Sunday, December 30, 2018

ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

ஒரு கைதியின் கடைசிக் கவிதை!
தொட்டில் கயிற்றில் 
தொடங்கிய வாழ்வு - நாளை 
தூக்குக் கயிற்றில் 
முடியக் காத்திருக்கிறது! 

அன்னையின் வயிற்றில் 
அரும்பிய இவ்வுயிர் - நாளை 
அரசாங்கக் கயிற்றில் 
அடங்கப் போகிறது! 

வாஞ்சையோடு தொடங்கிய 
வாழ்க்கைப் பயணத்தை 
சுருக்குக் கயிறொன்று சுருக்கமாக 
முடித்து வைக்கப் போகிறது! 

முடிச்சிட்ட கயிறொன்று 
என் மூச்சை நிறுத்தக் 
காத்திருக்கிறது! 

பாவிகள் என்போல் பலரை 
அந்தப் பாசக் கயிறு 
பார்த்திருக்கிறது! 

தாங்கள் கலங்கப்பட்டதாகக் 
கவலைப்பட்டுக்கொண்டன காகிதங்கள் 
என் கருணை மனுக்களைச் 
சுமந்த தருணங்களில்! 

தாங்கள் சபிக்கப்பட்டதாகச் 
சங்கடப்பட்டுக்கொண்டன மரங்கள்! 
என் சவப்பெட்டிக்காக வெட்டப்பட்டபோது! 

மனசாட்சி எனைப் பாதி கொன்றது! 
மரணபயம் வந்து மீதி கொன்றது! 
ஆக, மரக்கட்டையொன்றுக்கு 
நாளை மரணதண்டனை! 

ஒருவன் எப்படி வாழக்கூடாது 
என்பதை சிறைச்சாலை 
எனக்கு உணர்த்தியது! 

ஒருவன் எப்படி சாகக்கூடாது 
என்பதை என் மரணம் 
மற்றவர்க்கு உணர்த்தும்! 

காக்கிச்சட்டை ஒன்று வந்து 
என் கடைசி ஆசையைக் கேட்டது! 

சற்று நேரம் மௌனித்துப் 
பின் சலனமின்றி மொழிந்தேன் 

இனிமேலாவது உங்களது 
தண்டனைகளின் நோக்கம் 
குற்றங்களை மட்டும் 
ஒழிப்பதாக இருக்கட்டும்! 
குற்றவாளிகளை அல்ல! 

ஏனெனில் இங்கு 
திருந்தி வாழத் 
திட்டமிடும் பலர்க்கும் 
சவக்குழியில் மட்டுமே 
சந்தர்பம் தரப்படுகிறது! 

அலட்சியமாய்ப் பார்த்தது 
அந்த ஆறடிக் காக்கிச் சட்டை! 

என் கருணை மனுவிற்கு 
நேர்ந்த கதிதான் 
என் கடைசி ஆசைக்கும் 
என்று சொல்லாமல் சொல்லியது 
அந்தப் பார்வை!

No comments:

Post a Comment

Comments are always welcome