைத்த நீர்நிலைகளோ
தன் இறுதிப் பயணத்தில் ஏங்கியபடி!
அரசியல் கலந்தபின்புதான்
அழகான கூவம் சாக்கடையானது!
அறமது தொலைந்தபின்புதான்
சதுப்பு நிலங்களும் சாலைகளானது!
அரங்கேறிய அவலங்களில்
அனைவர்க்கும் பங்குண்டு!
இயற்கைக்கு இடர் செய்தால்
இரு மடங்காய் பலனுண்டு!
விளிம்பு நிலையிலாவது
விழித்துக்கொள்வோம்!
குளம் குட்டைகளில் குடியேறுவதை
இனியாவது நிறுத்திக்கொள்வோம்!
நீர்நிலைகள் மீட்டெடுப்போம்!
சீரழிவை நாம் தடுப்போம்!
- நிலவை பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome