Sunday, December 30, 2018

ஆயிரத்தில் ஒன்று

ஆயிரத்தில் ஒன்று
தூண்டில் போடுவது 
மீன்களைப் பிடிக்கத்தானே? 
ஆனால் இங்கு மீன்களே 
அல்லவா தூண்டில் போடுகின்றன! 

வானவில்லில் கருப்பு நிறம் 
இல்லாததன் காரணம் 
உன் புருவம் பார்த்தவுடன் 
புரிந்து போனது எனக்கு! 

உன் பார்வைகளைப் 
பத்திரப்படுத்திக்கொள் கண்ணே! 
மாற்று வழி மின்சாரத்திற்காய் 
மனிதக் கூட்டம் 
அலையும் காலமிது! 

இதோ மதுவை ஒழிக்க 
மகத்தானதொரு திட்டம்! 
மதுக்கடை வாசலெங்கும் 
உன் மலர்கண்கள் 
வரைந்து வைத்தால் 
வாயிலிலே போதை இருக்க 
வாய்வழி பருக மது எதற்கு? 
என வாசலோடு திரும்பிவிடும் 
குடிப்பதற்கு வரும் கூட்டம்! 

நீ கண்ணுறங்காத நாட்களில் 
இரவுகள் இரட்சிக்கப்படுகின்றன! 

நீ தன் மீதுதான் 
கண் விழிப்பாய் என 
உன் படுக்கையறைப் பொருட்கள் 
பந்தயம் கட்டிக்கொள்கின்றன தங்களுக்குள்! 

நீ முகம் கழுவும் பொழுதிற்காய் 
தண்ணீருமல்லவா தவமிருக்கிறது! 

நீ கண்தானத்திற்காக விண்ணப்பித்ததிலிருந்து 
குருடனாய்ப் போகவேண்டி 
குலதெய்வத்திடம் முறையிடுகிறேன்! 

உன் புருவங்களுக்கு மத்தியில் 
புகலிடம் பெறவேண்டி 
குதூகலமாய்க் காத்திருக்கிறது 
குங்குமம்! 

சூரியனும் குளிர்கண்ணாடி அணிகிறது! 
சுடர்விடும் உன் 
கண்ணொளி கண்டு! 

உன் கைக்குட்டைக்குத்தான் 
எத்தனை கர்வம்? 
உன் கண்ணீர் 
தாங்கும் தருணங்களில்? 

உன் ஒவ்வொரு 
கண் சிமிட்டலிலும் 
ஓராயிரம் கவிதைகள் பிறக்கின்றன! 

இக்கவிதை அந்த 
ஆயிரத்தில் ஒன்று!

No comments:

Post a Comment

Comments are always welcome